Wednesday Dec 18, 2024

ஆரியங்காவு ஐயப்பன் திருக்கோயில், கேரளா

முகவரி

ஆரியங்காவு ஐயப்பன் திருக்கோயில், கொல்லம்-திருமங்கலம் சாலை, ஆரியங்காவு, கொல்லம் மாவட்டம், கேரளா – 691309

இறைவன்

இறைவன்: ஐயப்பன்

அறிமுகம்

ஸ்ரீ பரசுராமர் கிழக்கு மலை தொடர்ச்சியில் நான்கு இடங்களில் நான்கு தர்மசாஸ்தா கோவில்களை ஸ்தாபிதம் செய்தார். சாஸ்தாவின் நான்கு முக்கிய கோவில்களில் ஆரியங்காவு தர்மசாஸ்தா கோயிலும் ஒன்று. ஐயப்பனின் முக்கியமான கோவில்களுள் ஒன்று. இக்கோவில் கேரள மாநிலத்தில், கொல்லம் மாவட்டத்திலுள்ள ஆரியங்காவு எனும் சிற்றூரில் அமைந்துள்ளது. சபரிமலையில் பிரம்மச்சாரியாக உள்ள ஐயப்பன் இக்கோவிலில் புஷ்கலை என்னும் பெண்ணைத் திருமணம் செய்தவராகக் காட்சி தருகிறார். ஆர்யங்காவு கோயில், கேரளம் – தமிழ்நாடு எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது எனவே அம்பலத்தினுள் மலையாள ஆச்சாரங்களும், உற்சவத்தின்போது தமிழ் ஆச்சாரங்களும் கடைபிடிக்கப்படுகின்றன. சபரிமலையைப் போலவே கோயிலினுள் ஆண்கள் மட்டுமே நுழைய வேண்டும். பத்து முதல் ஐம்பது வயது வரை உள்ள பெண்கள் நுழையக் கூடாது. திருக்கல்யாண மண்டபம் கடைசி பாண்டியர்களின் இறுதியில் வடகரை ஆதிக்கத்திற்கு உட்பட்ட “சொக்கம்பட்டி ஜமீன்” சார்பில் ஆலய திருப்பணி நடைபெற்றதற்கான சான்றுகள் இங்கு காணப்படுகின்றன. இதனால் இதை திராவிட கட்டிடக் கலைப் பாணியில் கட்டப்பட்டது என்று கூறுவதும் உண்டு. கேரளக் கட்டுமான அமைப்புடன் அமைந்த இக்கோவில் கருவறையில், ஐயப்பன் வலது காலைக் கீழே ஊன்றியும், இடது காலைச் சிறிது உயர்த்தியும் வைத்து அமர்ந்த நிலையில் அரசர் தோற்றத்தில் இருக்கிறார். இவருக்கு வலது புறம் சிவபெருமான் லிங்க வடிவிலும், இடதுபுறம் புஷ்கலை நின்ற நிலையிலும் இருக்கின்றனர். இக்கோவில் வளாகத்தில், நாகராஜர், கணபதி, வலியக்கடுத்தா கருப்பசாமி, கருப்பாயி அம்மாள் ஆகியோரும் துணைக் கடவுள்களாக இருக்கின்றனர்.

புராண முக்கியத்துவம்

சபரிமலை ஐயப்பன் கோவிலைப் போன்று, இந்தக் கோவிலில் இருக்கும் ஐயப்பன் பிரம்மச்சாரியாக இல்லாமல், புஷ்கலையைத் திருமணம் செய்து குடும்பத்தவராகக் காட்சி தருகிறார். இங்கிருக்கும் ஐயப்பனுக்குத் திருமணம் நடந்தது பற்றி சுவையான கதை ஒன்று இருக்கிறது. மதுரையைச் சேர்ந்த சவுராஷ்டிரா வகுப்பினர், திருவிதாங்கூர் மகாராஜாவின் அரண்மனைக்குத் தேவையான துணிகளை நெசவு செய்து கொண்டு போய் விற்பனை செய்து வந்தனர். அப்படிச் சென்ற வணிகர்களில் ஒருவர், ஒரு முறை தனது மகள் புஷ்கலையையும் உடன் அழைத்துக் கொண்டு திருவிதாங்கூர் சென்றார். அவருக்கு மகள் புஷ்கலையைக் காட்டுப் பகுதிக்குள் அழைத்துச் செல்வது மிகவும் கடினாமக இருந்தது. அவர்கள் இருவரும் ஆரியங்காவு கணவாய்ப் பகுதிக்கு வந்து சேர்ந்தனர். புஷ்கலை அதற்குள்ளாகவே மிகவும் களைத்துப் போயிருந்தார். இனி அவளை திருவிதாங்கூருக்கு அழைத்துச் செல்ல முடியாது என்று நினைத்த அந்த வணிகர், அங்கிருந்த சாஸ்தா கோவிலின் தலைமை அர்ச்சகரைச் சந்தித்து, தான் திருவிதாங்கூர் சென்று திரும்பி வரும் வரை, தனது மகளைப் பாதுகாப்பாகப் பார்த்துக் கொள்ளும்படி சொல்லி ஒப்படைத்துச் சென்றார். சாஸ்தா கோவிலின் தலைமை அர்ச்சகரின் வீட்டில் தங்கிய புஷ்கலை, சாஸ்தா கோவிலுக்குத் தேவையான சில பணிகளைச் செய்து வந்தார். நாளடைவில், அவளது மனத்தில் அந்தக் கோவிலில் இருக்கும் சாஸ்தாவையேத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் மேலோங்கியது. இந்நிலையில், புஷ்கலையின் தந்தை திருவிதாங்கூர் சென்று துணிகளை விற்பனை செய்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தார். வரும் வழியில் அவரை, மதம் பிடித்த யானை ஒன்று விரட்டத் தொடங்கியது. அதனைக் கண்டு பயந்த அவர் வேகமாக ஓடத் தொடங்கினார். அப்போது அங்கு வந்த ஒரு இளைஞன், அந்த மத யானையை அடக்கி அவரைக் காப்பாற்றினான். தன்னைக் காப்பாற்றிய இளைஞனுக்கு நன்றி தெரிவித்த அவர், அந்த இளைஞனுக்கு என்ன வேண்டுமென்று கேட்டார். அந்த இளைஞன், ‘உங்கள் மகளை எனக்குத் திருமணம் செய்து தாருங்கள்’ என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து சென்று விட்டான். அதன் பிறகு, வணிகர் ஆரியங்காவு வந்து சேர்ந்தார். ஆரியங்காவிலுள்ள சாஸ்தா கோவிலுக்குச் சென்ற வணிகருக்கு, கோவில் கருவறையிலிருந்த சாஸ்தாவின் உருவம், காட்டில் மதயானையிடம் இருந்து தன்னைக் காப்பாற்றிய இளைஞரின் உருவமாகத் தெரிந்தது. தனது மகளைத் திருமணம் செய்து கொள்ள விரும்பியே சாஸ்தா, காட்டிற்குள் மதம் பிடித்த யானையைக் கொண்டு, நம்மை ஓடச் செய்து, காப்பாற்றியிருக்கிறார் என்பதைத் தெரிந்து கொண்டார். அதன் பிறகு வணிகர், அந்தக் கோவில் அர்ச்சகரிடம் காட்டில் நடந்த கதையைச் சொல்லித் தன் மகள் புஷ்கலையை சாஸ்தாவிற்குத் திருமணம் செய்து கொடுக்கப் போவதாகச் சொன்னார். அர்ச்சகரும், கோவில் உயர் அதிகாரிகளுக்கு அந்தத் தகவலைத் தெரிவித்து வரச் செய்தார். வணிகரும், தனது ஊரான மதுரையிலிருந்து தனது உறவினர்களை வரச் செய்தார். அதன் பிறகு, சாஸ்தாவிற்கும் புஷ்கலைக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, சாஸ்தாவான ஐயப்பன், புஷ்கலையை மனைவியாக ஏற்றுத் தன்னுடன் ஆட்கொண்டார் என்று இக்கோவிலில் ஐயப்பன், புஷ்கலை திருமணம் நடந்த கதை மரபு வழியாகச் சொல்லப்பட்டு வருகிறது.

நம்பிக்கைகள்

திருமணத்தடை இருப்பவர்கள், இங்கிருக்கும் சாஸ்தாவை வழிபட்டு வேண்டினால், அவர்களுக்குத் திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணம் நடை பெறும் என்பது இங்கு வந்து செல்லும் பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

சிறப்பு அம்சங்கள்

★ இத்தலம்,”மூர்த்தி”, “ஸ்தலம்”, “தீர்த்தம்’ என்ற மூவகையிலும் பெருமை வாய்ந்த திருக்கோவிலாகும். “மூர்த்தி” என்ற வகையில், ஒரு திருக்கோவிலின் மூலஸ்தானத்தில் ஸ்தாபிக்கப்படும் தெய்வ (பிராண) பிரதிஷ்டைகள் அதாவது மூல விக்கிரகங்கள் அந்த திருக்கோவிலின் ஸ்தல புராணத்தை விளக்கும் வகையில் அமையும். அந்த வகை பகவான் ஸ்ரீ தர்மசாஸ்தா “மதகஜ வாஹன ரூபனாக” அதாவது மதம் பிடித்த யானை அடக்கி, வேட ரூபத்தில் மாப்பிள்ளை கோலத்தில் ஸ்ரீ புஷ்கலா தேவியோடு இங்கு திருமண காட்சி தருகிறார். “ஸ்தலம்” என்ற வகையில் ஆரியன் திரிந்த காடு “ஆரியன்காவு” என்ற பெயர் பெற்ற ஸ்தலமாக இது விளங்குகின்றது. “தீர்த்தம்” என்ற வகையில் சாஸ்தா குடி கொண்டுள்ள குளத்துப்புழை,அச்சன்கோவில்,பாம்பை ஆகிய இடங்களில் புனிதமான நதிகள் இருப்பது போல ஆரியன்காவு திருக்கோவிலின் சன்னதியிலும் “கருப்பா நதி” சல சலத்து ஓடிக்கொண்டு இருக்கிறது. ★ சாஸ்தா கோவில்களில் இங்கு மட்டுமே திருக்கல்யாண மண்டபம் அமைந்துள்ளது. ★ சாஸ்தா கோவில்களில் இங்கு மட்டுமே திருக்கல்யாண தினத்தன்று “சப்பர புறப்பாடு” நடைபெற்று மாலை மாற்றும் நடைபெறுகிறது. ★ திருக்கோயிலுக்கு உள்ளே மலையாள தாந்தீரிக முறைப்படியும், வெளிப்பிரகரத்தில் நடைபெறும் திருக்கல்யாணம், “பாண்டியன் முடிப்பு” @ நிச்சயதார்த்த வைபவம், சப்பர புறப்பாடு ஆகியவை தமிழ் நாட்டு ஆச்சார முறைப்படியும் நடைபெறுகிறது. ★ ஸௌராஷ்டிர குல மக்கள் “சம்பந்தி” முறையில் இந்த திருக்கல்யாண வைபவத்தில் மணமகள் ஸ்ரீ புஷ்கலா தேவி சார்பில் கலந்து கொள்கிறார்கள். ★ தேவஸ்வம் போர்டாரல் மூன்று நாள் “சம்பந்தி விருந்தும்” அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

திருவிழாக்கள்

இங்கு ஐயப்பனுக்குரிய அனைத்துச் சிறப்பு நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. ஐயப்பன் மண்டல வழிபாட்டு நாட்களில், சபரிமலையில் நடக்கும் நிகழ்ச்சி நிரலை அடிப்படையாகக் கொண்டு இக்கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றுக் கொண்டே இருக்கும். இங்கு ஆண்டுதோறும், மலையாள நாட்காட்டியின்படி, தனு (மார்கழி) மாதத்தில் ஐயப்பன் – புஷ்கலை திருமண விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவின் முதல் நாளில் பாண்டியன் முடிப்பு எனப்படும் நிச்சயதார்த்த நிகழ்வும், தாலிப்பொலி ஊர்வலம் எனும் மாப்பிள்ளை அழைப்பு நிகழ்வும், சமபந்தி விருந்தும் மிகச் சிறப்பாக நடத்தப் பெறுகின்றன.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

மலபார் தேவஸ்வம் வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

அருகிலுள்ள பேருந்து நிலையம்

ஆரியங்காவு

அருகிலுள்ள இரயில் நிலையம்

கொல்லம்

அருகிலுள்ள விமான நிலையம்

திருவனத்தபுரம்

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top