Saturday Nov 23, 2024

அளுந்தூர்  வரகுணேஸ்வரர் / காசி விசுவநாதர் கோயில், திருச்சி

முகவரி :

அளுந்தூர்  வரகுணேஸ்வரர் / காசி விசுவநாதர் கோயில்,

அளுந்தூர்,

திருச்சி மாவட்டம் – 620012.

இறைவன்:

வரகுணேஸ்வரர் / காசி விசுவநாதர்

இறைவி:

காசி விசாலாட்சி

அறிமுகம்:

அளுந்தூரில் சுமார் 1100 ஆண்டுகள் பழமையான வரகுணேஸ்வரர் கோவில், கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் முதலாம் வரகுண பாண்டியனால் கட்டப்பட்டதாகத் தெரிகிறது. மிகப் பழமையான ஆலயம்.

திருச்சியில் இருந்து 19 கிலோமீட்டர் தொலைவில் அளுந்தூர் கிராமம் உள்ளது. நகரப் பேருந்தில் சென்று அளுந்தூர் பஸ் நிறுத்தத்தில் இறங்க வேண்டும். பின் அங்கிருந்து உள்ளே 3 கிலோமீட்டர் சென்றால் ஆலயத்தை அடையலாம்.

புராண முக்கியத்துவம் :

இந்த ஆலயத்திற்கு தென்மேற்கே ½ கி.மீ. தொலைவில் செங்குளம் என்ற குளம் இருந்த பகுதி. அந்தப் பகுதி தற்போது திடலாகக் காட்சி தருகிறது. இந்தத் திடலில் ஒரு நந்தியும் எதிரே பீடம் இல்லாத சிவலிங்கமும் காட்சி தருகிறது. அந்த ஊரில் ஒரு விவசாயத் தம்பதியர் இருந்தனர். இருவரும் சிவ பக்தர்கள். அந்தப் பெண்ணுக்கு பால் பருகும் பருவத்தில் ஒரு குழந்தை. செங்குளத்தை ஒட்டி அவர்களுக்கு நிறைய நஞ்சை நிலங்கள். குழந்தையை திடலில் கிடத்தி உறங்க வைத்து விட்டு தம்பதிகள் இரண்டு காளைகளைப் பூட்டி வயலை உழத் தொடங்கினர். விவசாயி வயலை கலப்பையால் உழ, அந்தப் பெண் களைகளைப் பொறுக்கிக் கொண்டிருந்தாள்.

விடிவதற்குள் எல்லா நிலத்தையும் உழுது முடித்து விட வேண்டும் என்ற ஆவலில் நேரம் நள்ளிரவைத் தாண்டியும் வேலையில் கண்ணும் கருத்துமாக இருந்தனர். இறைவன் அருளால் வேலையை முடித்து விடலாம் என்ற நம்பிக்கை அவர்களுக்கு. திடீரென்று குழந்தையின் அழுகுரல் கேட்டது. பசியால் குழந்தை அழுகிறது என்று புரிந்துகொண்ட அந்தப் பெண், குழந்தைக்கு பால் ஊட்டினாள். ‘வேலை முடியவில்லையே’ என்ற கவலையில் அருகே இருந்த ஆலயத்தில் உள்ள இறைவனை வேண்டினாள். இறைவனின் அதீத கருணை இவர்கள் மேல் படிய, இவளும் குழந்தையும், காளைகளும், கணவனும் சிலையாக மாறி இறைவனுடன் ஐக்கியமாகினர். இது செவி வழி கதை.

ஒரு காளையின் சிலையும் விவசாயியின் சிலையும் தற்போது திடலாக காட்சி தரும் செங்குளம் ஏரிப்பகுதியில் காட்சி தருகிறது. குழந்தை பால் பருகும் கோலத்தில் உள்ள அந்த இளம் பெண்ணின் சிலை திருச்சி அருங்காட்சியகத்தில் உள்ளது. இன்னொரு காளையின் சிலை அருகே உள்ள ஆலயத்தில் நந்தியம் பெருமானாக அருள்பாலிக்கிறது. இதுவே அளுந்தூரில் உள்ள வரகுணேஸ்வரர் ஆலயம்.        

சிறப்பு அம்சங்கள்:

சுமார் 1100 ஆண்டுகள் பழமையான இந்தக் கோவில், கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் முதலாம் வரகுண பாண்டியனால் கட்டப்பட்டதாகத் தெரிகிறது. காலப்போக்கில் சற்றே சிதிலமடைந்த இக்கோவிலை முதலாம் குலோத்துங்கன் திருப்பணிகள் செய்து புதுப்பித்துள்ளான்.

இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பெயர் ‘வரகுண ஈசுவரமுடைய மகாதேவர்’ எனவும், ‘வரவுணீசுவரமுடைய நாயனார்’ எனவும் கல்வெட்டுகள் கூறுகின்றன. இந்த ஆலய இறைவன் ‘வரகுணேஸ்வரர்’ என்ற பெயரிலும், ‘காசி விசுவநாதர்’ என்ற பெயரிலும் தற்போது அழைக்கப்படுகிறார். இறைவியின் பெயர் காசி விசாலாட்சி. ஆலய முகப்பைத் தாண்டியதும் எதிரே நந்தியம் பெருமானும், பலிபீடமும் இருக்க, வலதுபுறம் அன்னை விசாலாட்சியின் சன்னிதி உள்ளது. இந்தச் சன்னிதியின் இரண்டாம் விமான தளம் முற்றிலும் அழிந்துவிட்டது. இறைவி நாற்கர நாயகியாய் நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறாள். அன்னை மேல் இருகரங்களில் அங்குசத்தையும் மலர்மொட்டையும் சுமந்து, கீழ் இரு கரங்கள் அபய வரத ஹஸ்த முத்திரைகளுடன் காட்சி தருகிறாள்.

அன்னையின் சன்னிதியை விட்டு கீழே இறங்கி, தென்புறம் சற்றே நடந்து உயர்ந்த படிகட்டுகளைக் கடந்து வடபுறம் திரும்பினால் மகாமண்டபத்தின் உள்ளே நுழையலாம். ஆலயத்தின் மையமாகத் திகழும் இறைவனின் கருவறைக்கு முன்பாக இருக்கிறது மகா மண்டபம். சிதிலமான இந்த மகாமண்டபத்தை நான்கு தூண்கள் தாங்கிக் கொண்டிருக்கின்றன. இந்த நான்கு தூண்களிலும் சோழர்கால சிற்ப வேலைப்பாடுகளே காணப்படுகின்றன. அடுத்துள்ள அர்த்த மண்டபத்தின் வடபுறம் ஒரு பெரிய சுரங்கம் செவ்வக வடிவில் காணப்படுகிறது. இப்பாதை ½ கி.மீ. தொலைவில் இருக்கும் பிடாரி தோப்பிற்கு செல்லும் பாதையாக இருந்ததாக பக்தர்கள் கூறுகின்றனர். தற்போது சிமெண்டு பலகையைக் கொண்டு இந்த சுரங்க பாதையை மூடி வைத்துள்ளனர்.

அடுத்துள்ள கருவறையில் இறைவன் வரகுணேஸ்வரர் லிங்கத் திருமேனியில் கீழ் திசை நோக்கி அருள்பாலிக்கிறார். மகாமண்டபத்தின் மேற்கில் முருகப்பெருமானின் திருமேனி உள்ளது. இறைவனின் தேவகோட்டத்தில் தட்சிணாமூர்த்தியும் சிவ துர்க்கையும் அருள்பாலிக்கின்றனர். ஆலய தலவிருட்சமான வில்வம் ஆலய முகப்பிலேயே உள்ளது. மேற்கு பிரகாரத்தில் ஓர் அரசமரமும், அதன் அடியில் மன்னன் வரகுணபாண்டியன் சிலையும் உள்ளது. இந்த அரசமரம் பலநூறு ஆண்டுகளை கடந்தது. இந்த ஆலயம் சித்தர்கள் உலவும் இடமாக இன்றும் திகழ்வதாக பக்தர்கள் கூறுகின்றனர்.

ஆலயத்தின் தென்மேற்கு திசையில் ஒரு கற்கட்டிடம் இருந்த சுவடு தெரிகிறது. அதனிடையே பல நூற்றாண்டுகளைக் கடந்த ஆலமரம் ஒன்று உள்ளது. ஆலமரத்தின் அடியில் பீடம் ஒன்றும் உள்ளது. இது சித்தர்கள் தவம் செய்த இடம் என்று சொல்லப்படுகிறது. கால பைரவர் மகா மண்டபத்தின் வடகிழக்கு மூலையில் அருள்பாலிக்கிறார். பதினான்காம் நூற்றாண்டின் கலை முறையில் அமைந்துள்ள இந்த கால பைரவரின் தலைக்கோலம் சுடர் முடி அமைப்பில் உள்ளது. பைரவரின் பின்னால் அவரது வாகனமான நாய் திறந்த வாயுடன் காணப்படுகிறது. இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலயம், தினமும் மாலை 4 மணி முதல் 5 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.

திருவிழாக்கள்:

இங்கு இறைவனுக்கும் இறைவிக்கும் அனைத்து விசேஷ நாட்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. ஐப்பசி பவுர்ணமியில் இறைவனுக்கு அன்னாபிஷேகமும், கார்த்திகை மாத அனைத்து சோமவாரங்களில் 108 சங்காபிஷேகமும் நடக்கிறது. மகா சிவராத்திரி திருநாள் இங்கு வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அனைத்து விசேஷ நாட்களிலும் அன்னதானம் வழங்கப்படுகிறது. தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு அபிஷேக ஆராதனைகளும், பைரவர் யாகமும் நடைபெறுகிறது.

காலம்

1100 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

அளுந்தூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருச்சி

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top