Thursday Dec 19, 2024

இடும்பாவனம் சற்குணநாதேஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்

முகவரி

அருள்மிகு சற்குணநாதர் திருக்கோயில் இடும்பாவனம் – 614 703 திருத்துறைப்பூண்டி தாலுகா, திருவாரூர் மாவட்டம். போன்: +91- 4369 – 240 349, 240 200.

இறைவன்

இறைவன்: சற்குணநாதர் இறைவி: மங்களவள்ளி

அறிமுகம்

இடும்பாவனம் சற்குணேசுவரர் கோயில் திருஞானசம்பந்தரால் தேவாரம் பாடல் பெற்ற சிவாலயமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 108ஆவது சிவத்தலமாகும். இந்த சிவாலயம் தமிழ்நாடு மாநிலத்தில் திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி வட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தின் இறைவன் சற்குணநாதர், இறைவி மங்களநாயகி. இத்தலத்தில் இடும்பன் வழிபட்டான் என்பதும் இடும்பனின் சகோதரி இடும்பையை வீமன் மணம் புரிந்தான் என்பதும் தொன்நம்பிக்கைகள். அகத்தியர் இறைவனின் திருமணக்காட்சி பெற்ற தலங்களில் ஒன்று. பிதுர்முக்தித் தலம்.

புராண முக்கியத்துவம்

முன்னொரு காலத்தில் பிரம்மனுக்கு ஏற்பட்ட சாபத்தினால் அவரது சத்வ குணம் குறைந்தது. இதனால் வருந்திய பிரம்மா பூமியில் பல சிவத்தலங்களுக்கு சென்று தன் குறை நீங்கி சாத்வீக குணம் ஏற்பட வழிபாடு செய்தார். இவரது கவலையை போக்க இறைவன் திருவுளம் கொண்டு இத்தலத்தில் பார்வதி சமேதராக விநாயகர், முருகப்பெருமானுடன் தோன்றி பிரம்மனின் குறை போக்கி அருள்புரிந்தார். எனவே இத்தல இறைவன் சத்குணநாதர் ஆனார். பெரும் மகிழ்ச்சியடைந்த பிரம்மா கோயில் எதிரில் பிரம்ம தீர்த்தம் உண்டாக்கி, வைகாசி விசாகத்தில் பிரமோற்சவம் நடக்க ஏற்பாடு செய்தார். 3 நிலை ராஜகோபுரத்துடன் மூலவர் கிழக்கு நோக்கி சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். உள்பிரகாரத்தில் விநாயகர், முருகன், சூரியன், அகத்தியர், இடும்பை, சனிபகவான், கஜலட்சுமி, பைரவர், சந்திரன், லிங்கோத்பவர், துர்க்கை, நடராஜர் ஆகிய சன்னதிகள் உள்ளன. இத்தல விநாயகர் வெள்ளை விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.

நம்பிக்கைகள்

திருமணத்தடை நீங்கவும், எதிரிகளை வெல்லவும், எமபயம் நீங்கவும் பிரார்த்தனை செய்கின்றனர்.

சிறப்பு அம்சங்கள்

இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் இது 171 வது தேவாரத்தலம் ஆகும். இடும்பன் என்ற அரக்கன் தனது பிறவிப்பிணி நீங்க இத்தலத்தில் நீராடி இறைவனை வழிபாடு செய்தான். இதனால் இவனது சகல பாவமும் நீங்கி இத்தலத்தில் இடும்பையை திருமணம் செய்து கொண்டதால் இத்தலம் இடும்பாவனம் ஆனது. ஒரு முறை திருஞான சம்பந்தர் வேதாரண்யத்திலிருந்து மதுரை வரும்போது இத்தலத்திற்கு வந்தார். அச்சமயம் அவரது கண்களுக்கு இத்தலத்திலுள்ள மணல் எல்லாம் சிவலிங்கமாக தெரிந்தது. எனவே அவர் பயந்து, காலால் நடக்காமல் கால்களை உயரே தூக்கியபடி கைகளால் நடந்து வந்தார் என தலவரலாறு கூறுகிறது. அகத்தியருக்கு சிவன் திருமண காட்சி காட்டிய தலங்களில் இதுவும் ஒன்று. எனவே மூலவருக்கு பின்னால் சிவன் பார்வதி திருமணக்கோலம் உள்ளது. அகத்தியர் இத்தலத்தில் வாழ்ந்த காலத்தில் பாவங்களால் அரக்கர் வடிவம் பெற்ற தேவசருமன் என்ற அந்தணனுக்கும் அவன் மனைவிக்கும் தன் கமண்டல நீரை தெளித்து, சற்குணநாதரை வழிபடச் செய்து மோட்சமளித்தார். குணபரன் என்பவன் தன் தந்தையின் அஸ்தியை இத்தலத்திற்கு கொண்டு வரும்போது தன் தந்தையின் உருவம் தோன்றி மைந்தனை வாழ்த்தி முக்தி பெற்றது. எனவே இத்தலம் பிதுர் முக்தி தலங்களில் முக்கியமானதாக கருதப்படுகிறது. திருக்கடையூரில் மார்க்கண்டேயன் மீது பாசக்கயிறு வீசியதால் எமதர்மனுக்கு சாபம் ஏற்பட்டது. அந்த சாபமானது எமன் இத்தலத்தில் பூஜை செய்ததால் நீங்கியது. எமபயம் போக்கும் தலம். ஒரே கல்லால் ஆன கஜலட்சுமியும் தெட்சிணாமூர்த்தியும் சனீஸ்வரனும் இத்தலத்தின் சிறப்பாகும். போரில் ராவணனை வெல்ல ராமன் வழிபாடு செய்த தலங்களில் இதுவும் ஒன்று. வெள்ளை விநாயகர்: கடல்நுரையால் ஆன சித்திபுத்தியுடன் கூடிய வெள்ளைவிநாயகர் இத்தலத்தில் அருள்பாலிக்கிறார். இவருக்கு பால், பன்னீரால் அபிஷேகம் செய்து வழிபட்டால் வேண்டியது கிடைக்கும் என்பது ஐதீகம்.

திருவிழாக்கள்

வைகாசி விசாகம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அத்துடன் சிவனுக்குரிய அனைத்து விழாக்களும் கொண்டாடப்படுகிறது.

காலம்

1000-2000 வருடங்களுக்கு முன்

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

இடும்பாவனம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருவாரூர்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சிராப்பள்ளி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top