Saturday Nov 23, 2024

அருள்மிகு கற்கடேஸ்வரர் திருக்கோயில் – ஆயில்யம் நட்சத்திரம்

முகவரி

அருள்மிகு கற்கடேஸ்வரர் திருக்கோவில், திருந்துதேவன்குடி – 612 105, வேப்பத்தூர் போஸ்ட், திருவிடைமருதூர் தாலுகா, கும்பகோணம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம். Phone: +91 99940 15871, 0435 2000240

இறைவன்

இறைவன் – கற்கடேஸ்வரர் இறைவி – அருமருந்தநாயகி, அபூர்வநாயகி

அறிமுகம்

கற்கடேஸ்வரர் திருக்கோவில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் இரண்டு அம்பாள் தனிதனிச் சன்னதிகளில் அருள்பாலிப்பது சிறப்பாகும். கோவிலின் உள்ளே சென்றவுடன் முதலில் விநாயகர், பலிபீடம் மற்றும் நந்தி உள்ளது. முன் மண்டபத்தில் அருமருந்துநாயகி, அபூர்வநாயகி ஆகிய இரண்டு அம்பாள் தனி தனி சந்நிதிகளில் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்கள். கருவறையில் இறைவன் கற்கடேஸ்வரர் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். கருவறை மேற்கு உட்பிரகாரத்தில் கணபதி, முருகன் மற்றும் கஜலட்சுமிக்கு சந்நிதிகள் உள்ளது. கருவறை கோஷ்டத்தில் தென்திசை நோக்கி தட்சிணாமூர்த்தியும் வடதிசை நோக்கி துர்க்கையும் உள்ளனர். நால்வர் சந்நிதியும் உட்பிரகாரத்தில் உள்ளது. தன்வந்தரி, அகஸ்தியர் ஆகியோரும் சுற்றுப் பிரகாரத்தில் உள்ளனர். இத்தலத்தில் நவக்கிரக சன்னதி கிடையாது. கோவிலின் நுழைவுவாயிலில் சந்திரன் சன்னதி உள்ளது. இத்தலத்தில் சந்திரன் யோக நிலையில், “யோக சந்திரனாக” காட்சி தருகிறார். ஜாதகத்தில் சந்திர திசை உள்ளவர்கள் சந்திரனுக்கு வெண்ணிற வஸ்திரம் சாத்தி வழிபட்டால், தோஷம் நீங்குவதாக நம்பிக்கை. கோவிலின் மதிற்சுவரைச் சுற்றி கிழக்கு திசை தவிர மற்ற மூன்று புறமும் நீர் நிறைந்த அகழி உள்ளது. ஆயில்யம் நட்சத்திரக்காரர்களின் பொது குணம்: கோபமும் வேகமும் கொண்ட இவர்கள் செல்வந்தர்களாக இருப்பர். சிவந்த மேனி, அகலமான கண்களைப் பெற்றியிருப்பர். நியாய தர்மங்களை மற்றவர்களுக்குப் போதிப்பர். மந்த குணமும் இருக்கும். நகை அணிதல், பணம் சம்பாதிப்பதில் அலாதிப்பி பிரியம் இருக்கும். செலவு செய்வதில் கெட்டிக்காரர்களாகத் திகழ்வர்.

புராண முக்கியத்துவம்

ஒரு சமயம் துர்வாச மகரிஷி சிவபூஜை செய்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே சென்ற ஒரு கந்தர்வன் துர்வாசரை,நண்டு போல நடந்து காட்டி கேலி செய்தான். கோபம் கொண்ட துர்வாசர், அவனை நண்டாக பிறக்கும்படி சபித்துவிட்டார். வருந்திய கந்தர்வன் மன்னிப்பு வேண்டினான். துர்வாசர் அறிவுரையின் படி இத்தலத்தில் நண்டு வடிவில் பூஜை செய்து சாபவிமோசனம் பெற்றான். சுவாமியின் திருமேனியில் நண்டு ஐக்கியமான துளையை இப்போதும் காணலாம். கற்கடகத்திற்கு (நண்டு) விமோசனம் தந்தவர் என்பதால் இவர், கற்கடேஸ்வரர் என்று பெயர் பெற்றார். இந்திரனும் தன் ஆணவம் நீங்க தன் குருவின் ஆலோசனைப்படி இங்கு சிவபூஜை செய்தான். இங்கிருந்த புஷ்கரிணியில் தினமும் 1008 மலர் பறித்து சிவலிங்கத்திற்கு படைத்து வழிபாடு செய்து திருந்தினான். இதனால் இத்தலம், திருந்துதேவன்குடி என்றழைக்கப்படுகிறது. இப்பெயரைச் சொன்னால் உள்ளூர்வாசிகளுக்கு தெரிவதில்லை. நண்டு கோயில் என்றுதான் இப்பகுதி மக்கள் சொல்கிறார்கள். முற்காலத்தில் இந்தப் பகுதியை ஆட்சி செய்த சோழ மன்னர் ஒருவருக்கு பக்கவாத நோய் ஏற்பட்டு மிகவும் துன்பப்பட்டார். பல வைத்தியர்கள் சிகிச்சை செய்தும் அவரது நோய் தீரவில்லை. இந்நிலையில் ஒருநாள், வயதான மருத்துவத் தம்பதி அரண்மனைக்கு வந்து மன்னரின் பக்கவாத நோயைப் போக்கினர். அந்தத் தம்பதிக்கு மன்னர் ஏராளமான பொன் னும் பொருளும் கொடுக்க முன்வந்தார். அவற்றை ஏற்க மறுத்த மருத்துவத் தம்பதி, மன்னரை ஓர் இடத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்த ஒரு சிவலிங்கத்தைக் காட்டி அந்த இடத்தில் கோயில் எழுப்பும்படிக் கூறிவிட்டு சிவலிங்கத்துள் ஐக்கியமாகிவிட்டனர். தேவதேவியரே தன் நோய் தீர்க்க வந்ததை அறிந்த மன்னர் மனம் நெகிழ்ந்து, இறைவனுக்கு பிரமாண்டமாக ஆலயம் எழுப்பினார். மன்னர் இந்த இடத்தில் கோயில் எழுப்பியபோது அம்பிகையின் விக்கிரகத்தைக் காணவில்லை. எனவே, புதிய விக்கிரகம் செய்து, மருத்துவர் வடிவில் வந்து அருள்புரிந்தவள் என்பதால், ‘அருமருந்து நாயகி’ என்ற பெயர் சூட்டி பிரதிஷ்டை செய்தார். சில நாள்களிலேயே காணாமல் போன அம்பிகையின் சிலை கிடைத் தது. இதை அபூர்வ நிகழ்வாகக் கருதி அந்த அம்பிகைக்கு ‘அபூர்வ நாயகி’ என்னும் திருப்பெயர் சூட்டி பிரதிஷ்டை செய்தார். அபூர்வ நாயகியே இந்தத் தலத்தின் பிரதான அம்பிகையாகத் திகழ்கிறாள். அம்பிகை சந்நிதிகள் இரண்டும் அடுத்தடுத்து அமைந்திருக்கின்றன.

நம்பிக்கைகள்

கற்கடம் என்றால் நண்டு. கடக ராசியை சேர்ந்த ஆயில்ய நட்சத்திரத்திற்கு சிறந்த மருத்துவ குணங்கள் உண்டு. ஆயில்ய நட்சத்திரமானது ஆன்மீக ரீதியாக மனம், உள்ளத்தில் ஏற்படும் குழபங்களையும், உடலில் ஏற்படும் நோய்களையும் தீர்க்க வல்லது. ஆயில்யநட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தேய்பிறை, ஆயில்யம், அஷ்டமி சேரும் நாட்களில் இத்தல இறைவனுக்கு நல்லெண்ணை சாற்றி வழிபாடு செய்தால் வாழ்வில் வளம் பெருகும், உடலும் உள்ளமும் நலம் பெறும். இது தவிர அமாவாசை, செவ்வாய், சனி கிழமைகளிலும் இங்கு வழிபாடு செய்யலாம். பிற நட்சத்திரக்காரர்களும் இந்த நாட்களில் தங்களுக்கு உரிய மருந்துகளுடன் கற்கடேஸ்வரரையும், அருமருந்து நாயகியையும் அடிப்பிரதட்சணம் செய்து வழிபட்டு பின் மருந்து சாப்பிட்டு வந்தால் எந்தவித நோயிலிருந்தும் நிவாரணம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

சிறப்பு அம்சங்கள்

பொதுவாக கோயில்களில் ஒரு அம்பாள் மட்டுமே இருப்பாள். ஆனால் இங்கு அருமருந்து நாயகி, அபூர்வநாயகி இரண்டு அம்பிகையர் அடுத்தடுத்த சன்னதிகளில் காட்சி தருகிறன்றனர். இங்கு பிரதான அம்பிகையாக அபூர்வநாயகி கருதப்படுகிறாள்.

திருவிழாக்கள்

மகா சிவராத்திரி, திருக்கார்த்திகை

காலம்

1000-2000 வருடங்களுக்கு முன்

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருவிசநல்லூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

கும்பகோணம்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top