அருள்மிகு மகாலட்சுமீஸ்வரர் திருக்கோயில் – அனுஷம் நட்சத்திரம்
முகவரி
அருள்மிகு மகாலட்சுமீஸ்வரர் திருக்கோயில், திருநின்றியூர் எஸ்.எஸ். நல்லூர் வழி, சீர்காழி தாலுக்கா, நாகப்பட்டினம் மாவட்டம். Phone: +91 4364 – 320 520
இறைவன்
இறைவன் – மகாலட்சுமீஸ்வரர் இறைவி – உலகநாயகி
அறிமுகம்
இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். கோயிலின் ராஜகோபுரம் 3 நிலை உடையது. தலத்தின் தலவிநாயகராக செல்வகணபதி அருள்பாலிக்கிறார். கோஷ்டத்தில் உள்ள தெட்சிணாமூர்த்தியின் காலுக்கு கீழே இருக்கும் முயலகன் இடது புறமாக திரும்பி கையில் நாகத்துடன் இருக்கிறான். சுவாமி, தன் இடது கையால் அவனுக்கு அருள் செய்யும் கோலத்தில் இருக்கிறார். பிரகாரத்தில் செல்வ விநாயகருக்கு சன்னதி உள்ளது. அனுஷம் நட்சத்திரத்தன்று இவருக்கு விசேஷ பூஜை செய்யப்படுகிறது. கடன் தொல்லை உள்ளவர்கள் இவரிடம் வேண்டிக்கொண்டால் தீர்வு ஏற்படும் என்பது நம்பிக்கை. சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானையுடன் வலது புறம் திரும்பிய மயில் வாகனத்துடன் இருக்கிறார். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அடிக்கடியோ, அனுஷம் நட்சத்திரத்திலோ, தங்களது பிறந்தநாளிலோ, திருமணநாளிலோ, துவாதசி, வரலட்சுமி நோன்பு ஆகிய நாட்களிலோ, இத்தல சிவனக்கு சந்தனக்காப்பிட்டு, அதில் மாதுளை முத்துக்களை பதித்து வழிபாடு செய்தால் வாழ்வு சிறக்கும். அனுஷம் நட்சத்திரக்காரர்களின் பொது குணம்: உற்றார் உறவினர்களிடம் செல்வாக்குடன் திகழ்வர். மேன்மையான அந்தஸ்து உள்ள பதவிகளில் வீற்றிருப்பர். அரசாங்கத்தில் பாராட்டு பெறும் யோகமுண்டு. பிறர் மனம், குணம் அறிந்து செயல்படுவதில் வல்லவர்கள். ஊர் ஊராகச் சுற்றும் குணம் கொண்ட இவர்கள், பிறரிடம் மனம் விட்டுப் பேச மாட்டார்கள்.
புராண முக்கியத்துவம்
பரசுராமர் தன்னுடைய தந்தை ஜமதக்னி முனிவரின் ஆணைப்படி தனது தாயார் ரேணுகாவைக் கொன்றார். பின் தனது தந்தையிடம் அன்னையை உயிர்ப்பிக்கும் படி வரம் வேண்டி தாயை உயிர்ப்பித்தார். தாயைக் கொன்ற தோஷம் நீங்குவதற்காக இத்தல இறைவனை வழிபட்டு தோஷம் நீங்கப்பெற்றார். ஜமதக்னி முனிவரும் தான் செய்த செயலுக்காக வருந்தி இத்தல இறைவனை வழிபட்டார். பரசுராமர் வழிபட்ட சிவன் பிரகாரத்தில் பரசுராமலிங்கம் என்ற திருநாமத்துடனும் ஜமதக்னி முனிவர் வழிபட்ட சிவன் ஜமதக்னீஸ்வரர் என்ற திருநாமத்துடனும் காட்சியளிக்கிறார்கள். அருகில் மகாவிஷ்ணுவின் சந்நிதியும் உள்ளது. மகாலட்சுமியும் இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்டு அருள் பெற்றதால் இத்தலத்து இறைவன் மகாலட்சுமீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இந்திரன், அகத்தியர், பரசுராமர், ஐராவதம், பசு, சோழ மன்னன் அனைவரும் இத்தல இறைவனை வழிபட்டு பேறுபெற்றவர்கள் ஆவர். சோழ மன்னன் ஒருவன் தினந்தோறும் சிதம்பரம் சென்று நடராஜரை வழிபடும் வழக்கம் உடையவன். அதன்படி மன்னன் தினமும் தனது படைகளுடன் இத்தலம் இருக்கும் காட்டு வழியே தான் செல்வான். தினமும் தீப்பந்தங்களுடன் இவ்வழியே செல்லும் போது தீப்பந்தங்கள் தானாகவே அணைந்து விடும். இந்த எல்லையைத் தாண்டியவுடன் தீப்பந்தங்கள் தானாகவே எரிய ஆரம்பிக்கும். இதே போல் தொடர்ந்து பல நாட்கள் நடைபெற்றது. அதற்கான காரணத்தை மன்னனால் கண்டறிய முடியவில்லை. பின்பு ஒரு நாள் காட்டில் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த ஒரு இடையனிடம் இவ்விடத்தில் ஏதேனும் விசேஷம் உள்ளதா என மன்னன் வினவினான். இடையன் பசுக்கள் இங்கு ஓரிடத்தில் தானாகவே பாலை கறப்பதைக் கண்டதாகக் கூறினான். மன்னன் இடையன் குறிப்பிட்ட இடத்தில் நிலத்தைக் கோடாரியால் தோண்ட இரத்தம் வெளிப்பட்டது. பின்பு மன்னன் ஒரு சிவலிங்கம் இருப்பதையும், அதன் பாணத்தின் மேல் பகுதியில் கோடாரி பட்டு இரத்தம் வருவதையும் கண்டு அதிர்ந்தான். அப்போது அசரீரி மூலம் இறைவன் தான் இருக்கும் இவ்விடத்தில் கோவில் கட்டுமாறு கூறினார். மன்னனும் சிவலிங்கம் இருந்த அதே இடத்தில் கோவிலைக் கட்டி வழிபட்டான் என்பது தல வரலாறு. இன்றும் சிவலிங்கத்தின் பாணத்தில் கோடரி வெட்டிய தழும்பு குழி போல இருப்பதைக் காணலாம். இத்தலத்தில் மூலவர் சுயம்பு லிங்கமாக உயர்ந்த பாணத்துடன் அருள்பாலிக்கிறார்.
நம்பிக்கைகள்
அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அடிக்கடியோ, அனுஷம் நட்சத்திரத்திலோ, தங்களது பிறந்தநாளிலோ, திருமணநாளிலோ, துவாதசி, வரலட்சுமி நோன்பு ஆகிய நாட்களிலோ, இத்தல சிவனக்கு சந்தனக்காப்பிட்டு, அதில் மாதுளை முத்துக்களை பதித்து வழிபாடு செய்தால் வாழ்வு சிறக்கும். பிரகாரத்தில் செல்வ விநாயகருக்கு சன்னதி உள்ளது. அனுஷம் நட்சத்திரத்தன்று இவருக்கு விசேஷ பூஜை செய்யப்படுகிறது. கடன் தொல்லை உள்ளவர்கள் இவரிடம் வேண்டிக்கொண்டால் தீர்வு ஏற்படும் என்பது நம்பிக்கை.
சிறப்பு அம்சங்கள்
இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். நவக்கிரகத்தில் உள்ள சூரியனும், சந்திரனும் ஒருவரையொருவர் நேரே பார்த்தபடி இருப்பது வித்தியாசமான அமைப்பு. அமாவாசை நாட்களில் முன்னோர்களின் ஆத்ம சாந்திக்காக இங்கு வேண்டிக்கொள்கிறார்கள். இக்கோயிலைச் சுற்றி மூன்று குளங்கள் இருப்பது விசேஷம். இத்தலத்து தீர்த்தத்தை “நீலமலர் பொய்கை” என்று சம்பந்தர் தனது பதிகத்தில் பாடியுள்ளார்.
திருவிழாக்கள்
ஆனித்திருமஞ்சனம், சிவராத்திரி, திருக்கார்த்திகை.
காலம்
1000-2000 வருடங்களுக்கு முன்
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத் துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
சீர்காழி
அருகிலுள்ள இரயில் நிலையம்
சீர்காழி
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி