Monday Jan 27, 2025

ஆப்பூர் ஶ்ரீ நித்ய கல்யாண  பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்

முகவரி :

ஆப்பூர் ஶ்ரீ நித்ய கல்யாண  பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் திருக்கோயில்,

ஆப்பூர், ஒளஷத கிரி மலை,

காஞ்சிபுரம் மாவட்டம் – 603204.

இறைவன்:

ஶ்ரீ நித்ய கல்யாண  பிரசன்ன வெங்கடேசப் பெருமாள்

அறிமுகம்:

சென்னைக்கு மிக அருகில் சிங்கபெருமாள் கோவில் – ஒரகடம் இடையே திருக்கச்சூரை தாண்டி அமைந்துள்ள ஆப்பூர் கிராமத்தில் சிறிய மலையில் குடி கொண்டு, தன்னைத் தேடி வரும் பக்தர்களுக்காக ஶ்ரீ நித்ய கல்யாண  பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் தனித்து வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இந்த மலை முழுவதும் மூலிகைச் செடிகள் நிரம்பிக் காணப்படுகிறது. இந்த மலைக்கு பெயர் ‘ஒளஷத கிரி’ (மூலிகை மலை). ஒளஷதம் என்றால் மருந்து என்று பெயர். இங்குள்ள மூலிகைகளில் பட்டு வருகின்ற காற்று மனிதர்களின் பிணிகளை போக்க வல்லது.

இந்த கோயில், தாம்பரத்திலிருந்து 23 கி.மீ. தொலைவில் உள்ள சிங்கப்பெருமாள் கோயிலில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் செல்லும் சாலையில் சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ள ஆப்பூர் கிராமத்தில் உள்ளது. ஆப்பூர் டாங்க் நிறுத்தம் என்ற இடத்தில் இறங்கி சுமார் ஒரு கி.மீ. தொலைவு நடந்து செல்ல வேண்டும்.

புராண முக்கியத்துவம் :

 திரேதாயுகத்தில் இராம இராவண யுத்தத்தின் போது, இந்திரஜித்தின் பிரம்மாஸ்திரத்தால் தாக்கபட்டு இராம சேனையும், இலக்ஷ்மணனும் மூர்சையாகி விழுந்து விடுகின்றனர். அப்போது ஜாம்பவானின் அறிவுரைப்படி மயங்கிய மற்றும் இறந்தவர்களை உயிர்ப்பிக்க சஞ்சீவி மலையில் இருந்து குறிப்பிட்ட சில மூலிகைகளைக் கொண்டு வர ஆஞ்சநேயர் சஞ்சீவி மலை இருக்கும் வட திசை நோக்கிப் பறந்தார். சஞ்சீவி மலையை அடைந்தவர், எந்த மூலிகை என்று தெரியாமல் சஞ்சீவி மலையை அப்படியே பெயர்த்து எடுத்துக் கொண்டு புறப்பட்டு வந்தார். சஞ்சீவி மலையைத் தூக்கிக் கொண்டு அனுமன் வரும்போது, சஞ்சீவி மலையில் இருந்து சிறு சிறு துகள்கள் ஆங்காங்கே பெயர்ந்து கீழே விழுந்தன.

அதில் ஒரு சிறு பகுதிதான் இந்த மூலிகைகள் கொண்ட சிறிய மலை ஒளஷதகிரி. அகத்தியர் மற்றும் பல சித்தர்கள் இந்த மலையில் தங்கி இருந்து, தவம் செய்து, பேறு பெற்றதாகச் சொல்கிறார்கள். அபூர்வமான இந்த மலையில் பல சித்தர்கள் இன்றும் தவம் புரிந்து வருவதாக ஐதீகம். சஞ்சீவி மலையின் ஒரு பகுதி என்பதால், இங்கு ஏராளமான மூலிகைச் செடிகள் மண்டிக் கிடக்கின்றன. மருத்துவ சிகிச்சைக்குத் தேவையான பல மூலிகைச் செடிகள் இங்கு இருப்பதால், இந்த மலையில் சற்று நேரம் அமர்ந்து, மூலிகைக் காற்றைச் சுவாசித்துச் செல்வதே பெரிய நிவாரணமாகக் கருதப்படுகிறது. தற்போது ஆப்பூர் எனும் கிராமத்தில் அமைந்துள்ள இந்த மலையில் புராதன பழைமை வாய்ந்த ஸ்ரீ நித்ய கல்யாண பிரசன்ன வெங்கடேச பெருமாளை தரிசனம் செய்யலாம்.

நம்பிக்கைகள்:

திருமண தோஷம் நீங்குவதற்கும், திருமணத்திற்கு பிறகு கருத்து வேறுபாட்டால் பிரிந்திருக்கும் தம்பதிகள் ஒன்று சேர்வதற்கும், குழந்தை பாக்கியம் வேண்டி இந்தக் கோயிலில் பெருமாளைப் பிரார்த்தனை செய்துக் கொண்டால் விரைவில் வேண்டியதை அருள்வார் என்பது ஐதீகம். வேலையின்மை, கடன் சுமை போன்றவற்றால் அவதிப்படுபவர்கள் இந்த கோயிலுக்கு வந்து, பெருமாளுக்கு திருமஞ்சனம் சாற்றி, புடவை அணிவித்து, ஐந்து முறை பிரதட்சணம் செய்து வழிபட்டால் விரைவில் அவர்கள் குறைகள் தீரும் என்பது நம்பிக்கை.

சிறப்பு அம்சங்கள்:

சுமார் எண்ணூறு வருடத்தில் இருந்து ஆயிரம் வரை பழைமை வாய்ந்த இக்கோயில் மிகவும் சிறியதாகவும் அழகாகவும் இருக்கிறது. இங்குள்ள ஶ்ரீ நித்ய கல்யாண பிரசன்ன வெங்கடேசப் பெருமாளை உள்ளூர் கிராமவாசிகள் ஆப்பூரார் என்றும் அழைக்கின்றனர்.

இந்த மலை சற்று நெட்டுகுத்தாக இருக்கிறது. முதியவர்களும் மலை ஏறுவதற்கு வசதியாக படிகள் குறுகிய அளவில் இல்லாமல், விசாலமான அமைப்பில் கட்டப்பட்டிருக்கிறது.

ஒளஷதகிரியின் உச்சியில் ஶ்ரீ நித்ய கல்யாண பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயிலில் நின்று கொண்டிருக்கும் போது மூலிகைக் காற்றின் வாசம் நம்மைப் பரவசமூட்டுகிறது. ஒரு பிராகரம் மற்றும் முன் மண்டபத்துடன் கோயில் அமைந்துள்ளது. முதலில் கம்பி வேலி அமைக்கப்பட்ட ஒரு சிறிய மண்டபம் போன்ற அமைப்பு… பின்னர் நேரே சென்றால் பெருமாள் சந்நிதி கிழக்கு நோக்கி காணப்படுகிறது. பெரிய திருவடியான கருடாழ்வார் கருவறைக்கு முன்னால், பெருமாளை நோக்கி கும்பிட்டப்படி மேற்கு நோக்கி காணப்படுகிறார். மண்டபத்தில் தசாவதார சுதை சிற்பங்கள், மற்றும் அஷ்ட ல‌ஷ்மிகள் நடுவில் திருவேங்கடவன் சுதை சிற்பம் காணப்படுகின்றன.

இங்கு பெருமாள் சுமார் ஐந்தடி உயரத்தில் மார்பில் தாயாருடன் தனித்திருக்கின்றார். இங்கே பார்ப்பதற்கு திருப்பதி ஏழுமலையானின் சிறிய வடிவு போல காட்சி அளிக்கிறார். முன்பே சொன்னது போல பெருமாள் மூர்த்தி சிறிது தான், ஆனால் பெருமானின் ஆற்றலை உணர்ந்தவர்கள் பல்வேறு இடங்களில் இருந்து தேடி வருகின்றனர். இங்கே வற்றாத தீர்த்தக் கிணறு ஒன்று பெருமாளுக்கான திருமஞ்சனத்துக்கு தங்குதடையின்றி மூலிகை கலந்த தனிச்சுவையுடன் சுரந்து கொண்டிருக்கிறது.

இந்த கோயிலில் தாயாருக்கு என்று தனி சந்நிதி கிடையாது. பெருமாள் லக்ஷ்மியின் சொருபமாகவே இருந்து மஹாலக்ஷ்மியை தன்னகத்தே கொண்டிருப்பதால் பெருமாளுக்கு புடவையை தவிர வேறு எந்த வஸ்திரங்களும் சாற்றப்படுவதில்லை.

இங்கு பெருமாளும், லக்ஷ்மியும் இணைந்து ஒரேவடிவில் இருப்பதாக ஐதீகம். அதனால் தான் “ஶ்ரீ நித்ய கல்யாண ப்ரஸன்ன வெங்கடேசப் பெருமாள்” என்ற பெயர் வந்தது. அகத்திய முனிவர் தவம் செய்த ஒரே வைணவத் திருத்தலம் இது மட்டுமே என்று கூறப்படுகிறது.


அருகிலுள்ள கிராம மக்கள் இந்த பெருமாளை மனத்தில் நினைத்து திருமணத்திற்கு வேண்டிக் கொண்டு, திருமணம் கைகூடியதும் கல்யாண ஜவுளி எடுக்கும் போது, முதல் புடவை பெருமாளுக்கு எடுத்து அதனை நிச்சயதார்த்தத்தின் போது கொண்டு வந்து பெருமாளுக்கு சாற்றுகிறார்கள். இந்த கோவிலில் கிரிபிரதக்ஷனம் பிரபலமானது. அனைத்து பௌர்ணமி நாட்களிலும் சித்தர்களும், ரிஷிகளும் பெருமாளை வணங்குவதற்காக இங்கு கூடுகிறார்கள் என்பது ஐதீகம்.    

திருவிழாக்கள்:

புரட்டாசி சனிக் கிழமை, வைகுண்ட ஏகாதசி, ஆங்கிலப் புத்தாண்டு தினம், ஸ்ரீராமநவமி, மாத பௌர்ணமி, ஆனி மாத சனிக்கிழமை போன்ற தினங்கள் இங்கு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன.
ஸ்ரீதேவி – பூதேவி சமேதராக உள்ள பெருமாளின் உற்சவர் விக்ரகம் ஆப்பூர் கிராமத்தில் ஒரு பஜனை கோயிலில் இருக்கின்றது. விசேஷ நாட்களில் உற்சவரை மலைக்கு எடுத்து வந்து வழி படுகிறார்கள்

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

ஆப்பூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

தாம்பரம்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top