அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில் – பரணி நட்சத்திரம்
முகவரி
அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில், நல்லாடை, தரங்கம்பாடி தாலுக்கா, நாகப்பட்டினம் மாவட்டம். Phone: +91 4364-285 341,97159 60413,94866 31196
இறைவன்
இறைவன்: அக்னீஸ்வரர் இறைவி: சுந்தரநாயகி
அறிமுகம்
அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில், நல்லாடை எனும் ஊரில் உள்ளது. இத்தல இறைவன் மேற்கு நோக்கி அருள்பாலிப்பது முக்கிய சிறப்பாகும். இந்த கோயில் பரணி நட்சத்திரக்கார்களுக்கு உரியது. பரணி நட்சத்திரக்காரர்கள் நன்றி உணர்வு கொண்டவர்களாகவும், எதிரிகளைச் சுலபத்தில் வெற்றி கொள்ளும் திறமை கொண்டவர்களாகவும் இருப்பர். தானதர்மங்களைச் செய்யும் இயல்பால் மற்றவர்கள் இவரைப் பாராட்டுவர். அதிர்ஷ்ட தேவதையின் அருளால் தொட்டவையாவும் துலங்கும். தன்னுடைய தேவைகளைத் தானே சாதித்துக் கொள்ளும் சாமர்த்தியம் பெற்றிருப்பர்.பரணி நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர். பரணி நட்சத்திரக்காரர்கள் இவருக்கு ஹோமம் செய்து வழிபடுவது சிறப்பு. குறிப்பாக, கார்த்திகை மாதம் பரணி நட்சத்திரத்தன்று ஹோமம் செய்தால் பலன் இரட்டிப்பாக இருக்கும்.
புராண முக்கியத்துவம்
மிருகண்ட மகரிஷி இத்தல இறைவனுக்கு யாகம் நடத்த ஏற்பாடு செய்தார். இந்தயாகத்திற்கான பொருள்களை மக்களே வழங்கலாம் என்று அறிவித்தார். மக்கள், தங்கம் கலந்த பட்டாடை மூன்றை நெய்தனர். அவற்றில் ஒன்றை இறைவனுக்கும், ஒன்றை மிருகண்ட மகரிஷிக்கும், இன்னொன்றை தங்கள் மன்னனுக்கும் வழங்கினார்கள். யாகமுடிவில், இறைவனுக்கு கொடுத்த பட்டாடையையும், தனக்கு கொடுத்ததையும் மிருகண்ட மகரிஷி யாக குண்டத்தில் போட்டு விட்டார். நெருப்பில் போட்டபட்டாடைகள் இறைவனை அடைந்து விடுமா என்று மக்கள் மகரிஷியிடம் சந்தேகம் எழுப்பினர். நீங்கள் மூலஸ்தானத்தில் சென்று பாருங்கள், விபரம் புரியும், என்றார். மக்கள் ஆர்வமாக கோயிலுக்குள் சென்று மூலஸ்தானத்தைப் பார்த்தனர். அங்கிருந்த சிவலிங்கத்தின் மேல், யாக குண்டத்தில் போடப்பட்ட பட்டாடைகள் போர்த்தப்பட்டிருந்ததைக் கண்டு ஆச்சரியப்பட்டனர். இவை எப்படி அங்கு வந்தன? என்று மிருகண்ட மகரிஷியிடம் கேள்வி எழுப்பினர். மகரிஷி மக்களிடம், அக்னியின் பல வகைகளில் பரணி என்னும் ருத்ராக்னியும் ஒரு வகையாகும். அந்த அக்னியே இறைவனுக்கு நாம்இடும் பொருட்களைஅவரிடம் கொண்டு சேர்க்கிறது, என்றார். இதனால் தான் இத்தலம் பரணி நட்சத்திரத்திற்கு உரிய கோயிலாக திகழ்கிறது.
நம்பிக்கைகள்
பரணியில் பிறந்தோர் தோர் தரணி ஆள்வர் என்பது பழமொழி. இங்கு சிவன் அக்னி சொரூபமாக திகழ்வதால், பரணி நட்சத்திரக்காரர்கள் அடிக்கடியோ அல்லது பரணி நட்சத்திரத்தன்றோ ஹோமம் செய்து வழிபடுவது சிறப்பு. அதிலும் குறிப்பாக ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் பரணி நட்சத்திரத்தன்றுஇக்கோயிலுக்கு சென்று ஹோமம் செய்து, சிவனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் வாழ்வு சிறக்கும் என்பது ஐதீகம்.
சிறப்பு அம்சங்கள்
இத்தல இறைவன் மேற்கு நோக்கி அருள்பாலிப்பது முக்கிய சிறப்பாகும். மூலஸ்தானத்தில் உள்ள லிங்கத்தை சுற்றி ஒரு தாழ்வான பகுதி உள்ளது. சுவாமி அக்னீஸ்வரர் அக்னி சொரூபமாக உள்ளதால் அதனை தணிக்கும் வகையில் அந்த தாழ்வான பகுதியில் தண்ணீர் ஊற்றப்பட்டு இருப்பது தலத்தின் முக்கிய சிறப்பம்சமாகும்.
திருவிழாக்கள்
ஐப்பசி அன்னாபிஷேகம், கார்த்திகை சோமவாரம், மார்கழி தனுர் பூஜை, வைவெள்ளி, தைப்பூசம், மகா சிவராத்திரி, பங்குனி உத்திரம், ஆருத்திரா தரிசனம்,கார்த்திகை மாத ஞாயிற்று கிழமைகளில் பஞ்ச மூர்த்தி புறப்பாடு.
காலம்
1000 years old
நிர்வகிக்கப்படுகிறது
–
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மயிலாடுதுறை
அருகிலுள்ள இரயில் நிலையம்
மயிலாடுதுறை
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி