Saturday Jan 18, 2025

ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி

அருள்மிகு ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில் , ஆக்கூர்-609301 நாகப்பட்டினம் மாவட்டம். போன் +91- 98658 09768, 9787709742, 75022 22850

இறைவன்

இறைவன்: தான்தோன்றியப்பர் இறைவி: கடகநேத்ரி

அறிமுகம்

ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 46ஆவது சிவத்தலமாகும். சம்பந்தர், கபிலதேவ நாயனார் இத்தலம் மீது பாடிய பாடல் பதினொராம் திருமுறையில் உள்ளது. இத்தலத்து இறைவனார் சுயம்பு மூர்த்தி. அப்பர் பாடல் பெற்ற இத்தலம் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டத்தில் அமைந்துள்ளது. செம்பொனார் கோயிலுக்கு ஐந்து கி.மீ தொலைவில் உள்ளது. சிறப்புலி நாயனார் அவதரித்த தலம். தல விருட்சம்:கொன்றை,பாக்கு, வில்வம் தீர்த்தம்:குமுத தீர்த்தம்

புராண முக்கியத்துவம்

ஒரு முறை கோச்செங்கண்ணனுக்கு வயிற்றில் குன்ம (அல்சர்) நோய் ஏற்படுகிறது. இதனால் மன்னன் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிறான். இந்த நோயை தீர்க்க வேண்டுமானால், மூன்று தல விருட்சங்கள் எங்கு இருக்கிறதோ அங்கு கோயில் கட்டினால் நோய் தீரும் என்று அசரீரி கூறுகிறது. மன்னனும் பல கோயில்கள் கட்டி வரும் போது ஆக்கூர் என்ற இத்தலத்திற்கு வருகிறான். அப்போது அசரீரி வாக்கின் படி கொன்றை, பாக்கு, வில்வம் என்று மூன்று தலவிருட்சங்களை ஒரே இடத்தில் பார்க்கிறான். உடனே இந்த இடத்தில் ஒரு சிவாலயம் கட்டுகிறான். அப்படி கோயில் கட்டும்போது ஒருநாள் கட்டிய சுவர் மறுநாள் கீழே விழுந்து விடும். இது எதனால் கீழே விழுகிறது என சிவனிடம் மன்றாடி கேட்கிறான். அதற்கு இறைவன் ஆயிரம் அந்தணர்களுக்கு அன்னதானம் செய்தால் குறைபாடு நீங்கி கோயிலை சிறப்பாக கட்டலாம் என்று கூறுகிறார். அதன்படி 48 நாள் அன்னதானம் நடக்கிறது. இதில் ஒவ்வொருநாளும் ஆயிரம் இலை போட்டால் 999 பேர் தான் சாப்பிடுவார்கள் ஒரு இலை மீதம் இருந்து கொண்டே இருக்கும். மன்னன் மிகுந்த வருத்தத்துடன் இறைவனிடம் சென்று, “”ஏன் இந்த சோதனை, 48 நாட்களும் ஆயிரம் பேர் அன்னதானம் சாப்பிட்டால் தானே கோயில் கட்டுவது சிறப்பாக அமையும். ஆனால் தினமும் ஒரு ஆள் குறைகிறார்களே. இதற்கு தாங்கள் தான் ஒரு வழி சொல்ல வேண்டும்” என்று கெஞ்சுகிறான். ஆயிரத்தில் ஒருவர் : மன்னனின் குரலுக்கு செவி சாய்த்து விட்டார் இறைவன். 48வது நாள் ஆயிரம் இலை போடப்பட்டது. ஆயிரம் இலையிலும் ஆட்கள் அமர்ந்து விட்டார்கள். ஆயிரமாவது இலையில் “ஆயிரத்தில் ஒருவராக’ அமர்ந்திருந்த வயதான அந்தணரிடம் சென்ற மன்னன், “”ஐயா, தாங்களுக்கு எந்த ஊர்” என்று கேட்டான். அதற்கு வயதான அந்தணர் “”யாருக்கு ஊர்” என்று மறுகேள்வி கேட்கிறார். (இதனாலேயே இந்த ஊருக்கு யாருக்கு ஊர் என்பது மருவி ஆக்கூர் ஆனது) மன்னனை எதிர் கேள்வி கேட்ட அந்த வயதானவரை அடிப்பதற்காக சிப்பாய்கள் விரட்டுகின்றனர். ஓடி சென்ற வயதானவர் நெடுங்காலமாக அங்கிருந்த புற்றுக்குள் விழுந்து விட்டார். புற்றை கடப்பாறையால் விலக்கி பார்த்த போது உள்ளேயிருந்து சுயம்பு மூர்த்தியாக “தான்தோன்றீசுவரர்’ தோன்றுகிறார். கடப்பாறையால் புற்றை குத்தியபோது கடப்பாறை லிங்கத்தின் மீது பட்டு விடுகிறது. கடப்பாறை பட்டதில் அடையாளமாக இன்றும் கூட லிங்கத்தின் தலைப்பகுதியில் பிளவு இருப்பதைக்காணலாம். அருள்மிகு ஆயிரத்துள் ஒருவர் கையில் தண்டு ஊன்றிய நிலையில் நின்ற வண்ணமாக காட்சியளிக்கும் உற்சவ மூர்த்தியாவார். மூலவர் சிலா விக்கிரகம் இல்லை. இறைவனை திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் பலவாறு போற்றி வழிபடும் பாடல்களில் ஆயிரத்தொருவர் பற்றிய குறிப்புகள் ஒன்று கூட இடம்பெறவில்லை என்பது இங்கு நோக்கப்பட வேண்டிய ஒன்று. சுந்தரர் தன் திருத்தொண்டர் புராணத்தில் சிறப்புலியைப் பற்றி குறிப்பிடுகிறார். மேலும் ஆயிரத்தொருவர் பற்றியும் குறிப்பிடபடவில்லை. எனவே சீர்கொண்ட புகழ்வள்ளல் சிறப்புவிநாயனாருக்கு காட்சியளித்த இறைவனின் திருஉருவே இவ்ஆயிரத்தொருவராக இருத்தல் வேண்டும் என்பது தெளிவு.

நம்பிக்கைகள்

இது ஒரு சிறந்த பரிகார ஸ்தலமாகும்.சுவாமிக்கு அம்பாள் வலது பக்கத்தில் மணக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். திருமணம் வேண்டி சுயம்வர பார்வதி ஹோமம் செய்தால் திருமணம் நிச்சயம். குழந்தை வரம் வேண்டி சந்தான கோபாலகிருஷ்ண யாகம் செய்தல் சிறப்பு. ஜாதகத்தில் நவகிரக தோஷங்களை போக்கிட நவகிரக சாந்தி ஹோமம், வாழ்வில் பொருட்செல்வம் பெற தனாகர்ஷண ஹோமம், குடும்பத்தில் ஏற்படும் குழப்பங்களை நீக்கிட துர்க்கா சப்த சதி ஹோமம், அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைத்திட சூலினி துர்க்கை ஹோமம், வீடு வர்த்தக கட்டடம் கட்டி பாதியில் நின்று போன கட்டடம் முழுமை பெற்று பூர்த்தியடைய வராக ஹோமம், கூர்ம ஹோமம் செய்து பயன் பெறுங்கள்.

சிறப்பு அம்சங்கள்

சீறப்புலி நாயன்மார் பிறந்து, வாழ்ந்து, முக்தியடைந்த தலம். இத்தலத்தில் 60ம் கல்யாணம் செய்வது மிகவும் சிறப்பு. காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமியில் சகஸ்ர நாம அர்ச்சனை செய்தல் மிகவும் சிறப்பானதாகும். இத்தல முருகப்பெருமானை அருணகிரிநாதர் தன் திருப்புகழால் பாடியுள்ளார். அகத்தியருக்கு சிவன் திருமணக்கோலம் காட்டிய தலங்களுள் இதுவும் ஒன்று. கோச்செங்கண்ணன் என்ற சோழ மன்னன் கட்டிய சிவாலயங்களுள் இது மாடக்கோயில் ஆகும். இறைவனே வந்து பந்தியில் அமர்ந்து விருந்து உண்ட பெருமையுடைய தலம். காசியை விட வீசம் அதிகம்: கோயிலின் பின்புறத்தில் உள்ள விநாயகருக்கு பொய்யா விநாயகர் என்றுபெயர். இவர் அந்தண ரூபத்தில் வந்து மன்னனிடம் என்ன பிரச்னை என்று கேட்கிறார். அதற்கு மன்னன், “”சிவனுக்கு கோயில் கட்ட வேண்டும், ஆனால் சுவர் இடிகிறது” என்கிறார். அதற்கு விநாயகர் இங்குள்ள குளத்தில் மூன்றே முக்கால் நாழிகை மூழ்கு. பதில் கிடைக்கும் என்கிறார். ராஜாவுக்கோ, குளத்தில் மூழ்கினால் சுவர் எப்படி நிற்கும் என்று சந்தேகம். இதையறிந்த விநாயகர் காசியை விட வீசம் அதிகம் இந்தக்குளத்தில். காசியில் விட்ட பொருள்கள் எல்லாம் இந்த குளத்தில் கிடைக்கவே மன்னனின் சந்தேகம் தீர்ந்தது. இருந்தும் குளத்தில் மூழ்கிய மன்னன் இறைவனை நினைத்து எழுந்தான். கூடவே கோயிலின் கர்ப்பக்கிரகமும் வந்தது. மகிழ்ச்சியடைந்த மன்னன் மீதி கோயிலை கட்டி முடித்தான். கோவிலும் இருப்பிடமும் காவிரி சூழ் எழில் தென்னாட்டு சிவத்தலங்களில் காவிரியின் தென்கரையில் நூற்றுத் தொண்ணூறு சிவதலங்களில் நாற்பத்தி ஆறாவது தலமாக விளங்குவது திருஆக்கூர் திருத்தலமாகும். நாகை மாவட்டத்தில் தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள பேரூர் ஆக்கூர். மயிலாடுதுறையில் இருந்து (தாரங்கம்பாடி வழி) காரைக்கால், நாகப்பட்டினம் செல்லும் முக்கிய சாலையில் சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ஆக்கூர் பேருந்து நிலையத்தின் வடபாகத்தில் இத்திருக்கோயில் அமையப் பெற்றுள்ளது. பேருந்து நிலையத்தின் நுழைவு வாயிலில் இத்திருக்கோயிலின் இறைவன் பெயரை தாங்கி எழில்மிகு தோரண நுழைவு வாயில் கம்பீரமாக நிற்கிறது. இவ்வூர் ஊராட்சியின் நிர்வாகத்தில் உள்ளது. இவ்வூரில் ஆரம்ப பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளி, சுகாதார நிலையம், நூலகம் முதலியனவும் அமைந்த அழகிய வயல்கள் சூழ்ந்த ஊராகும். இவ்வூருக்கு சென்னை, புதுச்சேரி, காரைக்கால், சிதம்பரம், திருச்சி ஆகிய ஊர்களில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன. திருக்கோயில் தோற்றம் இத்திருக்கோயில் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராக திகழும் கோச்செங்கட் சோழநாயனார் கட்டிய திருக்கோயிலாகும். இவர் முற்கால சோழமன்னர் ஆவார். கோச்செங்கட்சோழர் எழுபது மாடக்கோயில் கட்டினார் என்பது பிரபந்தபாசுரங்கள் மூலம் வெளிப்படுகின்றன. அவற்றுள் ஒன்று பெண்ணா கடத்தில் உள்ள தூங்காணை மாடம் மற்றொன்று ஆக்கூர் தான்தோன்றி மாடமாகும். யானை ஏறமுடியாத படிக்கட்டுகளை உடைய உயரமான தளத்தை உடையவை மாடக்கோயில் என்று பெயர் பெற்றன. கோச்செங்கட்சோழன் அங்கன் அமரும் தானங்கள் பல சமைக்க என்று ஆணை இட்டான். அந்நாளில் ஆக்கூரில் உள்ள கிராமவாரிய மக்கள் தம் ஊருக்கு திருக்கோயில் கட்ட எண்ணி அரசனிடம் முறையிட்டிருத்தல் வேண்டும். (ஊர்க்காரியங்களை கவனிக்கும் கூட்டம் இருந்தது கல்வெட்டு செய்தியால் அறியப்படுகிறது) அரசனும் அதற்கு இசைய மக்கள் ஈசனார்க்கு கோயில் அமைக்கும் பணியில் முதல் பணியாக இடம் தேர்வு செய்யும் நாளில் நூல் வள்ளார் வகுத் முறையில் இடம் சமன் செய்யுங்கால மிகப்பெரிய ஒலி எழ அந்த இடத்தை அகழ்ந்து பார்க்கும் போது ஆதிறையானின் அருள்மேனி விண்ணொளியாக பிரகாசிக்க இருத்தல் கண்டு அந்த இடத்திலேயே கோயில் அமைத்திருத்தல் வேண்டும். இறைவன் தானாக கிடைக்கப் பெற்றமையால் இறைவனுக்கு தான்தோன்றி முடையான் என்றும் தான்தோன்றி அப்பர் என்று பெயரிட்டு மகிழ்ந்து வழிபட்டனர் என்பதில் சிறிதும் ஐயமில்லை. இறைவன் அவ்வாறு அகழும்போது கிடைக்கப் பெற்றமையால் இறைவனுக்கு தான்தோன்றி முடையான் என்றும் தான் தோன்றி அப்பர் என்று பெயரிட்டு மகிழ்ந்து வழிபட்டனர் என்பதில் சிறிதும் ஐயமில்லை. இறைவன் அவ்வாறு அகழும்போது கிடைக்கப்பெற்றமையால் லிங்கத்தின் பாணம் பிளந்து சிதைந்த நிலையில் இன்றும் காணலாம். மார்கண்டையருக்காக காலனை (எமனை) வதம் செய்ய சுவாமி சிரசு வெடித்து விஸ்வரூபத்தில் எழுந்து வதம் செய்தார் என்பது செவிவழிச் செய்தியாக அறியப்படுகிறது. இது போன்ற அமைப்பு எந்த கோவிலும் இல்லை. இந்த சிவலிங்கம் கோச்செங்கட்சோழனுக்கு முன்னும் ஒரு காலத்தில் வழிபட்டு வந்திருந்து பிறகு யாதொரு காரணத்தாலோ மண் மூடி கிடந்திருந்தல் வேண்டும். எனவே தான் ஞானசம்பந்தர் தொன்மையால் தோற்றம் கேடு இல்லாதான் தொல்கோயில் என்று சிறப்பித்து கூறுகிறார். இவ்வாறு தான்தோன்றி அப்பராக காட்சியத்தார் என்பது தெளிவு. கோச்செங்கட்சோழன் காலம் நான்காம் நூற்றாண்டின் கடை என்று கணிக்கப்படுகிறது. எனவே இத்திருக்கோயில் நான்காம் நூற்றாண்டில் கட்டப்பெற்றது என்பது தெளிவு. வாள்நெடுங்கண்ணியம்மை ஒரு சமயம் இறைவன் சிவனும் பார்வதிதேவியும் பூலோகத்தை சுற்றி வரும் போது பார்வதி தேவி இறைவனிடம் பூலோகத்தில் அழகிய மாளிகை அமைத்து அதில் வாசம் செய்ய வேண்டும் என்று இறைவனிடம் கூறிய போது இறைவன் சிவபெருமான் இந்த ஆசை வேண்டாம் என்றார். அம்பிகை பார்வதி தேவி பிடிவாதமாய் இருக்க இறைவனும் அம்பிகையின் கோரிக்கைக்கு அப்படியே ஆகட்டும் என்று கூறி தேவதச்சன் விஸ்வகர்மா தலைமையில் தேவர்களை கொண்டு மாளிகை அமைக்கப்பட்டது. மாளிகை முழுமைப்பெற்று கிரஹப்பிரவேசம் செய்ய முனிவர் புலஸ்தியர் தலைமையில் பல ரிஷிகள் கிரஹபிரவேசம் செய்தனர். இறைவனும் இறைவியும் மிகவும் மகிழ்ச்சியுடன் உள்ள இவ்வேளையில் புலஸ்திய முனிவரிடம் உங்களுக்கு என்ன வரம் வேண்டும் கேளுங்கள் என்றபோது புலஸ்திய முனிவரும் இதர அனைத்து முனிவர்களும் உங்களது அருள் மட்டும் போதும் இறைவா என்றனர். ஆனால் புலஸ்திய முனிவரின் தர்மபத்தினி இந்த மாளிகை வேண்டும் என தெரிவித்தார். இதனை சற்றும் எதிர்பாராத பார்வதிதேவி இந்த மாளிகை என்றும் ரண களமாகட்டும் என சாபமிட்டு இறைவனிடமிருந்து விடைபெற்று பூலோகத்தில் அத்ரி மகரிஷியின் வளர்ப்பு மகளாக பிறந்து வளர்ந்தார். பார்வதிதேவியை பிரிந்து இறைவன் கைலாயத்தில் தியானத்தில் மூழ்கினார். இப்படியே பல ஆண்டுகள் கடந்தபோது இறைவனிடம் அகஸ்திய முனிவர் இறைவா அம்பிகையுடன் எப்பொழுது சேர்ந்து அருள்புரிவீர்கள் என்று வினவினார். இறைவன் சிவபெருமான் அம்பிகை பார்வதிதேவியை தற்போது அத்ரி மகரிஷியின் மகளாக கட்கநேத்ரியாக பூலோகத்தில் பிறந்து வளர்ந்து வருகிறாள். அம்பிகை என்னை சேரும் நாள் விரைவில் நடைபெறும் என்றும் அதற்குரிய காலகட்டம் நெருங்கி விட்டது என்றார். ஆனால் அம்பிகை திருமணத்திற்கான மந்திரத்தை அம்பிகை ஜபம் செய்து வந்தால் விரைவில் நடைபெறும் என்றார். பார்வதிதேவி அகஸ்திய முனிவரிடம் இறைவனிடம் சேர என்ன செய்ய வேண்டும் கேட்டபோது அகஸ்தியர் சுயம்வர மந்திரத்தை அகஸ்தியர் மாமுனிவர் தெரிவித்ததும் அன்று முதல் அம்பிகை நாள்தோறும் ஜபம் செய்ய இறைவனே நேரில் வந்து அம்பிகையை ஆட்கொண்டார். அம்பிகையை ஆட்கொண்ட மாதம் பங்குனியில் வரும் வசந்த நவராத்திரி காலம் ஆதலால் இன்றும் இக்கோயிலில் வசந்த நவராத்திரியல் திருக்கல்யாண வைபவம் நடைபெற்று வருகிறது. அம்பிகை நாள்தோறும் ஜபம் செய்த இடம் ஆக்கூர் ஆகும். அம்பிகை செய்த மந்திரமே சுயம்வரபார்வதி மந்திரம் ஆகும். அகஸ்தியருக்கு மணக்கோலத்தில் காட்சியளித்த ஸ்தலங்களில் இதுவும் ஒன்று. இன்றும் ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் தேவஸ்தானத்தில் மணக்கோலத்தில் இறைவனும் இறைவியையும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். அம்பிகை அமைத்த மாளிகை இலங்கையில் உள்ளது. புலஸ்திய முனிவரின் பேரன்கள் தான் குபேரன், இராவணன் ஆகியோர் ஆவர். குபேரன் வழிபாடு : புலஸ்தியர், விச்ரவஸ், அகஸ்தியர், நிதாகர் அத்ரி மகரிஷி வாழ்ந்த ஸ்தலம் ஆக்கூர். இங்கு தான் ஐந்து வேள்விகளை செய்தும் நான்கு வேதங்களை கற்றும், ஆறு அரங்கங்களை கற்று குபேரன், இராவணன் ஆட்சிபுரிந்துள்ளார்கள் என்று புராண வாயிலாக அறியப்படுகிறது. குபேரன் பிறந்த ஊரும், குபேரன் வழிபட்டு வந்த தான்தோன்றீஸ்வரர் சுவாமியையும், வாள்நெடுங்கண்ணியம்மையையும் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை வெள்ளிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை தருசித்தும் அர்ச்சனை செய்து வந்தால் வாழ்வில் எல்லா வளமும் கிடைக்கும் என்பது தின்னமாகும்.

திருவிழாக்கள்

திருவாதிரை அன்று நடராஜர் வீதிஉலா வருவதே கோயிலின் மிகப்பெரிய திருவிழா ஆகும். மற்றபடி சிவனுக்குரிய மாதாந்திரி பிரதோஷம், சிவராத்திரி, திருக்கார்த்திகை, பவுர்ணமி, போன்ற நாட்களிலும் சிறப்பு பூஜை உண்டு.

காலம்

1000-2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

ஆக்கூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

மயிலாடுதுறை

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top