அருள்மிகு மாயூரநாதசுவாமி திருக்கோயில், மயிலாடுதுறை
முகவரி
அருள்மிகு மாயூரநாதசுவாமி திருக்கோயில், மயிலாடுதுறை – 609 001. நாகப்பட்டினம் மாவட்டம். போன்: +91- 4364 -222 345, 223 779, 93451 49412 ,223 207
இறைவன்
இறைவன்: மயூரநாதசுவாமி இறைவி: அபயாம்பிகை
அறிமுகம்
மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள சிவத்தலமாகும். ஒன்பது நிலையுள்ள ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது கோயிலின் இடது புறம் குளம் உள்ளது. அடுத்துள்ள கோபுரம் மூன்று நிலைகளைக் கொண்டுள்ளது. அடுத்து காணப்படும் மண்டபத்தில் இடப்புறம் கணபதி சன்னதி உள்ளது. அச்சன்னதியின் முன்பாக மூஞ்சுறு, பலிபீடம் உள்ளன. இடப்புறம் சுப்பிரமணியர் சன்னதி உள்ளது. இந்த மண்டபத்தில் பலிபீடம், நந்தி, இரு கொடி மரங்கள் உள்ளன. அடுத்துள்ள நுழைவாயிலைக் கடந்ததும் வலப்புறம் அதிகார நந்தி உள்ளது. திருச்சுற்றில் பதஞ்சலி, வியாக்ரபாதர், சேக்கிழார், ஞானசம்பந்தர், நாவுக்கரசர், விநாயகர், சப்தமாதர், 63 நாயன்மார்களின் செப்புத்திருமேனிகள், 63 நாயன்மார்கள், சகஸ்ரலிங்கம், நாயகர், இந்திரலிங்கம், அக்கினிலிங்கம், எமலிங்கம், நிருதிலிங்கம், விஷ்ணுலிங்கம், வருணலிங்கம், வாயுலிங்கம், பிரம்மலிங்கம், மகாலட்சுமி, அஷ்டலட்சுமி ஆகியோர் உள்ளனர். மூலவராக மயூரநாதர் உள்ளார். கருவறையின் இடப்புறம் திருமுறைக்கோயில் உள்ளது, தொடர்ந்து நடராஜர் சன்னதி காணப்படுகிறது. கருவறை கோஷ்டத்தில் விநாயகர், நடராஜர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை உள்ளனர். திருச்சுற்றில் விநாயகர் சன்னதி, சுப்ரமணியர் சன்னதி, சண்டிகேஸ்வரர் சன்னதி ஆகிய சன்னதிகள் உள்ளன. வெளிச்சுற்றில் இடப்புறம் நாதசர்மா சன்னதி உள்ளது. அச்சன்னதிக்கு முன்பாக நந்தியும் பலிபீடமும் உள்ளன. அடுத்து அனவியதாம்பிகை சன்னதி உள்ளது. அம்மன் சன்னதியின் திருச்சுற்றில் வாகனங்கள்,விநாயகர், லிங்கோத்பவர், வள்ளிதெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், வரசித்தி விநாயகர், ஆடிப்பூர அம்மன் ஆகியோரின் சன்னதிகள் உள்ளன. அம்மன் சன்னதிக்கு எதிர் புறமாக ஆதிமயூரநாதர் சன்னதி உள்ளது. அச்சன்னதிக்கு முன்பாக பலிபீடமும், நந்தியும் உள்ளன. வலப்புறம் கணபதியும், இடப்புறம் சுப்ரமணியரும் உள்ளனர். தலமரம் : வன்னி தீர்த்தம் : பிரம தீர்த்தம்
புராண முக்கியத்துவம்
பார்வதியை மகளாக பெற்ற தட்சன், ஒரு யாகம் நடத்தினான். அதற்கு சிவனை அழைக்கவில்லை. எனவே, அம்பாளையும் யாகத்திற்கு செல்ல வேண்டாமென கூறிவிட்டார் சிவன். மனம் பொறுக்காத பார்வதிதேவி யாகத்திற்கு சென்றாள். சிவன், வீரபத்திர வடிவம் எடுத்து யாகத்தை அழித்தார். அப்போது, யாகத்தில் பயன் படுத்தப்பட்ட மயில் ஒன்று அம்பாளின் பாதத்தை சரணடையவே, அதற்கு அடைக்கலம் கொடுத்து காத்தாள் அம்பாள். தன் சொல்லை மீறி, யாகத்திற்கு வந்ததால் அம்பாளை, மயில் வடிவம் எடுக்கும்படியாக தண்டித்தார் சிவன். மயிலாக மாறிய அம்பாள் இத்தலத்திற்கு வந்தாள். சிவனை வேண்டி தவமிருந்தாள். அவளை பிரிய மனமில்லாத சிவனும், மயில் வடிவத்திலேயே இங்கு வந்தார். அம்பாளின் பூஜையில் மகிழ்ந்து கௌரிதாண்டவ தரிசனம் தந்ததோடு, அம்பாளின் சுயரூபம் பெறவும் அருள் செய்தார். மயிலாக வந்து அருள் செய்ததால், “மாயூரநாதர்’ என்றும் பெயர் பெற்றார்.
நம்பிக்கைகள்
செய்த தவறுக்கு மனம் வருந்தி, மன்னிப்பு வேண்டுபவர்கள் காவிரியில் நீராடி சிவனை வழிபட்டு மனஅமைதி பெறலாம். இங்கு நடனம் பயில்பவர்கள் அதிகளவில் வேண்டிக்கொள்கிறார்கள்.
சிறப்பு அம்சங்கள்
இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 102 வது தேவாரத்தலம் ஆகும். மயில் வடிவில் சிவன், அம்பாள்: இக்கோயிலில் ஆதி மாயூரநாதருக்கு பிரகாரத்தில் தனி சன்னதி இருக்கிறது. இங்கு சுவாமி லிங்கமாக இருக்க, அருகில் அம்பாள் மயில் வடிவில் அவரை வழிபட்ட கோலத்தில் இருக்கிறாள். சுவாமி சன்னதிக்கு பின்புறத்தில் உள்ள முருகனைக் குறித்து அருணகிரியார் பதிகம் பாடியிருக்கிறார். பெரும்பாலான சிவாலயங்களில் கந்த சஷ்டியின்போது, முருகன் அம்பாளிடம்தான் வேல் வாங்குவார். ஆனால், இத்தலத்தில் சிவனிடம் வேல் வாங்குவது விசேஷம். சிவனது கௌரி தாண்டவத்தை, “மயூரதாண்டவம்’ என்றும் சொல்கிறார்கள். இந்த நடராஜர் தனி சன்னதியில் இருக்கிறார். தினமும் மாலையில் இவருக்குத்தான் முதல் பூஜை செய்யப்படுகிறது. இவருக்கு நேரே மயிலம்மன் சன்னதி இருக்கிறது. இதில் அம்பாள், சிவன் இருவரும் மயில் வடிவத்தில் இருக்கின்றனர். ஐப்பசி விழாவில் சிவன், அம்பாளுக்கு நடனக்காட்சி தந்த நிகழ்ச்சி நடக்கிறது. கோஷ்டத்திலுள்ள தெட்சிணாமூர்த்தியின் சிற்பத்தில் ஆலமரத்தில் இரண்டு மயில் மற்றும் குரங்குகள் இருப்பது போல அமைக்கப்பட்டிருப்பது விசேஷமான அமைப்பு. இவருக்கு கீழே நந்தியும் இருக்கிறது. சேலை கட்டிய சிவன்: நாதசர்மா, அனவித்யாம்பிகை எனும் தம்பதியர் ஐப்பசி கடைசிகட்ட துலா ஸ்நானத்திற்காக இத்தலத்திற்கு வந்தனர். அவர்கள் வருவதற்குள் 30ம் நாள் ஸ்நானம் முடிந்து விட்டது. எனவே, வருத்தத்துடன் இங்கு சிவனை வேண்டி தங்கினர். அன்றிரவில் நாதசர்மாவின் கனவில் தோன்றிய சிவன், மறுநாள் அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு நீராடினாலும், பாவம் நீங்கி புண்ணியம் கிடைக்கும் என்றார். அதன்படியே மறுநாள் அத்தம்பதியர் காவிரியில் மூழ்கி பாவம் நீங்கப்பெற்றனர். இதன் அடிப்படையில் கார்த்திகை முதல்நாளன்று, அதிகாலையிலும் இங்கு நீராடும் வழக்கம் இருக்கிறது. தம்பதியர்களுக்காக சிவன் வழக்கமான நேரத்தை முடக்கி வைத்ததால் இதனை, “முடவன் முழுக்கு’ என்கின்றனர். அத்தம்பதியர் இக்கோயிலில் சிவனுடன் ஐக்கியமாயினர். நாதசர்மா ஐக்கியமான லிங்கம் மேற்கு பார்த்தபடி, அவரது பெயரிலேயே இருக்கிறது. அவரது மனைவி ஐக்கியமான லிங்கம், அம்பாள் சன்னதிக்கு வலப்புறத்தில் “அனவித்யாம்பிகை’ என்ற பெயரில் இருக்கிறது. இந்த லிங்கத்திற்கு சிவப்பு நிற சேலைதான் கட்டுகின்றனர். ஆணும், பெண்ணும் சமம் என்பதை இந்த வடிவம் உணர்த்துவதாக சொல்கிறார்கள். இவரது சன்னதி கோஷ்டத்தில் உள்ள தெட்சிணாமூர்த்தி சற்றே இடப்புறம் சாய்ந்து, இடது காலை மடித்து வைத்தபடி காட்சி தருகிறார். ஆடிப்பூர அம்பாள்: தன்னை நாடி வந்த மயிலை காத்தவள் என்பதால், “அபயாம்பிகை’ என்று அம்பாள் அழைக்கப்படுகிறாள். இவள் வலது கையில் கிளியுடன் இருக்கிறாள். ஆடிப்பூர அம்பாள், வீரசக்தி வடிவமாக தனிச்சன்னதியில் இருக்கிறாள். இவள் ஆடிப்பூரத்தன்றும், ஆடி வெள்ளிக்கிழமைகளிலும் காவிரிக்கரையில் எழுந்தருள்கிறாள். பிரகாரத்தில் சந்தன விநாயகர் சன்னதி இருக்கிறது. ஆரம்ப காலத்தில் இங்கிருந்த சந்தன மரத்தில் உருவான விநாயகர் இவர். அகத்தியரால் வழிபடப்பட்டவர் என்பதால் இவரை, “அகத்திய சந்தன விநாயகர்’ என்றும் அழைக்கிறார்கள். துலாஸ்நானம்: சிவன், இத்தலத்தில் நந்தியின் கர்வத்தை போக்கி அருள் செய்தாராம். இந்த நந்தி காவிரியின் நடுவில் இருக்கிறது. இந்த தீர்த்தமும் “இடபதீர்த்தம்’ எனப்படுகிறது. ஐப்பசி மாதத்தின் 30 நாட்களும், கார்த்திகை முதல் நாளிலும் இவ்விடத்தில் நீராடி வழிபடுவது விசேஷம். இந்நாட்களில் தினமும் சுவாமி தீர்த்தக்கரைக்கு எழுந்தருளுகிறார். கங்கை, இங்கு நீராடிதான் தன் பாவங்களை போக்கிக்கொண்டதாம். இந்நாள் ஐப்பசி அமாவாசையாக (தீபாவளி) கருதப்படுகிறது. அன்று நீராடினால் பாவங்கள் நீங்கி, புண்ணியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. சனி சிறப்பு: இக்கோயில் பிரகாரத்தில் நவக்கிரக சன்னதியில் உள்ள சனிபகவான், தலையில் அக்னியுடன் “ஜுவாலை சனி’யாக இருக்கிறார். இவருக்கு அருகில் தனியே சனீஸ்வரர் காகத்தின் மீது அமர்ந்து வடக்கு திசையை நோக்கி, சிவலிங்க பூஜை செய்தபடி இருக்கிறார். இந்த அமைப்பை காண்பது அபூர்வம். சனி தோஷம் உள்ளவர்கள் இங்கு வேண்டிக்கொண்டால் சனியின் பார்வை குறையும் என்பது நம்பிக்கை. ஐந்து பிரகாரங்களுடன் அமைந்த தலம் இது. இங்கு கோஷ்டத்தில் உள்ள நடராஜரின் பாதத்திற்கு அருகில், ஜுரதேவர் இருப்பது வித்தியாசமான அமைப்பு. இவருக்கு அருகில் ஆலிங்கன மூர்த்தி இருக்கிறார். துர்க்கையம்மனின் காலுக்கு கீழே மகிஷனும், அருகில் இருபுறமும் இரண்டு அசுரர்கள் இருக்கின்றனர். துர்க்கையின் இந்த வடிவத்தை காண்பது அரிது. இங்கு சிவ சண்டிகேஸ்வர் மற்றும் தேஜஸ் சண்டிகேஸ்வரர் இருவரும் ஒரே சன்னதியில் இருக்கின்றனர். பிரகாரத்தில் அஷ்டலட்சுமியும், அதற்கு மேலே சட்டைநாதரும் இருக்கின்றனர். சிவலிங்கத்தை பூஜிக்கும் மகாவிஷ்ணு தனியே இருக்கிறார். இத்தலத்தில் ஐக்கியமான குதம்பை சித்தருக்கு சன்னதி உண்டு. இங்குள்ள கணக்கடி விநாயகரிடம் வேண்டிக்கொண்டால் கணக்குகளை சிறப்பாக பார்த்துக் கொள்வார் என்பது நம்பிக்கை.
திருவிழாக்கள்
வைகாசியில் பிரம்மோற்ஸவம், ஐப்பசியில் துலா ஸ்நானம் விசேஷம், ஆடி கடைசி வெள்ளியில் லட்சதீபம்.
காலம்
1000-2000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத்துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மயிலாடுதுறை
அருகிலுள்ள இரயில் நிலையம்
மயிலாடுதுறை
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி