Saturday Nov 16, 2024

இடுகம்பாளையம் ஜெயமங்கள ஆஞ்சநேயர் கோயில், கோயம்புத்தூர்

முகவரி :

இடுகம்பாளையம் ஜெயமங்கள ஆஞ்சநேயர் கோயில்,

இடுகம்பாளையம்,

கோயம்புத்தூர் மாவட்டம் – 614301.

இறைவன்:

ஜெயமங்கள ஆஞ்சநேயர்

அறிமுகம்:

விஜயநகர பேரரசர் கிருஷ்ண தேவராயருக்கு ராஜகுருவாக திகழ்ந்தவர், வியாசராஜர். மாத்வ குருமார்களில் ஒருவராகவும், ஸ்ரீவியாசராஜ மடத்தின் பீடாதிபதியாகவும் விளங்கிய இவர், அனுமன் பாதம்பட்டதாக அறியப்பட்ட 700-க்கும் மேற்பட்ட இடங்களில் அனுமன் சிலையை பிரதிஷ்டை செய்தவர். அப்படி அவர் பிரதிஷ்டை செய்த தலங்களில் ஒன்றுதான் இடுகம்பாளையம் ஆஞ்சநேயர் ஆலயம். இந்தக் கோயிலிலைச் சுற்றி ஏழு தீர்த்தங்கள் அமைந்துள்ளன. இங்குள்ள ஆஞ்சநேயர் சுயம்பு பாறையில் ஆறு அடி உயரமுடையவராக உள்ளார். இந்த சுயம்புப் பாறை எட்டடி உயரமுடையது. இங்குள்ள ஆஞ்சநேயர் 5 அடி அகலமுடையவர். கோயம்புத்தூரில் இருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இடுகம்பாளையம். கோயம்புத்தூரில் இருந்து அன்னூர் வந்து, அங்கிருந்தும் இடுகம்பாளையம் செல்லலாம்.

புராண முக்கியத்துவம் :

 வியாசராஜர், தற்போது ஆலயம் இருக்கும் இடத்தில் ஒரு பாறையின் மீது அமர்ந்து தியானம் செய்தார். அப்போது அவருக்கு பாறையின் மீது ஆஞ்சநேயர் தியானம் செய்வது போன்ற காட்சி தென்பட்டது. அதன் உண்மை நிலையை அறிய நிஷ்டையில் ஆழ்ந்தார். அப்போது அவருக்கு சில காட்சிகள் தோன்றின. ராமனுக்கும் ராவணனுக்குமான போர் முடிந்தது. ராமன் பெற்ற வெற்றியை, அசோகவனத்தில் இருக்கும் சீதையிடம் சொல்வதற்காக பறந்து சென்றார் அனுமன். அங்கு சீதையைக் கண்டு வணங்கியவர், “அன்னையே! உங்களை நானே அழைத்துச் சென்று விடுவேன். அது ராமபிரானின் புகழுக்கு இழுக்காகும். எனவே ராமர் வெற்றி பெற்ற தகவலைச் சொல்லவே நான் வந்தேன்” என்றார்.

அப்போது சீதையின் நெற்றி வகிட்டில் செந்தூரம் அணிந்திருப்பதைப் பார்த்த அனுமன், அதுபற்றி சீதையிடம் கேட்டார். அதற்கு சீதை, ராவணனுடனான யுத்தத்தில் ராமனுக்கு வெற்றி கிடைக்க வேண்டி செந்தூரம் அணிந்ததாக கூறினாள். அன்னை நெற்றியில் சிறிதளவு செந்தூரம் இட்டதற்கே இத்தனை பெரிய வெற்றி கிடைத்தது என்றால், உடல் முழுவதும் செந்தூரம் பூசிக்கொண்டால் என்னுடைய தெய்வம் ராமபிரானுக்கு எவ்வளவு வெற்றி கிடைக்கும்’ என்று எண்ணிய ஆஞ்சநேயர் தன்னுடைய உடல் முழுவதும் செந்தூரம் பூசிக்கொண்டார்.

வெற்றிக்குப் பின் ராமர், சீதை மற்றும் லட்சுமணனுடன் அயோத்திக்குத் திரும்பினார். வழியில் 7 தீர்த்தங்கள் கொண்ட இந்த இடத்தில் சிவபூஜை செய்ய நினைத்தார். அதற்கு வழிவகை செய்வது போல், அங்கு ஒரு வில்வ மரத்தடியில் சுயம்பு சிவலிங்கம் காணப்பட்டது. அதன் எதிரில் திருநந்தி தேவரும் தென்பட்டார். இதுவே உகந்த இடம் என்று நினைத்த ராமர், சிவ பூஜை செய்தார். அனுமனும் சற்று தூரத்தில் இருந்த பாறையில் ராம ஜெபம் உச்சரித்தபடியே காவலுக்கு நின்றார். இந்த காட்சிகள் அனைத்தும் வியாசராஜர் தியானத்தில் வந்து போனது. இதையடுத்து அனுமனின் உருவம் தென்பட்ட பாறையின் மீது அனுமன் சிலையை பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.

இந்த அனுமன் 5 அடி உயரத்தில் பார்ப்பவர்களை கவர்ந்திழுக்கும் வகையில் காட்சி தருகிறார். நேர் பார்வையும், இடது கையில் சவுகந்தி மலரை வைத்தபடியும், வலது கையால் ஆசீர்வதிக்கும் தோரணையிலும் அருள் புரிகிறார். அவரது தலைக்கு பின்புறமாக வளைந்து நிற்கும் வாலில் மணி கட்டப்பட்டுள்ளது. அனுமன் அருளும் இந்த ஆலயம், ‘இடுகம்பாளையம் அனுமந்தராயர் கோவில்’ என்றும், ‘ஜயமங்கள ஆஞ்சநேயர் கோவில்’ என்றும் அழைக்கப்படுகிறது. ஆலயம் குறுகலான நிலப்பரப்பில் அமைந்திருப்பதால், ‘இடுகம்’ என்ற பெயரில் இந்தத் திருத்தலம் பெயர் பெற்றுள்ளது.

ஆலயத்தின் தென்புறத்தில் விநாயகரும், கன்னி மூலையில் ராமர் பூசித்த ராமலிங்கேஸ்வரரும், அவருக்கு எதிரில் திருநந்தி தேவரும், வடக்கில் செல்வமுத்துக்குமரனும், அவருக்கு அருகில் பர்வதவர்தனி அம்மனும் சன்னிதி கொண்டிருக்கிறார்கள். பிரதான தெய்வமாக ஜெயமங்கள ஆஞ்சநேயர் விளங்குகிறார். இவர் நவக்கிரக தோஷங்களைப் போக்குவதோடு, மும்மூர்த்திகளின் அனுக்கிரகமும் கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும்.

குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் வேண்டும் பக்தர்கள், ஆஞ்சநேயரை மனதார பிரார்த்திக்கின்றனர். வேண்டுதல் நிறைவேறியவர்கள், தங்களது வீட்டில் தினமும் ஒரு கைப்பிடி அரிசியை தனியாக எடுத்து வைக்கிறார்கள். இப்படி 30 நாட்கள் சேர்த்த அரிசியை கோவிலில் சமர்ப்பிக்கிறார்கள். இப்படி பக்தர்கள் பலரும் சேர்ப்பிக்கும் அரிசியில் அன்ன தானம் வழங்கப்படுகிறது.

ஆறு கால பூஜைகள் நடைபெறும் இந்த ஆலயம், தினமும் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை தொடர்ச்சியாக திறந்திருக்கும்.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

கோயம்புத்தூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

கோயம்புத்தூர்

அருகிலுள்ள விமான நிலையம்

இடுகம்பாளையம்

Location on Map

p>

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top