Wednesday Dec 25, 2024

அருள்மிகு பொல்லாப்பிள்ளையார் கோயில், திருநாரையூர்

முகவரி

அருள்மிகு பொல்லாப்பிள்ளையார் கோயில் காட்டுமன்னார் கோயில், கடலூர், திருநாரையூர்-608 303, …

இறைவன்

பொல்லாப்பிள்ளையார்

அறிமுகம்

பொல்லாப்பிள்ளையார் சிதம்பரத்திலிருந்து 17 கி.மீ தொலைவிலும், காட்டுமன்னார் கோவிலிலிருந்து 8 கி.மீ தொலைவிலும்அமைந்துள்ளது திருநாரையூர் என்னும் திருத்தலம். இந்தத் திருத்தலத்தின் இறைவனின் திருநாமம் ஸ்ரீசௌந்தரேஸ்வரர். அம்பாள் ஸ்ரீதிரிபுரசுந்தரி. இங்கு ஆட்சி புரியம் பிள்ளையாருக்கு ‘பொண்ணாப் பிள்ளையார்” என்று பெயர். இவரை வணங்க அனைத்து நற்பலன்களும் கிடைக்கும். ஆறாம்படைவீடு திருநாரையூரில் இருக்கிறது. இந்த தலத்தில் `பொண்ணாப் பிள்ளையார்’ என்ற பெயரில் அருள் பாலிக்கிறார். சிற்பியின் உளியால் போள்ளப்படாமல் சுயம்புவாகத் தோன்றியவர்.

புராண முக்கியத்துவம்

இத்தலத்தில் ‘நம்பி ஆண்டார் நம்பி’ என்பார் வாழ்ந்து வந்தார். பன்னிரு சைவத் திருமுறைகளில், முதல் பதினோரு திருமுறைகள் வரைத் தொகுத்த அருளாளர். பதினோராம் திருமுறையின் சில தொகுப்புகளுக்கு இவர் ஆசிரியரும் கூட. திருநாரையூரில் உறையும் ‘பொல்லாப் பிள்ளையார்’ இவரின் குருவாக அமைந்தது ஒரு சுவையான வரலாறு. திருநாரையூரில் பொல்லாப் பிள்ளையார் ஆலயத்தில் அநந்தேச சிவாச்சாரியார் என்பவர் தினசரி பூசை செய்து வந்தார். வாசலில் இருந்த ஏழைகளுக்கு நைவேத்திய பிரசாதத்தை தானம் தந்து வீட்டுக்குப் புறப்பட்டார். வீட்டு வாசலில் அவருடைய செல்லமகன் நம்பி விளையாடிக் கொண்டிருந்தான். அப்பாவைப் பார்த்ததும் ஓடி வந்து கட்டிக் கொண்டான். “அப்பா! பிரசாதம் எல்லாம் எங்கே?” என்றான். “எல்லாத்தையும் பிள்ளையார் சாப்பிட்டு விட்டார்” என்று வேடிக்கையாகச் சொல்லிவிட்டு உள்ளே போனார் அநந்தேசர். தினசரி இதுபோலவே அவர் சொல்ல அதை முழுமையாக நம்பினான் சிறுவன் நம்பி. ஒரு நாள் அநந்தேசர் ஒரு கும்பாபிஷேகத்திற்காக வெளியூருக்குச் செல்ல வேண்டியிருந்தது. அதனால் மகனை அழைத்து, மறுநாள் கோவில் பூசைக்கு அவனை செல்லுமாறு கூறினார். மகனும் மகிழ்ந்து போனான். சிறுவன் நம்பி இரவு முழுதும் தூங்கவே இல்லை. பொழுது விடிந்ததும், அம்மாவிடம் அப்பம், அவல், பொரி, கொழுக்கட்டை என்று ஏராளமாகச் செய்யச் சொல்லி, எடுத்துக் கொண்டு சந்தோஷமாய்க் கோவிலுக்குச் சென்றான். சிறுவன் நம்பி பூசை செய்துவிட்டுப் பார்த்தால் பிரசாதமெல்லாம் அப்படியே இருந்தன. மனம் நொந்து போய் விட்டான் நம்பி. அழுகை வந்தது. “பிள்ளையாரே! என் அப்பா தந்தா மட்டும் சாப்பிடறே, நான் தந்தா சாப்பிட மாட்டியா? நீ சாப்பிடாவிட்டால் நான் செத்துப் போய்விடுவேன்” என்று கதறியபடி, அருகிலிருந்த சுவரில் வேகமாகத் தலையை மோதிக்கொண்டான். அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. பிள்ளையார் எழுந்து வந்தார். “நம்பி!” என்று அவன் தோளைத் தொட்டு அழைத்து, பிரசாதம் ஒவ்வொன்றாக எடுத்து ரசித்து சாப்பிட்டார். சிறுவன் நம்பி மிகவும் மகிழ்ந்து போனான். மாலையில் அப்பாவிடம் உண்மையைச் சொன்னான். தன்னை மாதிரி மகனும் பொய் சொல்கிறான் என்று நினைத்து மகனைக் கண்டித்தார். சிறுவன் நம்பி மறுநாள் தந்தையை அழைத்துக் கொண்டு கோவிலுக்குச் சென்றான். நம்பி தந்த உணவை (பிரசாதம்) பிள்ளையார் உண்ட காட்சியைக் கண்ணாரக் கண்டார். அநந்தேசர் மெய் சிலிர்த்துப் போனார். மகனைக் கட்டிக் கொண்டார். நாளுக்கு நாள் நம்பிக்கும் பிள்ளையாருக்கும் நெருக்கம் வளர்ந்தது. “என்னை நினைந்தடிமை கொண்டான்” என்று பொல்லாப் பிள்ளையாரை நினைத்து பாடலெல்லாம் பாடினான். பிள்ளையாரின் தோழனான நம்பிக்கு எழுதும் ஆற்றல் கிடைத்தது. நம்பியாண்டார் நம்பியின் புகழ் நாடெங்கும் பரவியது. மேலும், தேவாரம் நமக்குக் கிடைக்கக் காரணமாக கடவுள் பொல்லாப் பிள்ளையாரின் மகிமையையும் வரலாற்றுக் கதையையும் இனி நோக்குவோம். பண்டைக்காலத்தில் அரசர் சபையில் புலவர், பாவலர், கவிஞர்கள் இசையோடு பண் இசைத்து பரிசு பெறுவது மரபு. அவ்வகையில் இராஜராஜ அபயகுலசேகர சோழ மகாராஜபூபதி அவையில் நடந்த ஒரு நிகழ்ச்சி. ஒரு சமயம் சில சிவனடியார்கள் அங்கு வந்தார்கள். தேவார, திருமறைப் பாடல்கள் சிலவற்றைப் பாடிக் காண்பித்தார்கள். மன்னனும் மனம் மகிழ்ந்து “அற்புதம்! அற்புதம்!” என்று பாராட்டி பரிசு அளித்தான். அப்போது சிவனடியார்கள் இராஜாவை வேண்டினர் “மன்னர் பிரானே! இத்தனை அற்புதம் வாய்ந்த தேவாரப் பாடல்கள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன. ஆனால் ஏனோ சில பாடல்கள் மட்டுமே வாய் மொழியாக வழக்கில் இருக்கின்றன. முழுவதும் எங்கே இருக்கின்றன என்று தெரியவில்லை. அவற்றை அரசர் கண்டுபிடித்துக் கொடுத்தால் நல்லது” என்று வேண்டிக் கொண்டனர். அதற்கு அரசன் அபயகுலசேகரன் “கவலைப்படாதீர்கள் திருநாரையூரில் நம்பி என்பவன் பிள்ளையாருடன் பேசுகிறானாம். அவனிடம் கேட்போம் வாருங்கள்” என்று கூறினான். மன்னன் அபயகுலசேகரன் சிவனடியார்களுடன் திருநாரையூருக்குச் சென்றான். நம்பியிடம் விஷயத்தைக் கூறினான். நம்பியாண்டான் நம்பி, விநாயகருடன் பேசினான். “பிள்ளையாரே! தேவாரத் திருமுறைகள் இருக்குமிடம் தெரியவேண்டும். அதை இவர்களுக்குக் கூறுங்கள்” என்று வேண்டிக் கொண்டான். “நம்பி! அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய மூவர் பாடிய தேவார ஏட்டுச்சுவடிகள் சிதம்பரம் ஆலயத்தில் உட்பிராகாரத்தில் மேற்கே உள்ள அறையில் பூட்டிப் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன” என்று பிள்ளையார் கூறினார். மன்னனும் மற்றவர்களும் மனம் மகிழ்ந்தனர். உடனே சிதம்பரத்துக்குச் சென்றனர். அங்கு ஆலயத்திற்குச் சென்று, நாட்டுக்கு அர்ப்பணிக்க தேவாரம் வேண்டுமென்றும், அந்த அறையைத் திறக்குமாறும் வேண்டினார் அரசர். அதற்கு தில்லைவாழ் அந்தணர்கள் மறுத்தார்கள். “தேவாரம் பாடிய மூவரும் வந்தால்தான் அறையைத் திறப்போம்” என்றார்கள் இறைவனடி சேர்ந்துவிட்ட அவர்களை எப்படி இங்கே அழைப்பது? மன்னர் ஒரு காரியம் செய்தார். சிதம்பரம் கோவிலில் ஒரு விழா எடுத்தார். அதில் அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகியோரின் சிலைகள் புறப்பாடாகி வந்தன. “தீட்சிதர்களே! இதோ மூவரும் வந்துவிட்டனர். கதவைத் திறந்து விடுங்கள்” எனக் கட்டளையிட்டார். அறைக்கதவு திறக்கப்பட்டது. அங்கே ஏட்டுச் சுவடிகளைக் கரையான் அரித்துக் கொண்டிருந்தது. மகாராஜா கரையான் புற்றின் மீது எண்ணெய் ஊற்றி, முடிந்த அளவுக்கு தேவாரப் பாடல்களை மீட்டார். தேவாரத் திருமுறைப் பாடல்களை மீட்டதால் “திருமுறை கண்ட சோழன்” என்ற பெயர் அவனுக்கு உண்டாயிற்று. உடனே அபயகுலசேகரன், நம்பியாண்டார் நம்பியிடம் வேண்டினான். “இவற்றை யெல்லாம் நீங்கள் தான் முறைப்படுத்த வேண்டும்” என்று கூறினான். “அந்தப் பணியை நான் ஆரம்பித்துவிட்டேன் அவற்றை மூன்று திருமுறைகளாகவும், திருநாவுக்கரசர் பாடிய பாடல்கள் 307ஐ அடுத்த திருமுறைகளாகவும் அமைத்துள்ளேன். சுந்தரர் பாடியதில் 100 மட்டுமே கிடைத்துள்ளன. அவற்றை ஏழாம் திருமுறையாக வகுத்துள்ளேன். இனி மற்றவற்றைத் தொடர்ந்து முறைப்படுத்தி வருகிறேன்” என்று கூறினான். இன்று தேவாரப் பதிகங்கள் தக்கப்பண்களுடன் நமக்கு கிடைக்க ஸ்ரீ நம்பியாண்டார் நம்பி, இராஜ ராஜ சோழன் இவர்கள் இருவர் மூலமாக அருளியவர் திருநரையூர் ஸ்ரீ பொள்ளப் பிள்ளையார்.

சிறப்பு அம்சங்கள்

* இத்தலத்தில் கோயிலில் இடது பக்கம் உள்ள சன்னதி விநாயகரின் ஆறாவது படை வீடாகும். * பிரகாரத்தில் விநாயகர், சுப்பிரமணியர், கஜலட்சுமி, நவகிரகம், சனி பகவான், பைரவர், சூரியன் முதலானோரின் சந்நிதிகள். * உற்சவ திருமேனிகளான நாரை, பொல்லாப் பிள்ளையார் , ராஜராஜ சோழன் , சந்திரசேகரர் , நால்வர் குறிப்பிடத்தக்கவை. கோயிலுக்கு எதிரில் நம்பியாண்டார் நம்பி இல்லம் * புனர்பூச நாளில் நம்பியாண்டார் நம்பி குருபூஜை * தட்சிணாமூர்த்தியும் , துர்க்கையும் தனிச்சந்நிதிகளில் * சிவனார் கிழக்கு நோக்கி திருக்காட்சி * ஒவ்வொரு வருடமும் வைகாசித் திங்கள் புணர்பூச நட்சத்திரத்தில் (ஸ்ரீ நம்பியாண்டார் நம்பி முக்தி அடைந்தநாள்) நம்பி குருபூஜை விழா சிறந்த திருமுறை விழாவாக கொண்டாடப்படும் தலம் * கோவிலுக்கு வெளியே சற்று தூரத்தில் ஸ்ரீ நம்பியாண்டார் நம்பி அவதரித்து வசித்து வந்த இடத்தில் தற்போது சிறிய மண்டபத்தில் ஸ்ரீ நம்பியாண்டார் நம்பி சிற்ப வடிவில் உள்ளார். திருநாரையூர் என்னும் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலம் சிதம்பரம் அருகில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் விநாயகப் பெருமான் ‘பொல்லாப் பிள்ளையார்’ என்னும் திருநாமம் கொண்டு எழுந்தருளி உள்ளார். ‘பொல்லா’ என்னும் பதம் ‘உளியால் செதுக்கப் படாத’ தன்மையைக் குறிக்கும். சுயம்பு மூர்த்தி இப்பெருமான். இவரது அருளால் தேவாரப் பாடல்கள் நமக்குக் கிடைத்துள்ளன. தமிழுக்குப் பெரும் தொண்டு செய்தவர் இங்கு எழுந்தருளியிருக்கும் பொல்லாப் பிள்ளையார். முருகப்பெருமானுக்கு 6 படை வீடு இருப்பது அனைவருக்கும் தெரியும். இதே போல் விநாயகருக்கும் 6 படை வீடு இருக்கிறது. இத்தலத்தின் இடது பக்கம் பொல்லாப்பிள்ளையார் சன்னதி உள்ளது. இது விநாயகரின் ஆறாவது படை வீடாகும். எல்லா ஊரிலும் பெரும் தொப்பையுடன் காணப்படும் பிள்ளையார் இங்கே ஒட்டிய வயிற்றுடன் காட்சியளிப்பது அதிசயமான ஒன்றுதான். பக்தர்களின் நலனுக்காகவும், தமிழுக்காகவும் மிகவும் ஓடியாடி உழைத்ததால் தொப்பை கரைந்து வயிறு ஒட்டி காட்சியளிக்கிறார் என்று கூறுவதுண்டு. (இவரை ‘பொள்ளாப் பிள்ளையார்’ என்றும் சொல்வர்.)

திருவிழாக்கள்

வைகாசி திருவாதிரை, ராஜராஜனுக்கு 13 நாள் திருவிழா, விநாயகர் சதுர்த்தி முதலான திருவிழாக்கள்

காலம்

1000 -2000ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

காட்டுமன்னார் கோயில்

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருநாரையூர்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top