Saturday Nov 23, 2024

ஆழ்வார் திருநகரி ஆதிநாதன் (ஆதிப்பிரான்) பெருமாள் திருக்கோயில், தூத்துக்குடி

முகவரி

அருள்மிகு ஆதிநாதன் (ஆதிப்பிரான்) பெருமாள் திருக்கோயில் ஆழ்வார் திருநகரி, தூத்துக்குடி மாவட்டம் – 628 612, மைதிலிசீனிவாசன் : 04639-273845 சுந்தரராஜன் : 9443408285

இறைவன்

இறைவன்:ஆதிநாதன், இறைவி: ஆதிநாதவள்ளி

அறிமுகம்

ஆழ்வார்திருநகரி (திருக்குருகூர்) ஆதிநாதன் திருக்கோயில் 108 வைணவத் திருக்கோயில்களில் ஒன்றாகும். இத்தலம் நம்மாழ்வார் அவதாரத் தலம் ஆகும். தூத்துக்குடி மாவட்டத்தின் ஆழ்வார் திருநகரியில் அமைந்துள்ளது. நவதிருப்பதிகளில் குரு ஸ்தலமாக விளங்கும் இத்தலம் பிரம்மாவுக்கு குருவாகப் பெருமாள் வந்த திருத்தலம் என்பதால் குருகூர் எனப்படுகின்றது. ஆதியிலேயே தோன்றிய நாதன் என்பதால் பெருமாள் ஆதிநாதன் என திருப்பெயர் பெற்றார். இத்தலம் நம்மாழ்வார் அவதரித்த தலமாகும். இதனால் இத்தலம் ஆழ்வார் திருநகரி என்றழைக்கப்பட்டது. நவதிருப்பதிகளுள் குருவுக்குரிய (வியாழன்) தலமாகும். பொதுவாக ஆழ்வார்கள் பெருமாளையே மங்களாசாசனம் செய்துள்ளனர். ஆனால், மதுரகவியாழ்வார் இத்தலத்தில் தன் குருவான நம்மாழ்வாரை மங்களாசாசனம் செய்துள்ளார். நம்மாழ்வாருக்கு ஆதிநாதப் பெருமாள் குருவாக அருள்பாலிக்கிறார். தாமிரபரணி ஆற்றங்கரையில் கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் மூன்று பிரகாரங்களுடன் கோயில் அமைந்துள்ளது. பிரகாரத்தில் ராமர், வேணுகோபாலன், கருடன், திருப்புளியாழ்வார், நரசிம்மர், வராகப்பெருமாள், திருவேங்கடமுடையான், நாத முனிகள் ஆகியோருக்கு தனி சன்னதி உள்ளது.

புராண முக்கியத்துவம்

காரியார் என்னும் குறுநில மன்னருக்கும், உடையநங்கைக்கும் திருமகனாக தோன்றினார் சடகோபர். இவர் பிறந்ததிலிருந்தே கண்மூடிய நிலையிலும், அழாமலும், சாப்பிடாமலும் இருந்ததை பார்த்த பெற்றோர் மிகவும் கவலையடைந்தனர். சடகோபரை கோயிலுக்கு அழைத்து வந்தனர். சடகோபர் ஓடிச்சென்று அங்கு இருந்த புளியமரத்தடியில் இருந்த பொந்தில் அமர்ந்து கொண்டார். அதன்பிறகு அவரை அசைக்க முடியவில்லை. 16 ஆண்டுகள் உணவில்லாமல் இருந்தார். ஆனால், உடல் வளர்ச்சி குன்றவில்லை. அப்போது வடநாட்டு யாத்திரைக்கு சென்றிருந்தார் மதுரகவியாழ்வார். செவிக்கு இனிமையான செஞ்சொற்களால் பாடுவதில் வல்லவர் என்பதால் மதுரகவிஆழ்வார் என புகழப்பட்டார். அயோத்தியில் இருந்தபடியே தென் திசை நோக்கி வணங்கும் போது அத்திசையில் ஒரு பேரொளியை கண்டார். அந்த ஒளியை நோக்கி நடந்து வந்த மதுரகவியாழ்வார், அந்த ஒளி புளியமரத்தடிக்கு வந்ததும் மறைந்து விட்டது . அந்த மரத்தில் ஒரு மகா ஞானி இருப்பதைக் கண்டார் மதுரகவியாழ்வார். ஞான முத்திரையுடன் மோன நிலையில் இருந்த சடகோபரை எழுப்ப நினைத்து, அவர் அருகில் ஒரு கல்லை போட்டார். சடகோபர் கண்விழித்தார். “செத்தத்தின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தை தின்று எங்கே கிடக்கும் உயிரில்லாததான உடம்பில் ஆத்மா வந்து புகுந்து, எதனை அனுபவித்து எங்கே இருக்கும்?) என சடகோபரிடம் மதுரகவி ஆழ்வார் கேட்டார். அது வரை பேசாமலிருந்த சடகோபர் அத்தைத் தின்று அங்கே கிடக்கும் (அந்த உடலின் தொடர்பால் ஏற்படும் இன்ப துன்பங்களை அனுபவித்தபடி அங்கேயே இருக்கும்) என்றார். இந்நிகழ்ச்சியிலிருந்து சடகோபரை நம்மாழ்வார் என்ற பெயரில் மதுரகவி ஆழ்வார் அழைத்தார். நம்மாழ்வாரை மதுரகவி ஆழ்வார் தன் குருவாக ஏற்றுக்கொண்டார். இதனாலேயே இத்தலம் நவதிருப்பதியில் குரு ஸ்தலமாக விளங்குகிறது. இங்கு பெருமாளை விட நம்மாழ்வாருக்கு தான் சிறப்பு. நம்மாழ்வார் தங்கியிருந்த புளியமரம் இங்கு மிகவும் புனிதமாக கருதப்படுகிறது. இம்மரம் ஏழு கிளைகளோடு உள்ளது. இரவில் உறங்காத காரணத்தினால் இம்மரம் உறங்காப்புளி’ என்றழைக்கப்படுகிறது. நம்மாழ்வார் தனது 35ம் வயதில் மாசி மாதத்தில் பூத உடல் நீத்தார். இம்மரத்தின் அடியில் தான் நம்மாழ்வாரின் பூத உடல் புதைக்கப்பட்டு, கோயில் கட்டப்பட்டது. மதுரகவி ஆழ்வார் தனது குருவான நம்மாழ்வாரின் பெருமைகளையும், பிரபந்தங்களையும் உலகெங்கும் பரப்பி பெருமையடைந்தார்.

நம்பிக்கைகள்

நவக்கிரக தோஷங்கள் நீங்க இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள். மூலவரின் பாதங்கள் பூமிக்குள் இருப்பதாக ஐதீகம்.

சிறப்பு அம்சங்கள்

இங்கு பெருமாள் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மூலவரின் பாதங்கள் பூமிக்குள் இருப்பதாக ஐதீகம். ஸ்ரீரங்கத்தை போலவே அரையர் சேவை நடக்கிறது. இங்கு திருமஞ்சனத்தின் போது பிரபந்தங்களை தாளம் போட்டுக்கொண்டே சொல்லும் பழக்கம் உள்ளது. ஐயாயிரம் வருடம் பழமையான நம்மாழ்வார் வீற்றிருந்த புளியமரம் இன்றும் காட்சியளிக்கிறது. கடும் தவம் புரிந்த முனிவர்களுக்கு பெருமாள் பூமி தேவியுடன் வராக அவதாரத்தில் அருள்பாலிக்கிறார். இத்திருக்கோயில் மணவாள மாமுனிகளால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்திரன் தாய், தந்தையரை மதிக்காமால் சாபம் பெற்று இங்கு வந்து தான் சாபவிமோசனம் அடைகிறான். லட்சுமணன் இங்கு புளியமரமாக இருப்பதாகவும், பெருமாள் பிரம்மச்சரிய யோகத்தில் இருப்பதாகவும் ஐதீகம். இருந்தும் லட்சுமி பெருமாளை அடைய இங்கு தவமிருந்ததால், பிரம்மச்சாரியாக இருந்த பெருமாள் லட்சுமியை மகிழ மாலையாக தன் கழுத்தில் அணிந்துகொண்டதாக புராணம். இத்தல பெருமாளை பிரம்மா, சங்கன் முனி, மதுரகவியாழ்வார், நம்மாழ்வார் ஆகியோர் வழிபட்டுள்ளனர். தாந்தன் என்ற தாழ்த்தப்பட்ட சமுதாய பக்தனுக்கு மோட்சம் தந்ததால் இத்தலத்திற்கு தாந்த ஷத்திரம்’ என்றும் பெயர்.பாண்டி நாட்டு நவதிருப்பதிகளுள் இத்தலம் குருவுக்குரிய தலமாகவும், ஒன்பதாவது தலமாகவும் அமைந்துள்ளது. வைணவர்கள் ஷ்ரீரங்கத்தை பரமபதத்தின் வாசல் எனவும், ஆழ்வார் திருநகரியை பரமபதத்தின் எல்லை எனவும் கூறுவார்கள். மூலவரின் சன்னதிக்கு எதிர்புறமுள்ள கருட மண்டபத்தை மணவாள மாமுனிகள் நிறுவினார். பெருமாளின் விமானத்தை விட நம்மாழ்வாரின் விமானம் சற்று பெரியது. மரத்தால் செய்யப்பட்டதைப்போலவே கல்லால் ஆன நாதஸ்வரம் ஒரு அடிநீளத்தில் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. நவதிருப்பதிகள் என்றழைக்கப்படும் ஒன்பது வைணவ சேத்திரங்களும், நவகிரகங்களுடன் தொடர்புடையவை எனக்கருதி வழிபடப்பட்டு வருகிறது. ஒன்பது திருப்பதிகளிலும் உள்ள பெருமாளே நவகிரகங்களாகக் கருதப்பட்டு வழிபடப்படுகிறது. அதன்படி 1. சூரியன் : ஸ்ரீ வைகுண்டம் 2. சந்திரன் : வரகுணமங்கை (நத்தம்) 3. செவ்வாய் : திருக்கோளுர் 4. புதன் : திருப்புளியங்குடி 5. குரு : ஆழ்வார்திருநகரி 6. சுக்ரன் : தென்திருப்பேரை 7. சனி : பெருங்குளம் 8. ராகு : 1. இரட்டைத் திருப்பதி (தொலைவில்லிமங்கலம்) 9. கேது : 2 . இரட்டைத் திருப்பதி இங்கு பெருமாள் சந்திர விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார்.

திருவிழாக்கள்

இத்தலத்தில் வைகாசி மாத கருட சேவையில் (விசாகத்தன்று) நம்மாழ்வார் திருத்தேரும், தீர்த்தவாரியும், ஐந்தாம் நாளன்று நவதிருப்பதிகளின் பெருமாள்கள் இங்குகூடி நம்மாழ்வாரை ஆசீர்வதிக்கும் நிகழ்ச்சியும் சாலசிறப்பாக இருக்கும்.

காலம்

1000 -2000ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

ஆழ்வார் திருநகரி

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருநெல்வேலி

அருகிலுள்ள விமான நிலையம்

மதுரை

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top