ஆற்காடு ஆனந்தீஸ்வரர் சிவன்கோயில், தஞ்சாவூர்
முகவரி :
ஆற்காடு ஆனந்தீஸ்வரர் சிவன்கோயில்,
ஆற்காடு, பூதலூர் வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம் – 613602.
இறைவன்:
ஆனந்தீஸ்வரர்
இறைவி:
ஆனந்தவல்லி
அறிமுகம்:
திருக்காட்டுப்பள்ளியில் இருந்து பூதலூர் செல்லும் சாலையில் உள்ள விண்ணமங்கலத்தில் இருந்து வலதுபுறம் செல்லும் சாலையில் மூன்று கிமீ சென்று வலது புறம் திரும்பினால் ஆற்காடு கிராமம் அடையலாம், ஊர் இரு பகுதியாக பிரிந்து புது ஆற்காடு பழைய ஆற்காடு என உள்ளது. பழைய ஆர்காடு என்னும் கிராமத்தில் உள்ள இந்த சிவாலயம் கோட்செங்சோழன் கட்டிய மாட கோவில்களில் இதுவும் ஒன்று என கூறப்படுகிறது. சேந்தன் என்ற மன்னன் சுமார் 2000 வருடங்களுக்கு முன் ஆட்சி செய்த சிறப்புடைய இவ்வூர், சேந்த மன்னனின் காலத்தில் யானை படை தளமாக இருந்துள்ளது. இங்கு கிழக்கு நோக்கிய சிவன்கோயில் பெரும் சிறப்புடன் விளங்கி வந்தது.
இறைவன் ஆனந்தீஸ்வரர் கிழக்கு நோக்கியும் அம்பிகை ஆனந்தவல்லி தெற்கு நோக்கியும் கருவறை கொண்டிருந்தனர். இங்குள்ள விஷ்ணு ஐந்து தலை நாகம் குடைபிடிக்க அமர்ந்த நிலையில் தனி சன்னதி கொண்டிருந்தாராம். கருவறை, அர்த்தமண்டபம் முகமண்டபம் என கருங்கல் வேலைப்பாடுகளுடன் கூடிய சோழர்கால சிவாலயம், விமானம் துவிதளமாக செங்கல் கொண்டு கட்டப்பட்டுள்ளது. இங்கே ஒரு விஜய நகரத்தவர் கல்வெட்டு ஒன்று படியெடுக்கப்பட்டு உள்ளது, 1776 ஆம் ஆண்டை சார்ந்தது,
பல சிறப்புகளை கொண்ட இந்த சிவாலயம் இன்று முற்றிலும் சிதிலமடைந்து முட்புதர்கள் மண்டி ஆட்கள் செல்ல முடியாத ஒர் நிலையில் உள்ளது…ஊர்மக்கள் விநாயகர் முருகன் இறைவன் பைரவர் நந்தி மற்றும் பல மூர்த்திகளை எடுத்து அருகில் ஒரு கொட்டகை போட்டு பராமரிக்கின்றனர். கோவிலின் இன்றைய நிலையை பார்த்ததுமே உலகையே ஆளும் ஈசனுக்கும் இப்படி ஒர் நிலையா என மனம் கனத்தது. புதிய கோயில்கள், வானுயர்ந்த சிலைகள், பல வண்ண விளக்கொளியில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என பக்தி திசை மாறி பயணிக்கிறது. மக்கள் கூட்டத்தில் சிவாலயத்தின் சிறப்பையும் ஈசனின் அற்புதங்களையும் எடுத்து சொல்லி பழம் பெரும் ஆலயங்களை காப்பாற்ற சைவ மடங்கள், உழவார பணி குழுக்களும், ஆன்மீக சொற்பொழிவாளர்களும், கீர்த்தனைகள் பாடுவோரும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
ஆற்காடு
அருகிலுள்ள இரயில் நிலையம்
தஞ்சாவூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி