Saturday Nov 16, 2024

ஆனதாண்டவபுரம் ஆனந்த தாண்டவரேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி

ஆனதாண்டவபுரம் ஆனந்த தாண்டவரேஸ்வரர் திருக்கோயில், ஆனதாண்டவபுரம், மயிலாடுதுறை (வழி), நாகப்பட்டினம் மாவட்டம் – 612703

இறைவன்

இறைவன்: ஆனந்த தாண்டவரேஸ்வரர், கல்யாண சுந்தரேஸ்வரர் இறைவி: பிருகந்நாயகி

அறிமுகம்

மயிலாடுதுறை – சீர்காழி சாலையில் 1 கி.மீ. வந்து, அங்கிருந்து ஆனதாண்டவபுரம் செல்ல பிரிந்து செல்லும் சாலையில் 5 கி.மீ. சென்றால் இத்தலத்தை அடையலாம். மயிலாடுதுறையிலிருந்து நகரப் பேருந்து வசதிகள் உள்ளன. நீடூர் பாடல் பெற்ற தலத்திலிருந்தும் ஆனதாண்டவபுரம் செல்ல சாலை வசதி உள்ளது. நல்ல நிலையில் பராமரிக்கப்பட்டு வரும் வைப்புத் தலக் கோவில்களில் ஆனதாண்டவபுரம் பஞ்சவடீஸ்வரர் ஆலயமும் ஒன்றாகும். கிழக்கில் ஒரு மூன்று நிலை இராஜகோபுரமும், தெற்கில் ஒரு வாயிலும் கொண்டு இவ்வாலயம் காட்சி தருகிறது. இறைவன் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். ஆனந்த தாண்டவம் ஆடியதால் இறைவனுக்கு ஆனந்த தாண்டவரேஸ்வரர் என்றும், பரஞ்சோதி முனிவருக்கு திருமணக் கோலம் காட்டி அருளியதால் கல்யாண சுந்தரேஸ்வரர் என்றும், தனது பஞ்சவடிக்காக மானக்கஞ்சார நயனாரின் மகள் தலைமுடியைக் கேட்டுப் பெற்றதால் பஞ்சவடீஸ்வரர் என்றும், இத்தலம் முற்காலத்தில் பாரிஜாத வனமாக இருந்ததால் பாரிஜாதவனேஸ்வரர் என்றும் பல பெயர்களால் இறைவன் அழைக்கப்படுகிறார். இங்கு இரண்டு அம்பாள் சந்நிதிகள் உள்ளன. கிழக்கு நோக்கி ஒரு அம்பாள் சந்நிதியும், தெற்கு நோக்கு மற்றொரு அம்பாள் சந்நிதியும் அமைந்துள்ளன. இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள சோழ நாட்டு வைப்புத் தலமாகும்.

புராண முக்கியத்துவம்

63 நாயன்மார்களில் ஒருவரான மானக்கஞ்சாற நாயனார் அவதரித்த தலம் இன்றைய நாளில் ஆனதாண்டவபுரம் என்று அறியப்படும் கஞ்சாறு. இறைவனான சிவனாரின் மீதும், அவர் தம் அடியார்கள் மீதும் பக்தியுடன் வழ்ந்து வந்த அவருக்கு ஒரு மகள் பிறந்தாள். அவளின் திருமண வயது வந்தது. கருகருவென நீண்ட கூந்தலுடன், அழகு ததும்பக் காட்சி அளித்த மகளுக்குத் திருமணம் செய்து வைக்க நினைத்த கஞ்சாறர் சிவபக்தியில் திளைத்த கலிக்காமன் என்னும் இளைஞனைத் தன் மகளுக்கு மணம் முடிக்க ஏற்பாடுகள் செய்தார். திருமணத்துக்கு முதல் நாள் காவி உடையும், கழுத்தில் ருத்திராட்ச மாலைகளும் அணிந்து, மேனி முழுவதும் திருநீறு தரித்தபடி தலைமுடியை ஐந்து பிரிவுகளாக்கி பூணூலாக அணிந்துகொள்ளும் வழக்கம் உள்ள சிவனடியார் ஒருவர் வந்தார். தொலைவிலிருந்து வந்த சிவனடியாரை அன்புடன் வரவேற்று மனைவி, மகள் சகிதம் விழுந்து கஞ்சாறர் வணங்கினார். அப்போது, அந்த மணமகளின் நெடுங்கூந்தலைக் கண்ட சிவனடியார், இவளின் முடி, நமக்குப் பஞ்சவடிக்கு (பூணூல்) ஆகும் என்று கூறினார். வடக்கில் உள்ள சிவனடியார்கள் சிலர் இப்படித்தான் பூணூல் தரிப்பர் என்பதை அறிந்த கஞ்சாறர், தன் மகளின் கூந்தல் ஒரு சிவனடியாருக்கு பூணூலாகப் பயன்படப் போகிறதே! என்று மகிழ்ந்து சற்றும் யோசிக்காமல் அந்தக் கணமே தன் மகளின் தலைமுடியைக் கொத்தாகப் பிடித்து, அடியோடு அறுத்து, சிவனடியாரிடம் பணிவுடன் கொடுத்து, வணங்கினார். விடிந்தால் மகளுக்குத் திருமணம், அப்படியிருக்க மகளின் கூந்தலை அறுத்துக் கொடுப்பது தகுமா என்று திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் நினைத்து கவலைப்பட்டனர். அப்போது தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. வந்த சிவனடியார் மறைந்து அவ்விடத்தில் கஞ்சாறருக்கும் அவர்தம் மனைவி மகளுக்கும் திருக்காட்சி தந்தார் சிவனார். மணமகளின் கூந்தல் மீண்டும் அவளது தலையில் பழையபடியே அழகுறக் காணப்பட்டது. இறைவனை மனைவி, மகள் சகிதம் விழுந்து வணங்கினார் கஞ்சாறர். கூடியிருந்த மக்கள் கஞ்சாறரின் சிவபக்தியைப் பார்த்து பரவசப்பட, 63 நாயன்மார்களில் ஒருவராகும் பாக்கியத்தை பெற்றார் கஞ்சாறர். மானக்கஞ்சார நாயனார் என்று மக்களால் போற்றப்பட்டார்.

நம்பிக்கைகள்

இராஜகோபுரத்திற்கு முன்னால் அமைந்துள்ள ஆலய தீர்த்தம் அமிர்தபிந்து தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.ஃ இதீர்த்தம் வியாதிகளைப் போக்க வல்லது. இந்தத் தீர்த்தத்தில் நீராடி, பிரஹன்நாயகி கல்யாணசுந்தரி சமேத பஞ்சவடீஸ்வரரையும் மானக்கஞ்சாற நாயனாரையும் வணங்கி வழிபட்டால், பிறவிப் பிணிகள் நீங்கும்; மனதுள் நிம்மதி நிலைக்கும். வியாதிகள் நீங்க இத்தலத்தில் இரவு தங்கி, காலையில் அமிர்தபிந்து தீர்த்தத்தில் நீராடுவது சிறப்பு. இத்தலத்தில் வழிபட்டால் மறு பிறவி இல்லை என்பது ஐதீகம்.

சிறப்பு அம்சங்கள்

ஆனந்த முனிவருக்காக நடராஜர் தனது நடனத்தைக் காட்டியருளிய தலம் இதுவாகும். எனவே இங்குள்ள நடராஜருக்கு ஆனந்த நடராஜர் என்று பெயர். ஊரின் பெயரும் ஆனந்ததாண்டவபுரம் என்றானது. எங்கும் இல்லாதபடி இங்குள்ள நடராஜர் மூர்த்தம் திருவாசி துணையில்லாமல் முயலகனின் பிடிப்பில் மட்டும் தனியாக நிற்கிறது. அருகில் ஆனந்த முனிவர் நின்று கொண்டிருக்கிறார். மானக்கஞ்சார் நாயனார், அவர் மனைவி ஆகிய இருவரும் அருகில் நிற்கின்றனர். ஒருமுறை பலத்த மழையின் காரணமாக சிதம்பரம் சென்று ஆருத்ரா தரிசனம் பார்க்க முடியாமல் போனதால் தனது உயிரை மாய்த்துக் கொள்ள ஆனந்த முனிவர் முயன்ற போது அவருக்காக இறைவன் தனது ஆருத்ரா தரிசனத்தை இங்கு காட்டி அருளினார். ஆனந்த முனிவருக்குக் கொடுத்த வாக்கின் படி இன்றளவும் தில்லையில் காலை 10 மணிக்கு மேல் தான் ஆருத்ரா தரிசனம். அதுவரை இறைவன் இங்கிருப்பதாக ஐதீகம்.

காலம்

6 ஆம் நூற்றாண்டு

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

மயிலாடுதுறை

அருகிலுள்ள இரயில் நிலையம்

மயிலாடுதுறை

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top