Wednesday Dec 25, 2024

அருள்மிகு எமதண்டீஸ்வரர் திருக்கோயில், ஆலகிராமம்

முகவரி

அருள்மிகு எமதண்டீஸ்வரர் திருக்கோயில், ஆலகிராமம், விழுப்புரம் மாவட்டம் – 604 302.

இறைவன்

இறைவன்: எமதண்டீஸ்வரர் இறைவி: திரிபுரசுந்தரி

அறிமுகம்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்த கூட்டேரிப்பட்டில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில், உட்புறமாக அமைந்துள்ளது ‘ஆலகிராமம்.’ தொண்டி ஆற்றின் வடக்கு கரைப்பகுதியில் அமைந்துள்ளதால் ‘ஆற்கரமூர்’ என அழைக்கப்பட்டு நாளடைவில் மருவி ‘ஆலகிராமம்’ என ஆனது. இங்குதான் 1500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ‘எமதண்டீஸ்வரர்’ சிவாலயம் அமைந்துள்ளது. பராமரிப்புகள் இன்றிப் பழுதடைந்து காணப்பட்ட இந்த ஆலயத்தில் ஊர் பொதுமக்கள் திருப்பணி செய்யத் தொடங்கியபோது விநாயகர், முருகன், விஷ்ணு, லகுலீசுவரர் ஆகிய தெய்வத்திருமேனிகள் கிடைத்தன. இந்தச் சிலைகளின் பாணி பல்லவர் காலத்தைச் சேர்ந்தவை என்று ஆய்வாளர்கள் உறுதி செய்தனர்.

புராண முக்கியத்துவம்

பதினாறு வயதையே தன் ஆயுள் காலமாகக் கொண்ட மார்க்கண்டேயன், தனது ஆயுளின் இறுதி நாளினை அறிந்து, அன்று சிவபூஜை செய்யத் தொடங்கினான். யமன் அவன் உயிரினைக் கவர்ந்துசெல்ல வந்தபோது மார்க்கண்டேயன் சிவனிடம் சரணாகதி அடைந்து சிவலிங்கத்தைக் கட்டிக்கொண்டான். யமன், தன் பாசக்கயிற்றை மார்க்கண்டேயன் மீது வீச, அது சிவன் மீதும் விழுந்தது. ஆதியும் அந்தமும் இல்லாத அருட்பெரும் ஜோதியான சிவன் தன் மீது பாசக்கயிறு வீசப்பட்டத்தால் கோபம் கொண்டு காலனைக் காலால் உதைத்தார். மார்க்கண்டேயனுக்குச் சிரஞ்சீவி வரமருளினார். சிவன் மேல் பாசக்கயிற்றை வீசிய பாவம், யமனைத் துன்புறுத்தி அவனின் தர்மத்தைச் செய்ய விடாமல் தடுத்தது. அதனால் பல தலங்களுக்கும் சென்ற யமன், தற்போது ஆலகிராமம் என்று அழைக்கப்படும் தலத்தை அடைந்தான். இந்தத் தலத்தில் சிவனை நோக்கித் தவமிருந்தான். யமனின் தவத்தால் மகிழ்ந்த சிவபெருமான் யமனுக்குக் காட்சி கொடுத்து, “ஆறுமுறை கங்கையில் நீராடினால் உன் பாவம் நீங்கும்” என்று சொன்னார். மேலும் யமன் நீராட, தன் சக்தியினால் அங்கு இருக்கும் குளத்தில் கங்கையினை வருவித்தார். சிவன் யமனுக்குக் காட்சியளித்து கங்கையை வருவித்த தலம் ‘ஆலகிராமம்’. இங்குள்ள இறைவனுக்கு எமதண்டீஸ்வரர் என்று பெயர். 2015-ம் ஆண்டு ஊர்ப் பொதுமக்கள் இந்த ஆலயத்தில் திருப்பணி மேற்கொண்டபோது பழைமை வாய்ந்த 4 சிற்பங்கள் இருப்பதைக் கண்டு அதை மீட்டனர். அவற்றைப் பின்பு ஆய்வுசெய்தபோது, அதில் விநாயகர், லகுலீசுவரர் ஆகிய சிற்பங்களில் இருந்த கல்வெட்டுகளை மட்டுமே படிக்க முடிந்தது. முருகன் சிற்பத்தில் இருந்த கல்வெட்டு படிக்க இயலாதபடிச் சிதைந்திருந்தது. இங்குள்ள, 75 சென்டி மீட்டர் உயரமும், 40 சென்டிமீட்டர் அகலமும் கொண்ட ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்டிருக்கும் அழகிய விநாயகர் சிலை தமிழகத்திலேயே மிகவும் பழைமையான விநாயகர் சிலையாகக் கருதப்படுகிறது. அதனால்,அவரை ‘மூத்த விநாயகர்’ என அழைக்கிறோம். பிள்ளையார்பட்டியில் உள்ள கற்பக விநாயகர் சிலை, கி.பி. 6-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. ஆனால், இந்த விநாயகர் சிற்பத்தில் காணப்படும் தமிழ் வட்டெழுத்துகள், கி.பி. 4-ம் நூற்றாண்டிற்கும் கி.பி. 6-ம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்டது. எனவே இந்தச் சிற்பமே பிள்ளையார்பட்டிச் சிலையை விடப் பழைமையானது என்பது கல்வெட்டின் மூலம் உறுதியாகிறது. இங்குக் காணப்பட்ட மற்றொரு சிற்பம் லகுலீசுவரர் சிற்பம். லகுலீசுவர் என்பது சிவபெருமானின் 28-வது நாமமாகும். லகுலம் என்றால் ‘தடி’ எனப்படும். சிவபெருமான் மீது அதீத பக்தி கொண்டு செவ்வாடை மட்டும் உடுத்தி, உடல் முழுவதும் சாம்பலை பூசிக்கொண்டு அரைநிர்வாணமாக இறைவனைப் பூஜிக்கும் அகோரிகள் வழிபடும் தெய்வமாக இந்த லகுலீசுவரர் இருந்துள்ளார். இந்த லகுலீசுவரர் வழிபாடு குஜராத்தில் தோன்றிப் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக கர்நாடகம், ஆந்திரா, தமிழ்நாடு, ஒடிசா ஆகிய இடங்களில் பரவியது. இந்த ஆலயத்தில் மேற்குத் திசையில் தற்போது வைக்கப்பட்டிருக்கும், ஒரே பலகைக் கல்லில் வடிக்கப்பட்ட, நாலரை அடி உயரமும், இரண்டரை அடி அகலமும் கொண்ட விஷ்ணு சிற்பம் பல்லவர்காலச் சிற்ப பாணியைச் சேர்ந்தது. இந்தச் சிற்ப்பத்தில் ஸ்ரீதேவி-பூதேவி இருவரும் வணங்கி தொழ, மகாவிஷ்னு ருத்ராட்சம் அணிந்தவராக நெற்றியில் திருநீறு துலங்கக் காட்சி தருகிறார். இங்குச் சதுர வடிவில் இருக்கும் மூலவரின் ஆவுடையார், சதுரக் கருவறை, சதுர்சய விமானம் ஆகியன பல்லவர் காலத்தை உறுதி செய்கிறது. இங்குக் கோயில்கொண்டிருக்கும் அன்னை திரிபுரசுந்தரி, 6 அடி உயரத்தில் இரு கரங்களில் நீலோத்பலம் மற்றும் தாமரை கொண்டும், வலதுகரத்தில் அபயம் அளித்தும், இடது கரம் வரமருளும்படியும் நின்ற கோலத்தில் திருக்காட்சியருள்கிறார்.

நம்பிக்கைகள்

இந்த ஆலயத்தில் பிரதோஷம் மிக விசேஷமாக நடைபெறும். பிரதோஷ காலங்களில் நந்தி பெருமான் சுவாசிப்பதை உணரமுடியும் என்று சொல்கிறார்கள். கங்கையை இறைவன் இங்கு வருவித்ததால் ஆலயத்தின் எதிரில் உள்ள குளத்தில் கங்கை தேவி சிலை அமைந்துள்ளது. இங்கு நீராடுவதன் மூலம் கங்கையில் நீராடும் புண்ணிய பலனைப் பெறலாம் என்று நம்பப்படுகிறது. இந்தத் தலத்தில் திருமணம் செய்வது சிறப்பானதாகக் கருதப்படுகிறது. இது தவிர சஷ்டியப்தப் பூர்த்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகம், போன்றவை இங்குச் செய்வது விசேஷமாகக் கருதப்படுகிறது. இங்கிருக்கும் மூத்த விநாயகருக்குக் கணபதி ஹோமம் செய்து வழிபடச் சகல செல்வமும் நீண்ட ஆயுளும் பெறலாம் என்பது ஐதீகம்.

சிறப்பு அம்சங்கள்

ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்டிருக்கும் அழகிய விநாயகர் சிலை தமிழகத்திலேயே மிகவும் பழைமையான விநாயகர் சிலையாகக் கருதப்படுகிறது. ஒரே பலகைக் கல்லில் வடிக்கப்பட்ட, நாலரை அடி உயரமும், இரண்டரை அடி அகலமும் கொண்ட விஷ்ணு சிற்பம் பல்லவர்காலச் சிற்ப பாணியைச் சேர்ந்தது. இந்தச் சிற்ப்பத்தில் ஸ்ரீதேவி-பூதேவி இருவரும் வணங்கி தொழ, மகாவிஷ்னு ருத்ராட்சம் அணிந்தவராக நெற்றியில் திருநீறு துலங்கக் காட்சி தருகிறார். இந்த எமதண்டீஸ்வரர் ஆலயத்தில் உள்ள திரிபுரசுந்தரி அம்பாள் வாரத்தில் ஏழு தினங்களிலும் ஏழு விதமான முகபாவங்களோடு காட்சி கொடுப்பார். பொதுவாகச் சிவாலயங்களில் நவகிரக சந்நிதி அமைந்திருக்கும். இந்த ஆலயத்தில் இறைவனே சகல தோஷங்களையும் நிவர்த்தி செய்வதால் நவகிரகங்கள் இல்லாத ஆலயமாக இந்த ஆலயம் திகழ்கிறது.

திருவிழாக்கள்

சித்திரை மாத மகம் நட்சத்திரத்தன்று மார்க்கண்டேயருக்கு வரமளித்த விழாவும், சோமவார பூஜையும், பிரதோஷம், மகாசிவராத்திரி விழாக்களும் இங்குச் சிறப்பாக நடைபெறும்.

காலம்

1500 ஆண்டுகள்

அருகிலுள்ள பேருந்து நிலையம்

கூட்டேரிப்பட்டி

அருகிலுள்ள இரயில் நிலையம்

விழுப்புரம்

அருகிலுள்ள விமான நிலையம்

புதுச்சேரி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top