அல்லிகுண்டம் சிவனம்மாள் திருக்கோயில், மதுரை
முகவரி :
அல்லிகுண்டம் சிவனம்மாள் திருக்கோயில்,
அல்லிகுண்டம், உசிலம்பட்டி தாலுகா,
மதுரை மாவட்டம் – 625527.
இறைவி:
சிவனம்மாள்
அறிமுகம்:
எதிரிகளால் பலிவாங்கப்பட்ட தனது கணவனின் உடலுக்கு சிதை மூட்டியபோது உடன் கட்டை ஏறி உயிர் நீத்துப்போன சிவனம்மாள். தன்னைப்போன்ற நிலை வேறு எந்தப்பெண்ணுக்கும் வரக்கூடாது என்றெண்ணி தன்னை நம்பி கை தொழும் பெண்களின் துயரை துடைத்து, அவர்களின் சிரமங்களை போக்கி அருள்கிறாள். தான் கோயில் கொண்டுள்ள அல்லிகுண்டம் கிராம மக்கள் மட்டுமன்றி சுற்றுவட்டார மக்களுக்கும் காவல் தெய்வமாக திகழ்கிறாள். அல்லிகுண்டம் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகாவிலுள்ளது.
புராண முக்கியத்துவம் :
கண்டமனூர் ஜமீன்தாருக்கு பாதுகாவலனாக இருந்தவர் நல்லத்தேவன். நல்லதேவனிடம் வரிவசூல் பணத்தை மதுரைமன்னர் திருமலை நாயக்கருக்கு மாதாமாதம் குதிரையில் சென்று கட்டி
வரும் பொறுப்பை கண்டமனூரு ஜமீன் ஒப்படைத்தார். மாதம், மாதம் மதுரைக்கு சென்று மன்னரிடம் வரிப்பணத்தை செலுத்திவிட்டு வரும்போது, உரப்பனூரில் மாடு மேய்த்துக்கொண்டிருந்த அழகான இளமங்கை சிவனம்மாளை கண்டான். அவளை மணமுடிக்கும் பொருட்டு, நல்லதேவன் சிவனம்மாள் பெற்றோரிடம் பெண் கேட்டான். ஒரே இனத்தைச் சேர்ந்தவனாக இருந்தபோதும் நல்லதேவனுக்கு பெண் கொடுக்க மறுத்து விட்டனர். ஒருநாள் மன்னரிடம் வரியை செலுத்திவிட்டு வரும்போது உரப்பனூரில் வயல்பகுதியில் இருந்த சிவனம்மாளை குதிரையில் தூக்கிகொண்டு கண்டமனூர் சென்று திருமணம் செய்து கொண்டான்.
கண்டமனூரில் நடைபெற்ற மிகப்பெரிய திருவிழாவில் ஜமீனின் தலைமையில் வழுக்குமரம் ஏறும் போட்டி நடைபெற்றது. அதில் ஏராளமானோர் போட்டியில் கலந்து கொண்டு மரம் ஏறமுடியாமல் தோற்றனர். நல்லதேவன் எண்ணெய் தடவிய வழுக்குமரத்தில் ஏறத்துவங்கினான். பலமுறை வழுக்கியும் தொடர்ந்து முயற்சித்து அதன் உச்சியிலுள்ள பொற்காசுகள் முடித்துள்ள துணியை எடுத்தான். அந்த நேரம் கூட்டத்தின் பின்னே இருந்த ஒருவன் ஈட்டியில் விஷம் தடவி நல்லதேவன் முதுகை நோக்கி வீசினான். விஷம் தடவிய ஈட்டி என்பதால் சிறிது நேரத்திலேயே துடிதுடித்து இறந்தான்.
இறந்த நல்லதேவன் உடலை எரிக்க ஜமீன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டது. சிவனம்மாள் நல்லதேவன் இறந்தபின்பு ‘‘அவரில்லாமல் என்னால் வாழ முடியாது. அவர் உடம்பில் எரியும் என்னையும் எரிக்கட்டும்’’ என்றாள். இது உடன்கட்டை ஏறுவது. அவ்வளவு சுலபமில்லை. என்றனர். மதுரை மன்னரிடம் சென்று உடன்கட்டை ஏற அனுமதி பெற்று, அதற்கான தீக் கங்குகள் வாங்கி வரவேண்டும், அதுவும் உனது சேலை முந்தானையில் கொண்டு வரவேண்டும் முடியுமா’’ என்றனர். ‘‘சரி’யெனக்கூறி சிவனம்மாள் மதுரை மன்னரைக்காணச் சென்றாள்.
மதுரை மன்னரிடம் அனுமதி பெற்றாள். தீக்கங்குகள் கேட்டாள், சேலை தீப்பற்றுமே என்றனர். ‘‘என் கணவன் மீது நான் கொண்டு பதிபக்தி உண்மையானால், நான் உத்தமி என்பது உண்மையானால், என் குலசாமி சின்னக்கருப்பன் சக்தி உள்ள தெய்வம்தான் என்பது உண்மையானால் சேலையில் போட்ட தீ கங்கு,
என் உடல் மீது பற்றும் வரை படாராமலும், அணையாமலும் இருக்கும். போடுங்கள் தீக்கங்கை’’ என்றாள். அரண்மனை ஊழியர் தீக்கங்கை போட, அதை முந்தானையில் வாங்கி கொண்டு நல்லதேவன் இறந்து கிடக்கும் கண்டமனூருக்கு கொண்டுவந்த தீக்கங்குகளை போட்டு விட்டு சிவனம்மாள் உடன் கட்டை ஏறினாள். இரண்டு உடல்களும் எரிந்து சாம்பலானது. சிவனம்மாள் தீக்கங்குகள் கொண்டுவந்த முந்தானை மட்டும் தீயில் வேகாமல் புத்தம்புதியதாக இருந்தது. அதனைக்கண்டு பிரமித்துபோனார்கள். ஊர் மக்கள் சிவனம்மாளையும் தெய்வமாக வைத்து வழிபட தீயில் எரிந்து போகாத முந்தானையையும், அவர்களது அஸ்தியையும் வைத்து வழிபட்டார்.
நம்பிக்கைகள்:
சிவனம்மாளை வணங்கி வழிபட்டால் புத்திர பாக்கியம் மற்றும் துன்பங்கள் நீங்கி குடும்பங்கள் சிறந்து விளங்கும் என்பது இவர்களின் முழுமையான நம்பிக்கையாக உள்ளது.
திருவிழாக்கள்:
இந்த கோயிலில் மாசி மாதம் சிவராத்திரியையொட்டி 3 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது.
காலம்
500-1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
அல்லிகுண்டம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
மதுரை
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை