Saturday Jan 18, 2025

அருள்மிகு ஸ்ரீ ராமநாதேஸ்வரா் திருக்கோயில், எசலாம்

முகவரி

அருள்மிகு ஸ்ரீ ராமநாதேஸ்வரா் திருக்கோயில், எசலாம் – 605 203, விக்கிரவண்டி, விழுப்புரம் மாவட்டம்

இறைவன்

இறைவன்: ஸ்ரீராமநாதேஸ்வரா் இறைவி: ஸ்ரீதிரிபுரசுந்தரி

அறிமுகம்

அவர்கள் எழுப்பிய ஆலயங்களை நினைவுகூரும்போது நம் மனத்தில் பிரமாண்டமாக எழுந்துநிற்பவை தஞ்சை பெரிய கோயிலும் கங்கைகொண்ட சோழீச்வரமும். கடலிலே கலங்கள் செலுத்தி கடாரத்துடன் சுமத்திரா மற்றும் ஜாவாத் தீவுகளை வென்று மாபெரும் வெற்றிக்கனிகளைப் பறித்த மாமன்னன் ராஜேந்திரனால், சிவபெருமானுக்காக கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரமாண்டமாக நிர்மாணிக்கப்பட்ட கற்றளிதான் கங்கைகொண்ட சோழீச்சரம்.இந்தப் பெருங்கோயிலை இந்த மன்னனே இன்ன காரணத்துக்காக எழுப்பினான் எனும் அரிய தகவலை உலகுக்குச் சொன்னது வேறொரு கோயில். ஆம்! விழுப்புரம் மாவட்டம் எசாலம் எனும் ஊரிலுள்ள இந்தக் கோயிலின் செப்பேடுகள் மூலமே மேற்காணும் தகவலை ஆய்வாளர்கள் அறிந்துகொண்டார்கள். இந்தச் செப்பேடுகள் அளித்த தகவலே கங்கை கொண்ட சோழபுரத்துக் கோயிலைப் பற்றிய முதற் குறிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

புராண முக்கியத்துவம்

எசாலம் எனும் இவ்வூரில் அருள்மிகு விராமீஸ்வரமுடைய மகாதேவர் எனும் திருப்பெயரில் ஈசனுக்குக் கோயில் அமைத்தவர், ராஜேந்திர சோழனின் குருவான சா்வசிவ பண்டிதா் ஆவார். ராஜேந்திரன் தனது 15-ம் ஆட்சியாண்டில் நன்னாடு, ஏா்ப்பாக்க மான விக்கிரசோழநல்லூா் ஆகிய ஊா்களை இந்தக் கோயிலுக்கு இறையிலியாக வழங்கி ஆணையிட்டுள்ளார். எசாலம் கிராமமும் அந்தக் கிராமத்தின் நடுநாயகமாக அமைந்துள்ள ஸ்ரீராமநாதேஸ்வரா் ஆலயமும் ஆரவாரமின்றி அமைதி நிறைந்து திகழ்கின்றன. இவ்வூருக்கு அருகில் எண்ணாயிரம், பிரம்மதேசம் போன்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க ஊா்கள் அமைந்துள்ளன. மேலும் எசாலம் அருகே பல்லவா் காலக் குடைவரைக் கோயில்களான மண்டகப்பட்டு மற்றும் தளவானூா் போன்ற தலங்களும் பல்லவா் காலக் கட்டடக் கலைக்குச் சான்றாக விளங்கும் பனைமலை தாளகிரீசுவரா் கோயிலும் அமைந்துள்ளதால், மிகவும் தொன்மைச் சிறப்பு வாய்ந்ததாக இப்பகுதி விளங்குகிறது. இக்கோயிலின் கல்வெட்டுகளில் இத்தலம் திருவிராமீசுவரமுடைய மகாதேவா் கோயில் என்றும், இவ்வூரின் பெயர் `எய்தார்’ எனவும் `எதார்’ எனவும் குறிப்பிடப்பட்டுள்ளன. `ஜெயங்கொண்ட சோழ மண்டலத்துப் பனையூா் நாட்டுத் தனியூா்’ என இவ்வூர் தனிச் சிறப்புடன் திகழ்ந்துள்ளது. மேலும் ஸ்ரீராஜராஜ சதுா்வேதி மங்கலம் என்றும் இவ்வூர் வழங்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் காணப்படும் முதலாம் ராஜேந்திரன், ராஜாதி ராஜன், முதலாம் குலோத்துங்கன், இரண்டாம் ராஜராஜன், முதலாம் கோப்பெருஞ்சிங்கன் காலத்துக் கல்வெட்டுகள் மூலம், இந்த மன்னா்களின் காலத்தில் இங்கு வெகுசிறப்பாக வழிபாடுகள் நடைபெற்றுள்ளதை அறியமுடிகிறது. மகாமண்டபத்தின் வடதிசையில் தெற்கு முகமாக அம்பாள் ஸ்ரீதிரிபுரசுந்தரி சந்நிதி கொண்டிருக்கிறாள். இந்த அம்பிகையைக் கேதாரி அம்மன் என்றும் வணங்குகின்றனா். சதுா்புஜங்களோடு மேலிரு கரங்களில் தாமரை மலா்களையும், கீழிரு கரங்களில் அபய, வரத முத்திரைகளைத் தாங்கியும் அருள்கிறாள் அம்பிகை. இவளின் விழிகளில் தவழும் அன்பும் கருணையும் நம் மனத்தைக் கொள்ளை கொள்கின்றன. கோயிலில் ஈசன் மற்றும் அம்பிகை சந்நிதிக்குச் செல்வதற்கான படிகள் மகாமண்டபத்தின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளன. திருப்பணியின்போது இந்த இடத்துக்கு அருகில் தென்கிழக்குப் பகுதியில் செப்பேடும் செப்புத் திருமேனிகளும் கிடைத்தனவாம். செப்புத் திருமேனிகளில் ஒன்று சின்முத்திரையுடன் உச்சிக்குடுமியுடன் காட்சி தந்தது. இதுவும் சா்வசிவ பண்டிதரின் திருவுருவச் சிற்பமாக இருக்கலாம் என வரலாற்று ஆய்வாளா்கள் கருதுகின்றனா். சுமாா் 1000 ஆண்டுகள் புராதனப் பெருமையுடன் திகழும் இக்கோயிலுக்கு பாண்டியா், விஜயநகர மன்னர்கள், செஞ்சி நாயக்கர்கள், மராட்டிய அரசர்கள் ஆகியோர் காலத்திலும் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன. கோயிலுக்கு வெளிப்புறத்தில் சாலையில் ஒரு சிலை காணப்படுகிறது. உருவத்தில் ஐயனாரைப் போன்று திகழும் அந்த மூர்த்தியை `கல்வராயன் சிலை’ என்கிறார்கள் மக்கள்

நம்பிக்கைகள்

ஒருமுறை எசாலம் ஊரிலுள்ள கால்நடைகளை இனம் காண இயலாத நோய் தாக்கியதாம். எவ்வித மருத்துவம் செய்தும் நோய் குணமாகவில்லையாம். இந்த நிலையில், ஊரில் ஒருவருக்கு அருள் வந்தது. `கோயிலுக்கு வெளியிலுள்ள சிலைக்குத் தண்ணீரால் அபிஷேகம் செய்து, அபிஷேக நீரைக் கால்நடைகளுக்கு அருந்தக் கொடுத்தால் நோய் நீங்கும்’ என்று அவர் அருள்வாக்கு சொன்னார். மக்களும் அப்படியே செய்து அபிஷேக தீர்த்தத்தைக் கால்நடைகளுக்கு அளிக்க, நோய் குணமானது. அதுமுதல் இவ்வூரிலும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் கால்நடைகளுக்கு எதேனும் நோய் ஏற்பட்டால், இங்கு வந்து கல்வராயனை அபிஷேகித்துத் தீர்த்தம் கொண்டு சென்று கால்நடைகளுக்குத் தருவது வழக்கமாகிவிட்டது.இந்த ஸ்வாமிக்குப் பாலும் எண்ணெய்யும் கொண்டு அபிஷேகம் செய்தால், அஸ்வமேத யாகம் செய்த புண்ணியம் கிடைக்கும். அதன் மூலம் பதவி யோகம் வாய்க்கும்; உயா் பதவிகளை அடையலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

சிறப்பு அம்சங்கள்

கோயில் மகாமண்டபத்தின் கீழ்திசைச் சுவரில் நவ துவாரச் சாளரம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் தைத்திங்கள் முதல் நாள் அன்று சூரியக் கதிர்கள் இந்தச் சாளரத்தின் வழியே உள்நுழைந்து ஸ்வாமியின் மீது விழுந்து வணங்கும்படி நிர்மாணித்துள்ளார்கள். சாளரத்தின் மேலேயுள்ள மூன்று துவாரங்களுக்கு அருகில் கூப்பிய கரத்துடன் சிற்பம் ஒன்று திகழ்கிறது. இக்கோயிலை நிர்மாணித்த சா்வசிவ பண்டிதராக இருக்கலாம் என்பது ஆய்வாளர்களின் கருத்து. ஸ்வாமி சந்நிதி பலிபீடமும் சிற்ப நுட்பத்துடன் திகழ்வது சிறப்பு.

காலம்

1000 – 2000

நிர்வகிக்கப்படுகிறது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

பேரணி

அருகிலுள்ள இரயில் நிலையம்

விழுப்புரம்

அருகிலுள்ள விமான நிலையம்

பாண்டிச்சேரி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top