Thursday Dec 26, 2024

அருள்மிகு மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில் – மகம் நட்சத்திரம்

முகவரி

அருள்மிகு மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில், விராலிப்பட்டி, ஒடுக்கம் தவசி மேடை-624 304 நத்தம் வழி, திண்டுக்கல் மாவட்டம். Phone: +91 93624 05382

இறைவன்

இறைவன் – மகாலிங்கேஸ்வரர் இறைவி – மரகதவல்லி, மாணிக்கவல்லி

அறிமுகம்

சிவராத்திரியை ஒட்டி 30 நாட்களும் சூரியஒளி மூலவர் மீது படும். காலையில் சூரியனின் ஒளிக்கதிர்கள் சிவன் மீதும், மாலையில் பைரவர் மீதும் விழுவது சிறப்பு. மகம் நட்சத்திரத்திற்குரிய சிறப்பான ஆலயம் இது. மக நட்சத்திரம் தவிர மற்ற 26 நட்சத்திரக்காரர்களும் வணங்கி வழிபட்டு சகல சவுபாக்கியங்களையும் பெறக்கூடிய சிறப்பு பெற்றது. பொதுவாக, ஒரு சன்னதிக்குள் ஒரு அம்பிகைதான் இருப்பாள். ஆனால், இங்கு ஒரே சன்னதிக்குள் மாணிக்கவள்ளி, மரகதவள்ளி என்ற இரண்டு அம்பிகைகள் இச்சா சக்தியாகவும், கிரியா சக்தியாகவும் அருள்பாலிக்கின்றனர். இங்குள்ள சிவலிங்கம் வசிஷ்ட மகரிஷியால் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பரத்வாஜ மகரிஷியால் பூஜிக்கப்பட்டது. பரத்வாஜ கோத்திரத்தில் பிறந்தவர்கள் அவசியம் வழிபட வேண்டிய தலம் இது. அகத்தியர் முதல் பல ஆயிரம் சித்தர்கள், மகரிஷிகள், மற்றும் முனிவர்களும் தவமியற்றி வழிபட்ட லிங்கம். ராமர் தன் பரிவாரங்களுடன் பரத்வாஜ மகரிஷியை தரிசித்து விருந்துண்ட தலம். இங்குள்ள பைரவர் ஈசனுக்கு நேர் எதிரே ஆதிபைரவராக அருள்பாலிக்கும் சிறப்புப் பெற்ற ஒரே ஸ்தலம். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பரத்வாஜகோத்திரத்தில் பிறந்தவர்களும் தங்களது ஆயுள்காலத்தில் அடிக்கடியோ, அல்லது மகம் நட்சத்திரத்தன்றோ வழிபட வேண்டிய திருத்தலம். மகம் நட்சத்திரக்காரர்களின் பொது குணம்: ஆராய்ச்சி மனப்பான்மை கொண்ட இவர்கள், கல்வி பயில்வதில் ஆர்வம் கொண்டிருப்பர். தருமம் செய்வதில் வல்லவர்கள். மனத்தூய்மை, நேர்மை மிக்கவர்கள். பிறரை கவுரவமாக நடத்துவர். மதுரமான மொழி பேசுவதோடு பேச்சு சாதுர்யமும் பெற்றிருப்பர். பெரும்பாலும் தலைமைப்பதவியில் தான் இருப்பர்.

புராண முக்கியத்துவம்

இரண்டு அம்பிகையர்: அளவில் சிறிய இக்கோயிலில், மகாலிங்கேஸ்வரர் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இவருக்கு வலது பக்கத்தில் உள்ள சன்னதியில் மரகதவல்லி, மாணிக்கவல்லி என்ற இரண்டு அம்பிகையர் காட்சி தருகின்றனர். மதுரையில் அருளும் மீனாட்சியம்மனின் பெயரால் இவர்களுக்கு இப்பெயர் சூட்டப்பட்டது. கிழக்கு நோக்கிய இந்த சன்னதிக்குள், அம்பாள்கள் இருவரும் தெற்கு நோக்கி மதில் ஓரத்தில் உள்ளனர். சன்னதிக்குள் எட்டிப்பார்த்துதான் இவர்களைத் தரிசிக்க முடியும். இத்தகைய அமைப்பிலான சன்னதியைக் காண்பது அரிது. இச்சா சக்தி, கிரியா சக்தியாக அருள்பாலிக்கும் இந்த அம்பிகையரை வழிபட்டால், ஞான சக்தியான இறைவனை எளிதாக அடையலாம் என்பதை உணர்த்தும் வகையில் இவ்வாறு அமைத்துள்ளனர். பரத்வாஜர் ஒரு தவமேடையில், யோகத்தில் மனதை ஒடுக்கி சிவனை வழிபட்டார். இதனால் இத்தலத்திற்கு, ஒடுக்கம் தவசி மேடை என்ற பெயர் ஏற்பட்டது. இத்தலத்தில் எப்போதும் யோகிகளும், தபஸ்விகளும் சிவனை அரூபமாக பூஜை செய்து வருகின்றனர். பெண்களால் இவர்களுக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்பதால் தான், அம்மன் வெளியே தெரியாமல் சுவரை ஒட்டி அருள்பாலிப்பதாக தல வரலாறு கூறுகிறது. சிவாலயங்களில் ஈசான்ய (வடகிழக்கு) திசையில் காட்சி தரும் பைரவர், இங்கு சிவனுக்கு எதிரில் காட்சியளிக்கிறார். இங்கு அருளும் மகாலிங்கேஸ்வரர் மிகவும் சக்தி வாய்ந்தவர் என்பதால், இவரது உக்ரம் பக்தர்களைத் தாக்காமல் இருக்க எதிரில் பைரவரை பிரதிஷ்டை செய்துள்ளனர். இவரை ஆதி பைரவர் என்கின்றனர். பைரவருக்குப் பின்புறம் தலைக்கு மேலே சிறிய துளை ஒன்றுள்ளது. இங்கு வரும் பக்தர்கள் முதலில் இந்த துளை வழியாக, சிவனை தரிசித்து விட்டு, பின்பு பைரவரை வணங்கி, அதன்பின்பு கோயிலுக்குள் செல்கிறார்கள். சிவராத்திரியை ஒட்டி 30 நாட்களும் சூரியஒளி மூலவர் மீது படும். காலையில் சூரியனின் ஒளிக்கதிர்கள் சிவன் மீதும், மாலையில் பைரவர் மீதும் விழுவது சிறப்பு.

நம்பிக்கைகள்

மகம் நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர். மாசி மகத்தன்று சிவன், அம்பாளுக்கு விசேஷ பூஜை நடக்கும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், இந்நாளில் வேண்டிக் கொள்வது விசேஷம். நோய் நிவர்த்தி பெற, சிவன் சன்னதியில் நெய்தீபம் ஏற்றி வைத்து வழிபடுகிறார்கள். வீடுகளில் வாஸ்து குறைபாடு உள்ளவர்கள் அந்தக் குறை நீங்கவும் சிறப்பு பூஜை செய்கிறார்கள்.

சிறப்பு அம்சங்கள்

சிவராத்திரியை ஒட்டி 30 நாட்களும் சூரியஒளி மூலவர் மீது படும். காலையில் சூரியனின் ஒளிக்கதிர்கள் சிவன் மீதும், மாலையில் பைரவர் மீதும் விழுவது சிறப்பு. பொதுவாக, ஒரு சன்னதிக்குள் ஒரு அம்பிகைதான் இருப்பாள். ஆனால் இங்கு இரு அம்பிகைகள் இருக்கிறார்கள். கோயில் முகப்பில் இரண்டு பீடங்கள் உள்ளன. சிவனை தரிசிக்க வரும் அடியார்களின் பாதம் தன் மீது படவேண்டும் என்பதற்காக பரத்வாஜர் இந்த பீடங்களின் வடிவில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

திருவிழாக்கள்

இத்தலத்தில் மாசி மக திருவிழா விசேஷமாக நடக்கும்.

காலம்

1000-2000 வருடங்களுக்கு முன்

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திண்டுக்கல்

அருகிலுள்ள இரயில் நிலையம்

திண்டுக்கல்

அருகிலுள்ள விமான நிலையம்

மதுரை

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top