Wednesday Dec 18, 2024

அருள்மிகு காயாரோகணேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி

அருள்மிகு காயாரோகணேஸ்வரர் கோயில், நாகப்பட்டினம்-611001 நாகப்பட்டினம் மாவட்டம். போன்: +91- 4365 – 242 844, 98945 01319, 93666 72737.

இறைவன்

இறைவன்: காயாரோகணேசுவரர் இறைவி: நீலாயதாட்சி

அறிமுகம்

நாகபட்டினம் காயாரோகணேஸ்வரர் கோயில் (திருநாகைக்காரோணம்) பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 82வது சிவதலமாகும். சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் இறைவன் அகத்தியருக்குத் திருமணக் காட்சியளித்தார் என்பது தொன்நம்பிக்கை. அதிபத்த நாயனார் அவதரித்த தலம் எனப்படுகிறது. ஆதிசேஷன், புண்டரீக முனிவர், அகத்தியர், அம்பிகை, முருகன், திருமால், வசிட்டர், முசுகுந்தன், அரசகேசரி, விசித்திரகவசன், விரூரகன், பத்திரசேனன், பாற்கரன், மித்திரன், காளகண்டன், சண்டதருமன் முதலியோர் வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). நாகப்பட்டிணம் அதிபத்த நாயனார் அவதார தலம்.

புராண முக்கியத்துவம்

புண்டரீகர் என்னும் முனிவர், கண்ணுவரின் ஆலோசனைப்படி முக்தி வேண்டி இத்தலத்தில் தவமிருந்தார். அவருக்கு காட்சி தந்த சிவன், முனிவரை தன்னுடன் சேர்த்து அணைத்துக்கொண்டு, முக்தி கொடுத்தார். முக்தியடைபவர்களின் ஆன்மாதான், இறைவனிடம் சென்று சேரும். ஆனால், சிவன் புண்டரீகரின் உடலுடன் (காயம்) தன்னுடன் ஆரோகணித்து (சேர்த்துக்கொண்டு ) முக்தி கொடுத்தார். இதனால் சிவன், “காயாரோகணேஸ்வரர்’ என்று அழைக்கப்பட்டார். நாக அரசன், இங்கு சிவனை வேண்டி ஒரு பெண் குழந்தையைப் பெற்றான். அக்குழந்தை, பிறப்பிலேயே மூன்று தனங்களுடன் இருந்தது. வருந்திய மன்னன், சிவனிடம் முறையிட்டான். சிவன் மன்னனிடம், சூரிய வம்சத்து மன்னன் ஒருவனால் அவளது தனம் மறையும் என்று அருளினார். சிலகாலம் கழித்து, சாலிசுகன் என்னும் மன்னன், இத்தலத்திற்கு வந்தான். அவனைக் கண்ட நாக அரசன் மகளின் மூன்றாவது தனம் மறைந்தது. மகிழ்ந்த நாக அரசன், அவனுக்கே தன் மகளை திருமணம் செய்து வைத்தான். அதன்பின்பு, சாலிசுகன் இங்கு சிவனுக்கு பல திருப்பணிகள் செய்தான். நாக அரசன் பூஜித்ததால் இத்தலம், “நாகை காரோணம்’ என்று பெயர் ஏற்பட்டது.

நம்பிக்கைகள்

ஆதிசேஷன், புண்டரீக முனிவர், அகத்தியர், அம்பிகை, முருகன், திருமால், வசிட்டர், முசுகுந்தன், அரசகேசரி, விசித்திரகவசன், விரூரகன், பத்திரசேனன், பாற்கரன், மித்திரன், காளகண்டன், சண்டதருமன் முதலியோர் வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).

சிறப்பு அம்சங்கள்

சுந்தர விடங்கர்: இந்திரனுக்கு உதவி செய்த முசுகுந்த சக்கரவர்த்தி, அவர் பூஜித்த ஏழு லிங்கங்களைப் பெற்று ஏழு தலங்களில் வைத்து பூஜித்தார். மிகச்சிறிய லிங்கமாக இருந்ததால், “விடங்கலிங்கம்’ என்று பெயர் பெற்றது. இத்தலங்கள் “சப்தவிடங்க தலம்’ எனப்படுகிறது. இதில் இத்தலமும் ஒன்று. இங்குள்ள லிங்கம் மிகுந்த அழகுடன், கோமேதகத்தால் செய்யப்பட்டதாக காட்சியளிக்கிறது. எனவே இவரை, “சுந்தர விடங்கர்’ என்று அழைக்கிறார்கள். சிவன் சன்னதிக்கு வலப்புறம், தியாகராஜர் தனிச்சன்னதியில் இருக்கிறார். பெரும்பாலான கோயில்களில், தியாகராஜரின் முகத்தை மட்டுமே தரிசிக்க முடியும். இத்தலத்தில் வைகாசி விசாக விழாவின்போதும், மார்கழி திருவாதிரையன்றும் சுவாமியின் வலது கை மற்றும் பாதத்தை தரிசிக்கும்படியாக அலங்காரம் செய்கிறார்கள். இந்த இரண்டு நாட்கள் மட்டுமே தியாகராஜரின் இந்த கோலத்தை தரிசிக்க முடியும். விழாவின்போது இவர் அலைபோல முன்னும், பின்னுமாக வீசியவாறு நடனமாடி வருவார். இந்த நடனத்திற்கு, “பாராவாரா நடனம்’ என்று பெயர். நீலாயதாட்சி: இத்தலத்தில் அருளும் அம்பிகை, கடல் போல அருளுபவளாக இருக்கிறாள். இதை உணர்த்தும்விதமாக இவளது கண்கள் கடல் நிறத்தில், நீல நிறமாக இருக்கிறது. எனவே இவள், “நீலாயதாட்சி’ என்று அழைக்கப்படுகிறாள். கருந்தடங்கண்ணி என்றும் இவளுக்குப் பெயருண்டு. இவளுக்கு தனி கொடிமரத்துடன் கூடிய சன்னதி இருக்கிறது. அம்பிகை, இத்தலத்தில் திருமணப்பருவத்திற்கு முந்தைய கன்னியாக, “யவ்வன பருவ’ கோலத்தில் காட்சி தருகிறாள். எனவே ஆடிப்பூர விழா இங்கு வெகு விமரிசையாக நடக்கிறது. இவ்விழாவின்போது, முழுதும் பீங்கானில் செய்யப்பட்ட ரதத்தில் அம்பாள், வீதியுலா செல்வது சிறப்பு. இவளது சன்னதி, தேர் போல அமைக்கப்பட்டிருக்கிறது. இவள் கன்னியாக இருப்பதால் சிவன், அவளுக்கு பாதுகாப்பாக நந்தி தேவரை அனுப்பினார். அவரோ, தான் எப்போதும் சிவனை தரிசிக்க விரும்புவதாக கூறினார். எனவே, சிவன் அவரிடம் அம்பாளிடம் இருந்து கொண்டு, தன்னையும் தரிசிக்கும்படி கூறினார். இதன் அடிப்படையில், அம்பாள் எதிரிலுள்ள நந்தி தன் கழுத்தை முழுமையாக திருப்பி, சிவன் சன்னதியை பார்த்தபடி இருக்கிறது. நந்தியின் இடது கண் சிவனையும், வலக்கண் அம்பிகையையும் பார்த்தபடி அமைக்கப்பட்டிருப்பது சிறப்பான அமைப்பு. எனவே, இந்த நந்தியை “இரட்டைப் பார்வை நந்தி’ என்று அழைக்கிறார்கள். கண் தொடர்பான நோய்கள் நீங்க, இந்த நந்தியிடம் வேண்டிக்கொள்ளலாம். பிணத்திற்கு சிவன் மாலை!: கோயிலுக்கு அருகில் யாராவது இறந்து விட்டால், நடையை சாத்திவிடுவது வழக்கம். ஆனால், இறந்த பிணத்திற்கு சிவன் அணிந்த மாலை, வஸ்திரத்தை அணிவிக்கும் வழக்கம் இத்தலத்தில் உள்ளது. சிவனருளால் முக்தி பெற்ற மீனவ குலத்தைச் சேர்ந்த அதிபத்தருக்கு மரியாதை தரும் விதமாக, இவ்வூரில் மீனவர்கள் யாராவது இறந்துவிட்டால் அவர்களுக்கு சிவன் சார்பில் மரியாதை செய்யும் வைபவம் நடக்கிறது. இறந்தவரின் உடலை, இங்கு கோயிலுக்கு முன்பாக வைத்துவிடுகின்றனர். அப்போது சிவன் சன்னதியை அடைக்காமல், அவருக்கு அணிவித்த மாலை, வஸ்திரம் ஆகியவற்றை பிணத்திற்கு அணிவித்து, தீர்த்தம் கொடுக்கின்றனர். கோயில்களில் திருவிழாவின் போது, சுவாமி மாடவீதிகளைச் சுற்றிவிட்டு கோயிலுக்குத் திரும்பிவிடுவார். ஆனால், இக்கோயிலில் இங்கிருந்து கிளம்பும் சுவாமி, நாகையைச் சுற்றியுள்ள பொய்கைநல்லூர், பொறவாச்சேரி, சிக்கல், பாலூர், வடகுடி, தெத்தி, நாகூர் என ஏழு ஊர்களுக்குச் சென்றுவிட்டு கோயிலுக்குத் திரும்புகிறார். சாலிச மகாராஜா இந்த ஏழு தலங்களில் சிவபூஜை செய்தபின்பு, சிவன் இங்கு திருமணக்கோலத்தில் காட்சி தந்தார். இதன் அடிப்படையில், சுவாமி 7 ஊர்களைச் சுற்றி வருகிறார். மோகினி புறப்பாடு: சிவன் கோயில்களில் பிரதோஷத்தின்போது, சிவன் ரிஷப வாகனத்தில் செல்வது வழக்கம். ஆனால் இக்கோயிலில் மோகினி வடிவில் பெருமாளும் புறப்பாடாகிறார். தேவர்களும், அசுரர்களும் அமுதம் கடைந்தபோது, மகாவிஷ்ணு மோகினி வடிவில் வந்து அமுதம் பரிமாறினார். அப்போது, தேவர்கள் பாற்கடல் விஷத்தை அருந்திய சிவனை வணங்காமல் அமுதத்தை அருந்திவிட்டனர். இதற்காக தங்களை மன்னிக்கும்படி, சிவனிடம் வேண்டினர். அவர் தேவர்களை மன்னிக்கும்விதமாக, நந்தியின் மீது நடனமாடினார். இந்த நடனம் பிரதோஷ வேளையில் நிகழ்ந்தது. பிரதோஷ வேளைக்கு முன்பாக, பெருமாளின் மோகினி அவதாரம் நிகழ்ந்ததால், பிரதோஷத்தன்று மோகினி வடிவில் பெருமாள் புறப்பாடாகிறார். இவர் பிரதோஷத்தின்போது மட்டுமே தரிசிக்க முடியும். மற்ற நாட்களில் சிவனின் மூலஸ்தானத்திற்குள் வைத்துவிடுகின்றனர். தசரதர் வழிபட்ட சனீஸ்வரர்: சனீஸ்வரர், ரோகிணி நட்சத்திற்குள் பிரவேசிக்கும் காலத்தில், “ரோகிணி சகடபேதம்’ என்னும் பஞ்சம் உண்டாகும். அயோத்தியை ஆட்சி செய்த தசரதர், தனது நாட்டில் இந்த பஞ்சம் உண்டாகப்போவதை அறிந்தார். எனவே, நாட்டு மக்களின் நலன் கருதி அவர், சனீஸ்வரனை எதிர்த்து போரிடச் சென்றார். அப்போது சூரியபகவான் அவரிடம், சனியை வெல்வது எளிதல்ல என்றும், அவரை எதிர்ப்பதை விட, பணிந்து வணங்குவது நல்லது என்றும் அறிவுரை கூறினார். அதன்படி தசரதர், இங்கு சிவனை வழிபட்டு, சனீஸ்வரரின் பார்வையிலிருந்து தப்ப அருளும்படி வேண்டினார். சிவனின் ஆணையால், சனீஸ்வரர் தசரதருக்கு காட்சி தந்தார். அவரிடம் தன் நாட்டில் பஞ்சம் ஏற்படாதிருக்க அருளும்படி வேண்டினார். சுயநலமின்றி நாட்டு நலனுக்காக தன்னையே எதிர்க்கத் துணிந்த தசரதனைக் கண்டு மகிழ்ந்த சனீஸ்வரர், அவரை பாராட்டியதோடு, பஞ்சம் ஏற்படாமல் அருளினார். இவர், தசரதரின் வேண்டுதலுக்காக இங்கேயே எழுந்தருளினார். இவருக்கு அருகில், நவக்கிரக மண்டபத்திலுள்ள கிரகங்கள் அனைத்தும், சிவனை பார்க்கும் விதமாக மேற்கு நோக்கியிருக்கின்றன. தங்க மீன்: அதிபத்தர், என்னும் சிவபக்தர் இவ்வூரில் வசித்து வந்தார். மீனவரான அவர், இத்தல சிவன் மீது அதீத பக்தி கொண்டிருந்தார். தினமும் மீன் பிடிக்கச் செல்லும் அவர், முதலில் கிடைக்கும் மீனை, கடலில் வீசி சிவனுக்கே அர்ப்பணம் செய்துவிடுவார். ஒருகட்டத்தில் இவரது பக்தியை சோதிக்க எண்ணிய சிவன், கடலில் ஒரு மீன் மட்டுமே கிடைக்கும்படி செய்தார். ஆனாலும், அதிபத்தர் அந்த மீனை, சிவனுக்கே படைத்தார். வறுமையில் வாடினாலும், அதிபத்தர் தனது பக்தியை சற்றும் விட்டுக்கொடுக்கவில்லை. ஒருசமயம் மீன் பிடிக்கச் சென்ற அதிபத்தருக்கு, கடலில் ஒரு தங்க மீன் கிடைக்கச் செய்தார் சிவன். உடனிருந்த மீனவர்கள் அதனை கடலில் போட வேண்டாமென தடுத்தனர். ஆனால், அதிபத்தர் அதை கடலில் வீசி விட்டார். அவரது பக்தியை மெச்சிய சிவன், அம்பிகையுடன் காட்சி கொடுத்து முக்தி கொடுத்தார். இவர் நாயன்மார்களில் ஒருவராகும் அந்தஸ்தை பெற்றார். அதிபத்தருக்கு இக்கோயிலில் சன்னதி இருக்கிறது. ஆவணி மாத, ஆயில்யம் நட்சத்திரத்தன்று இவரது குருபூஜை விழா நடக்கிறது. அன்று அதிபத்தர் உற்சவர் ஒரு கட்டுமரத்தில் எழுந்தருளி, கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்வார். அப்போது மீனவர்கள், இரண்டு தங்க மீன்களை வலையில் வைத்து, கடலில் பிடித்ததைப் போல பாவனை செய்வர். அவ்வேளையில் இத்தலத்து சிவன், கடற்கரையில் எழுந்தருளுவார். அவருக்கு அதிபத்தர், தங்க மீன் படைத்து பூஜை செய்வார். அதன்பின் சிவன் அவருக்கு காட்சி தரும் வைபவம் நடக்கும். இந்த விழாவின்போது மட்டுமே தங்க மீனை பார்க்க முடியும். அழுகுணி சித்தர் பீடம்: ஏதாவது ஒன்று கிடைக்கவேண்டுமென்றால் குழந்தைகள், அழுது அடம்பிடித்து பெற்றோரிடம் எளிதாகப் பெற்றுவிடுவர். இதைப்போலவே தனக்கு முக்தி கிடைக்க எண்ணிய சித்தர் ஒருவர், உலகத்தின் அன்னையான அம்பிகை நீலாயதாட்சியிடம் அழுது பெற்றுள்ளார். இதனால் இவர், “அழுகுணி சித்தர்’ என்றே பெயர் பெற்றார். கோரக்கரின் சீடரான அழுகுணி சித்தர், இத்தல அம்பிகை மீது அதீத பக்தி கொண்டு, இங்கேயே தங்கி தினமும் அம்பிகையை வழிபட்டார். அம்பிகையிடம் முக்தி வேண்டி, சிறுவன் போல கண்ணீர் விட்டு அழுது, அடம்பிடித்து பிரார்த்தனை செய்தார். அம்பிகையும் அவருக்கு அருள்புரிய சிவனிடம் வேண்டவே, அவர் சித்தருக்கு முக்தி கொடுத்தருளினார். இவரது ஜீவசமாதி இக்கோயிலில் உள்ளது. வைகாசி விசாகத்தன்று இவருக்கு யாகம் மற்றும் விசேஷ பூஜைகள் நடத்தப்படுகிறது. பவுர்ணமிதோறும் பாயச நைவேத்யம் படைத்து, விசேஷ பூஜை செய்து வழிபடுகின்றனர். நாகாபரண விநாயகர்: பெருமாள் கோயில்களில் ஆதிசேஷன் என்னும் நாகம் சுவாமியின் தலைக்கு மேலே, குடை பிடித்தபடி இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். ஆனால், விநாயகர் தன் தலைக்கு மேலே நாகத்துடன் இருப்பதை தரிசித்திருக்கிறீர்களா? இக்கோயில் முகப்பிலுள்ள விநாயகர், உடலில் நாகத்தை ஆபரணமாக சூடி, தலைக்கு மேலே, மற்றொரு நாகம் குடை பிடித்தபடி இருக்க அதன் கீழே காட்சி தருகிறார். எனவே இவர், “நாகாபரண விநாயகர்’ என்று அழைக்கப்படுகிறார். நாகதோஷம் உள்ளவர்கள் இவருக்கு, ராகு காலத்தில் பாலபிஷேகம் செய்வித்து வேண்டிக்கொள்கிறார்கள். ராகு, கேது பெயர்ச்சியின்போது இவருக்கு விசேஷ பூஜைகளும் நடக்கிறது. கோயில்களில் நாய் வாகனத்துடன் காட்சி தரும் பைரவர், இங்கு சிம்ம வாகனத்துடன் காட்சி தருகிறார். புண்டரீக தீர்த்தக்கரையில் இவரது சன்னதி இருக்கிறது. புண்டரீகர், சிவனை வழிபட்டபோது, காசியின் கங்கை தீர்த்தம் இங்கு பாதாளத்திலிருந்து பொங்கியது. அப்போது, கங்கைக்கரையில் உள்ள பைரவரும், இங்கு எழுந்தருளினார். இவரே இங்கு, “காலசம்ஹார பைரவராக’ அருளுகிறார். இவருக்கு பின்புறம் சிம்ம வாகனம் இருக்கிறது. காலனை (எமன்) சம்ஹாரம் செய்த சிவனே, இங்கு பைரவர் வடிவில் அருளுவதாக ஐதீகம். இவர் எமனுக்குரிய தென்திசையை நோக்கியிருப்பதால், ஆயுள் பலம் கிடைக்க இவரிடம் வேண்டிக்கொள்ளலாம். இவர் உக்கிரமானவராக காட்சி தருவதால், சாந்தமாக்க எதிரில் இரண்டு விநாயகர்களை ஒரு சன்னதியில் பிரதிஷ்டை செய்துள்ளனர். பிரகாரத்தில் எட்டு கரங்களில் ஆயுதங்களுடன், “அஷ்டபுஜ பைரவர்’, அஷ்டபுஜ காளிக்கும் சன்னதி இருக்கிறது.

திருவிழாக்கள்

நவராத்திரி, சிவராத்திரி, கந்தசஷ்டி, சித்திரை திருவிழா

காலம்

1000-2000 வருடங்களுக்கு முன்

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

நாகப்பட்டினம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

நாகப்பட்டினம்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top