அருள்மிகு அசலதீபேஸ்வரர் திருக்கோயில், மோகனூர்
முகவரி
அருள்மிகு அசலதீபேஸ்வரர் திருக்கோவில், மோகனூர், மோகனூர் அஞ்சல், நாமக்கல் வட்டம், நாமக்கல் மாவட்டம் PIN – 637015.
இறைவன்
இறைவன்: அசலதீபேஸ்வரர், குமரீசுவரர் இறைவி: மதுகரவெனி அம்பிகை
அறிமுகம்
நாமக்கல்லில் இருந்து தெற்கே 17 கி.மீ. தொலைவில் மோகனூர் உள்ளது. மோகனூர் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் காவிரியின் வடகரையில் கோவில் உள்ளது. நாமக்கல்லிலிருந்து மோகனூருக்கு அடிக்கடி பேருந்துகள் உள்ளன. காவிரி ஆற்றின் வடகரையில் இவ்வாலயம் சுமார் ஒரு ஏக்கர் நிலப்பரப்பளவில் ஒரு பிராகாரத்துடன் அமைந்துள்ளது. மூலவர் சுயம்புலிங்கத் திருமேனி. இறைவன் மேற்கு நோக்கியும், அம்பாள் கிழக்கு நோக்கியும் அமைந்திருப்பது இத்தலத்தின் சிறப்பம்சம். இத்தலத்தின் தீர்த்தமாக காவிரி விளங்குகிறது. குமரித்துறை என்று கூறப்படும் அகண்ட காவிரித் தீர்த்தம் கங்கையிலும் புனிதமானதாக போற்றப்படுகிறது. தலமரம் வில்வம். பிராகாரத்தில் விநாயகர், முருகர், காலபைரவர், துர்க்கை, நடராஜர், காளி, மற்றும் 63 நாயன்மார்கள் சந்நிதிகள் உள்ளன. இறைவன் சந்நிதியில் ஏற்றப்படும் தீபம் எவ்வளவு காற்று அடித்தாலும் அணையாத தீபமாக சுடர் விட்டு எரிவதால் சுவாமிக்கு அசலதீபேஸ்வரர் என்று பெயர். இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள வைப்புத் தலமாகும்.
புராண முக்கியத்துவம்
மாங்கனி தனக்கு கொடுக்கவில்லையே என்று தாய், தந்தையிடம் கோபித்துக் கொண்டு வந்த முருகனைத் தேடி சுவாமியும் அம்பாளும் தேடி வந்தபோது இவ்வூரில் முருகனைக் கண்டு மகிழ்ந்தனர் எனவும், இதன் அடிப்படையில் இவ்வூருக்கு மகனூர் என்ற பெயர் ஏற்பட்டு நாளடைவில் மருவி மோகனூர் என்று இன்றைய நாளில் வழங்குவதாகவும் கூறப்படுகிறது. மேலும் முற்காலத்தில் குமரிபாளையத்தில் தயிர் விற்று வாழ்ந்து வந்த தேனாயி என்ற பெண்ணிற்கு மகப்பேறு அளித்ததால் சுவாமிக்கு குமரீசுவரர் என்றும், இவ்வூருக்கு மகவனூர் என்றும் பெயர் ஏற்பட்டதாக கொங்குமண்டல சதகம் கூறுகிறது. மகவனூர் பின் நாளில் மோகனூர் என்று மருவிற்று. ஆடிப்பெருக்கு நாளன்று இத்தலத்தில் காவிரியில் நீராடி இறைவனை வழிபடுவது பெரிய திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.
திருவிழாக்கள்
ஆடிப்பெருக்கு நாளன்று இத்தலத்தில் காவிரியில் நீராடி இறைவனை வழிபடுவது பெரிய திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.
காலம்
1000-2000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத் துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மோகனூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
நாமக்கல்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி