ஆலமன்குறிச்சி கைலாசநாதர் சிவன் கோயில்
முகவரி
ஆலமன்குறிச்சி கைலாசநாதர் சிவன் கோயில், கும்பகோணம் வட்டம், தஞ்சை மாவட்டம் – 612 501.
இறைவன்
இறைவன்: கைலாசநாதர் இறைவி: கமலாம்பிகை
அறிமுகம்
கும்பகோணம் – ஜெயம்கொண்டம் சாலையில் ஆறு கிமி தூரத்தில் உள்ள கடிச்சம்பாடியில் இருந்து மேற்கில் இரண்டு கிமி தூரம் சென்றால் ஆலமன்குறிச்சியை அடையலாம். ஆலமரங்கள் நிறைந்த பகுதி என்பதால் ஆலமரகுறிச்சி ஆனது. கொள்ளிடம் ஆற்றின் இருமருங்கிலும் பல பழமை வாய்ந்த சிவாலயங்கள் உள்ளன. இந்த ஆலமன்குறிச்சி சிவாலயமும் சோழர் காலத்தில் கட்டப்பட்ட பெருமை வாய்ந்தது. கிழக்கு நோக்கிய சிவாலயம் இறைவன் கிழக்கும் இறைவி தெற்கு நோக்கியும் உள்ளனர். அதிட்டானம் முதல் விமானம் வரை செங்கல் தளியாக கட்டப்பட்டுள்ளன. இரு கருவறைகளையும் ஒரு கூம்பு வடிவ மண்டபம் இணைக்கிறது. இறைவன் கருவறை வாயிலில் விநாயகர் முருகன் உள்ளனர் விநாயகர் நின்ற கோலத்தில் சக்தி விநாயகர் எனும் பெயரில் உள்ளார். கருவறை கோட்டத்தில் தென்முகன், லிங்கோத்பவர் துர்க்கை உள்ளனர். வடகிழக்கில் இல்லாமல் துர்க்கை எதிரிலேயே நவகிரகங்கள் உள்ளன. சமீபத்திய பணிகளாக இருக்கலாம். கோயில் வளாகம், மதில் விமானம் அனைத்தும் சிதைவுற ஆரம்பிக்கிறது. . கோயில் சரியான பூசையின்றி உள்ளது, விளக்கேற்ற எண்ணையில் இருந்து வஸ்திரம் வரை எதுவும் இல்லை. உள்ளூர் அன்பர் சுதாகர் என்பவர் காலை மாலை விளக்கேற்றுகிறார். அப்போ பூஜை? . சிறப்பு நாட்களில் மட்டும். பிரகாரத்தில் உள்ளது இரட்டை விநாயகர் சன்னதி. இவர்கள் இருவரும் வரப்ரசாதிகள் . கேட்டவரம் கேட்டபடி தருவார் என்கிறார் கோயில் பராமரிக்கும் அன்பர் சுதாகர். அருகில் வள்ளி தெய்வானை சமேத முருகன் சன்னதி. இறைவன் மண்டபத்தின் வெளியில் இரு லிங்க பாணங்கள் உள்ளன. அருகில் சூரியன் சிலையும் வெயிலில் கிடந்தது காய்கிறது. வடகிழக்கில் ஒரு நாகர் சிலையும் எதிரில் நந்தி ஒன்றையும் வைத்துள்ளனர். இறைவனுக்கு எதிரில் மண்டபத்தின் வெளியில் ஒரு தகர கொட்டகையில் ஒரு நந்தி இறைவனை அல்லும் பகலும் நோக்கியவாறு உள்ளது, என்று இந்த மக்களுக்கு இந்து என்ற உணர்வு வருமென!! என்று இந்த மக்களுக்கு இறைபக்தி என்பது அன்றாட வாழ்வின் அங்கம் என புரியும் என காத்திருக்கிறது. கட்டணக் கோயில்களில் வரிசையில் நிற்பதையே பெருமையாக செல்பி போடும் நண்பர்களே, நீங்கள் அங்கே ஒரு நாள் செலவிடும் தொகை இங்கே ஒரு மாத செலவுக்கு ஆகும். நம்பிக்கையுடன் வாருங்கள் உங்களுக்கான வரங்கள் இங்கும் அளிக்கப்படும். # ”உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 – 2000
நிர்வகிக்கப்படுகிறது
–
அருகிலுள்ள பேருந்து நிலையம்
ஆலமன்குறிச்சி
அருகிலுள்ள இரயில் நிலையம்
கும்பகோணம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி