Wednesday Dec 25, 2024

அருள்மிகு சொன்ன வண்ணம் செய்த பெருமாள் (யதோத்தகாரி), காஞ்சிபுரம்

முகவரி

அருள்மிகு சொன்ன வண்ணம் செய்த பெருமாள் (யதோத்தகாரி), என்னிகரன், காஞ்சிபுரம், தமிழ்நாடு 63150, தர்மகர்த்தா : 04427232011

இறைவன்

இறைவன்: யதோக்தகாரி, சொன்னவண்ணம்செய்தபெருமாள், இறைவி: கோமவள்ளி

அறிமுகம்

தொண்டை நாட்டின் தலைநகரமாக இருந்த காஞ்சி, வரலாற்றுப் பெருமையும் கலாசாரப் புகழையும் கொண்டது. “தெண்ணீர் வயல் தொண்டை நன்னாடு சான்றோருடைத்து” என்று ஒளவையாரால் போற்றிப் பாடப்பட்ட இடம் அது. “புஷ்பேசு ஜாதி, புருஷேசு விஷ்ணு, நாரீஷு ரம்பா, நகரேஷு காஞ்சி” என வடமொழிப் புலவர் ஒருவா் பாடியுள்ளார். அதாவது ‘பூக்களில் சிறந்தது ஜாதி முல்லை/மல்லி, புருஷர்களில் பெரியவர் விஷ்ணு, பெண்களில் சிறந்தவர் ரம்பா, நகரங்களில் சிறந்தது காஞ்சிபுரம்’ என்பது இதன் பொருள். “கல்வியிற் கரையிலாத காஞ்சி” என்று நாயன்மாரும், இந்தப் பெருநகரைப் போற்றிப் புகழ்ந்துள்ளனர். நம் நாட்டில் ‘மோட்சபுரி’கள் என்று சொல்லப்படுகின்ற ஏழு மகா ஷேத்திரங்களுள் காஞ்சியும் ஒன்று. அயோத்தி, மதுரா, ஹரித்துவார், காசி, உஜ்ஜயினி, துவாரகை ஆகிய ஆறும் மற்ற நகரங்கள் ஆகும். கி.மு 2-ம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக கருதப்படும் பதஞ்சலி முனிவர் இயற்றிய மகாபாஷ்யத்திலும், சீத்தலைச் சாத்தனார் இயற்றிய மணிமேகலை நூலிலும், புலவர் உருத்திரங்கண்ணனார் எழுதிய பெரும்பாணாற்றுப்படையில் இருந்தும் காஞ்சியின் மேன்மையை நாம் அறிய முடியும். சைவ, வைஷ்ணவ, பவுத்த, ஜைன மத ஸ்தாபன பீடங்களாகவும், காஞ்சிபுரம் சிறப்புற்று விளங்கி இருக்கிறது. ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற திவ்ய தேசங்கள் இங்கு பரவலாக இருக்கின்றன. அவற்றுள் பழமையானதும், புராதனமான அழகிய கோவில்தான், ‘சொன்ன வண்ணம் செய்த பெருமாள்’ ஆலயம் ஆகும். இந்த ஆலயம் கி.பி. 7-ம் நூற்றாண்டிற்கு முன்பே கட்டப்பட்டிருக்க வேண்டும் என்று வரலாற்று ஆய்வுகள் சொல்கின்றன. இந்த ஆலயத்தில் கடந்த ஆண்டுதான் கும்பாபிஷேகம் நடைபெற்று முடிந்தது. தீர்த்தம்: பொய்கை புஷ்கரிணி

புராண முக்கியத்துவம்

ஒரு சமயம், பிரம்மதேவரது மனம் மாசு படிந்து அழுக்காகக் காணப்பட்டது. மனதில் உள்ள அழுக்கு நீங்க, கங்கை நதிக்கரை ஓரத்தில் பிரம்மதேவர் கடுந்தவம் செய்தார். தவம் செய்து கொண்டிருந்தபோது ஒரு நாள், அவருடைய காதில் விழுந்த சில ஒலிகளை கூர்ந்து கவனித்தாா். “மாசு ஒழிய, உள்ளம் தூய்மையடைய, ஓராயிரம் வேள்விகள் நடத்த வேண்டும். நடத்தி முடித்த அடுத்த கணமே உன் மாசு அழிந்துவிடும். ஆனால், ஆயிரம் யாகங்கள் நடத்துவதற்கு உன் ஆயுட்காலம் போதாது. எனவே காஞ்சிக்குச் செல். அந்த சத்திய விரத ஷேத்திரத்தில் ஒரு வேள்வி செய்தால், ஆயிரம் வேள்வி செய்ததற்கு சமம்” என்று அந்த ஒலியின் ஊடே ஓர் அசரீரி கேட்டது. இதையடுத்து அசரீரி சொன்னபடி, காஞ்சி பகுதிக்கு வந்த பிரம்மதேவர், மற்ற முனிவர்களுடன் இணைந்து அந்த வேள்வியை சிறப்பாக நடத்திக் கொண்டிருந்தாா். குண்டத்தில் இருந்து அக்கினி ஜுவாலை கொளுந்து விட்டு எரிந்துகொண்டிருந்தது. இந்த நிலையில் தன்னை அருகில் வைத்துக் கொள்ளாமல், தனியாக யாகம் செய்யும் பிரம்மதேவரின் மீது, அவரது மனைவியான சரஸ்வதிக்கு கோபம் உண்டானது. பிரம்மனின் வேள்வியை அழிக்க நினைத்த சரஸ்வதி தேவி, ‘வேகவதி’ என்ற பெரிய ஆறாக உருமாறி, வேள்வி நடைபெற்ற பகுதியை நோக்கி சீறிப்பாய்ந்து வந்தாள். இதையறிந்த பிரம்மதேவன் செய்வதறியாமல், மகாவிஷ்ணுவை நினைத்து வேண்டினார். இதையடுத்து மகாவிஷ்ணு, ‘யதோக்தகாரி’யாய் வந்து, ஆற்றின் குறுக்கே படுத்து நீரை அங்கிருந்து மேற்கொண்டு செல்லவிடாமல் தடுத்தார். அதைத் தொடர்ந்து பிரம்மதேவரின் வேள்வி, நல்லபடியாக நிறைவுபெற்றது. அந்த வேள்வி குண்டத்தில் இருந்து, பல்லாயிரம் சூாியா்களின் ஒளி பொருந்திய தோற்றத்தில் வரதராஜப் பெருமாள் தோன்றினார். யதோக்தகாரி தோன்றிய ஏழாம் நாள்தான் வரதராஜர் என்னும் தேவராஜப் பெருமாள் தோன்றினார். யதோக்தகாரி என்பதற்கு சொன்னபடி செய்பவர் என்று பொருள். எனவேதான் இத்தல இறைவன் ‘சொன்ன வண்ணம் செய்த பெருமாள்’ என்று அழைக்கப்படுகிறார். யதோக்தகாரியின் ஜென்ம நட்சத்திரம் சித்திரை மாதத்தில் வரும் புனர்பூசம், தேவராஜப் பெருமாளுக்கு அஸ்தம். எனவே பக்தர்கள் ஸ்ரீ யதோக்காரியை உபாயமாகவும், ஸ்ரீ தேவராஜ பெருமாளை உபேயமாகவும் கருதி வழிபடுகிறார்கள். காஞ்சிக்கு அருகே அவதரித்த பொய்கையாழ்வார் மற்றும் ஆழ்வார்களில் முதன்மையானவரான நம்மாழ்வார் ஆகியோர் இத்தலப் பெருமாளைப் போற்றி, ஏராளமான பாசுரங்கள் பாடியிருக்கிறார்கள். ஸ்ரீ மணவாள மாமுனிகள், இந்தக் கோவிலில்தான் சுமார் ஒரு வருட காலம் தங்கியிருந்து பிரசங்கம் செய்தார். காஞ்சிபுரம் வரும் பக்தர்கள், சொன்னவண்ணம் செய்த பெருமாளை பார்க்காமல் செல்வதில்லை. இந்தக் கோவிலானது காஞ்சிபுரத்தில் திருக்கச்சி நம்பி தெருவின் வட பகுதியில் இருக்கிறது.

நம்பிக்கைகள்

ஆழ்வார் கூறியதை கேட்ட இத்தல பெருமாள், நமது குறைகளையும் கேட்டு நிறைவேற்றுவார்.பெருமாளுக்கும் தாயாருக்கும் திருமஞ்சனம் செய்து பிரார்த்தனை நிறைவேற்றுகின்றனர்.

சிறப்பு அம்சங்கள்

பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஒன்று. பொய்கையாழ்வார் இத்தலத்தில் அவதாரம் செய்தார். இங்குள்ள பொய்கையாற்றின் பொற்றாமரையில் அவதாரம் செய்ததால் பொய்கை ஆழ்வார் எனப்பட்டார். எல்லா கோயில்களிலும் பெருமாளின் சயன திருக்கோலம் இடமிருந்து வலமாக இருக்கும். ஆனால் திருமழிசை ஆழ்வாருடன் சென்று, மறுபடி வந்து படுத்ததால் இத்தலத்தில் பெருமாள் வலமிருந்து இடமாக சயனித்திருப்பார். சரஸ்வதி தேவி வேகவதி ஆறாக மாறி விரைந்தோடி வரும்போது, அந்த நதியை தடுக்க மூலவரே சயனத்தில் இருப்பதாக கூறுவர். வேகவதி ஆறே “வெக்கா’ என அழைக்கப்படுகிறது.பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 52 வது திவ்ய தேசம். எல்லா கோயில்களிலும் பெருமாளின் சயன திருக்கோலம் இடமிருந்து வலமாக இருக்கும். ஆனால் திருமழிசை ஆழ்வாருடன் சென்று, மறுபடி வந்து படுத்ததால் இத்தலத்தில் பெருமாள் வலமிருந்து இடமாக சயனித்திருப்பார்.

திருவிழாக்கள்

வைகுண்ட ஏகாதசி

காலம்

1000 -2000ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருவெக்கா

அருகிலுள்ள இரயில் நிலையம்

காஞ்சிபுரம்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top