Wednesday Dec 18, 2024

அரியத்துறை வரமூர்த்தீஸ்வரர் திருக்கோயில், திருவள்ளூர்

முகவரி

அருள்மிகு வரமூர்த்தீஸ்வரர் திருக்கோயில், அரியத்துறை, கும்மிடிப்பூண்டி தாலுகா, திருவள்ளூர் மாவட்டம் – 601206.

இறைவன்

இறைவன்: வரமூர்த்தீஸ்வரர் இறைவி: சுந்தரவல்லி

அறிமுகம்

அருள்மிகு வரமூர்த்தீஸ்வரர் கோவில் தமிழ்நாடு திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாலுகாவில், கவரைப்பேட்டை என்ற இடத்திற்கு மேற்கு பகுதியில் 3 கிலோமீட்டர் தொலைவில் அரியத்துறை, உள்ளது. சிறப்புமிக்க அரியத்துறை, திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாலுகாவில், கவரைப்பேட்டை என்ற இடத்திற்கு மேற்கு பகுதியில் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சென்னை சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி ரெயில் வழித்தடத்தில் கவரைப்பேட்டை ரெயில் நிலையத்தில் இறங்கி, ஆட்டோ மூலம் அரியத்துறை செல்லலாம். பஸ் வசதி இல்லை என்பதால், கவரைப்பேட்டையில் இறங்கி ஆட்டோ மூலம் மட்டுமே செல்ல முடியும்.

புராண முக்கியத்துவம்

வற்றாத காசித் தீர்த்தம் கொண்ட தலம், பிரம்மன் தோற்றுவித்த ஆரணி ஆற்றோரம் அமைந்த பஞ்ச பிரம்மத் தலம், ரோம மகரிஷி நிறுவிய சிவன், பாரிஜாத மரத்தின் சாபத்தால் கண்ணன் அரச மரமாகி நின்ற பூமி, மன்னன் மகளையே மணம் புரிந்த இறைவன் வாழும் கோவில், இந்திரனின் சாபம் நீக்கிய தலம் என பல பெருமைகளை தனக்குள் கொண்டு, ஆலயமாக உயர்ந்து நிற்கிறது, திருவள்ளூர் மாவட்டம் அருகே உள்ள அரியத்துறை வரமூர்த்தீஸ்வரர் கோவில். பிரம்மன் உருவாக்கிய ஆரணியாற்றில் ஐந்து ஆலயங்கள் தோன்றின. அவற்றில் ரிஷிகளும், முனிவர்களும், மகான்களும் தவம் இயற்றினர். அவை பஞ்ச பிரம்மத்தலங்கள் எனப் போற்றப்படும் ராமகிரி, சுருட்டப்பள்ளி, ஆரணி, அரியத்துறை மற்றும் பழவேற்காடு கோவிலடி ஆகியவை ஆகும். ரோம மகரிஷி, தான் தவமிருக்க தகுந்த இடத்தினைக் காட்டியருளுமாறு பிரம்மனை வேண்டி நின்றார். அதற்கு செவி சாய்த்த பிரம்மன் தன் கையிலிருந்த தர்ப்பையை ஒரு பந்து போல ஆக்கி, அதனை தூக்கி வீசினார். அது உருண்டோடி பிரிந்த இடமே நதியாக உருவாகி ஆரணி நதி என பெயர் பெற்றது. அதன் கரையோரம் ரோம மகரிஷி தவமியற்றிய இடமே அரியத்துறையாகும். பலநூறு ஆண்டுகள் தவமியற்றிய ரோம மகரிஷிக்கு, இறைவனும் இறைவியும் காட்சி தந்து வரமளித்தனர். அதன் பின் ரோம மகரிஷி அத்தலத்திலேயே லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபடலானார். அது முதல் இறைவன் வரமூர்த்தீஸ்ரர் என அழைக்கப்படுகிறார். அத்திரி முனிவர் – அனுசுயா தம்பதியரின் ஐந்து புதல்வர்களுள், இளையவர் முகுந்தன் ஆவார். இவர் சிவபெருமான் மீது பற்று கொண்டவர். காசிக்குச் சென்று கங்கையில் நீராடி, காசி விசுவநாதரைத் தரிசிக்க விரும்பினார். அப்போது அவர் ரோம மகரிஷியை சந்திக்க நேர்ந்தது. முகுந்தன் தனது ஆசையை முனிவரிடம் கூறினார். அதற்கு ரோம மகரிஷி, ‘கங்கைக்கு இணையான மகத்துவம் கொண்ட ஆரணி ஆற்றில் குளித்து, அருகேயுள்ள வரமூர்த்தீஸ்வரரை வணங்கினால் போதும். உனக்கு காசிக்கு இணையான புண்ணியம் கிட்டும்’ என்றார். முகுந்தனும் அதன்படியே செய்ய, அங்கே சிவபெருமான் காட்சி தந்தார். மேலும் பைரவரும் அவரின் பின்னே கங்கையும் தோன்றினர். அப்போது கங்கையிடம் இருந்து நீர் சுரந்து ஆரணியாற்றில் கலந்தது. இந்த அதிசயத்தைக் கண்ட முகுந்தன் ‘அரியத்துறை! அரியத்துறை!’ என கூவி மகிழ்ந்தார். அதுமுதல் இவ்விடம் அரியத்துறை என்றே வழங்கப்படுகிறது. அரிய என்பதற்கு ‘அரிதான’ என்பதும், துறை என்பதற்கு ‘ஆற்றில் குளிக்கும் இடம்’ என்பதும் பொருளாகும். இதற்குச் சாட்சியாக இந்த கங்கையின் காசித் தீர்த்தம் இன்றளவும் சிவாலயத்தின் பின்புறம் காணப்படுகிறது. அதனைக் கவுரவிக்கும் வகையில் தற்போது தனி மண்டபமும் எழுப்பப்பட்டுள்ளது. ஆற்றில் நீர் இல்லாத நிலையிலும், ஆற்றின் கரை மீதுள்ள இத்தீர்த்தம் தொடர்ந்து நீரை சுரந்து கொண்டே இருப்பது, அதிசயமான நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பகுதியை ஆட்சி செய்து வந்த சித்திரசேனன் என்ற மன்னனுக்கு முதலில் ஐந்து குழந்தைகள் பிறந்து இறந்து விட்டன. பிறகு நான்கு குழந்தைகள் பிறந்து, அவைகளும் இறந்து விட்டன. இதனால் மனம் வெறுத்த மன்னன் ஆட்சியை ஒருவரிடம் ஒப்படைத்துவிட்டு தன் மனைவியுடன் வெளியேறினான். அப்போது அங்கே நந்தவனத்தில் கொடிகளின் மீது மரகத ஒளி வீசிய குழந்தை ஒன்று சிரித்த முகத்துடன் கைகால்களை உதைத்துக் கொண்டு மகிழ்ச்சியுடன் விளையாடிக் கொண்டிருந்தது. அதைக் கண்ட சித்திரசேனனுக்கு ஒன்றும் புரியவில்லை. ஒளிவீசும் இக்குழந்தை வரமூர்த்தீஸ்வரரின் கொடையே என மகிழ்ந்தார். அக்குழந்தையை இரு கரங்களால் தாங்கி மன மகிழ்ச்சியுடன் தன் அரண்மனை திரும்பினான். நாட்டு மக்களும் மகிழ்ச்சி அடைந்து, அவனையும் குழந்தையையும் வரவேற்றனர். மீண்டும் மன்னர் நல்லாட்சி புரியத் தொடங்கினார். அப்பெண் குழந்தைக்கு மரகதவல்லி எனப் பெயரிட்டு வளர்த்து வந்தான். மரகதவல்லி திருமண வயதை அடைந்தாள். சுயம்வரம் நடத்த அனைத்து மன்னர் களுக்கும் ஓலை அனுப்பினான். சுயம்வரம் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக ஒளிவீசும் அழகு பொருந்திய ஆண்மகன் ஒருவன் குதிரையில் வந்து மரகதவல்லியின் கரம் பற்றி தன் குதிரையில் ஏற்றி தப்பி ஓடினான். உடனே மன்னன் தன் படை வீரர்களை ஏவி அவனைப் பிடிக்க ஆணையிட்டான். ஆனால், எவரும் எவரையும் பிடித்ததாகத் தகவல் இல்லை. மனம் வருந்திய மன்னன் வரமூர்த்தீஸ்வரர் ஆலயம் சென்று மனமருகி வேண்டி நின்றான். மக்களும் அவன் பின்னே சென்றனர். அப்போது வானில் மரகதவல்லியோடு, வரமூர்த்தீஸ்வரர் வானில் காட்சி தந்தார். ‘உனக்கு மகப்பேறு தரவே யாம் எம் துணைவியை உனக்கு மகளாக அனுப்பி வைத்தோம்.இப்போது இவளுக்கு நீ தந்தை என்ற நிலையை அடைந்து விட்டாய். இனி இவளை நான் துணையாக ஏற்கின்றேன்’ எனக் கூறினார். மன்னன் உட்பட அனைவரும் மனம் மகிழ்ந்தனர். அன்னை மரகதவல்லியும் அத்தலத்தில் நிலைத்து நின்று அருள் வழங்கி வருகின்றார். பாரிஜாத மரத்தின் சாபத்தால், அரச மரமாக மாறிய கண்ணன், அரியத்துறையில் ஆயிரம் ஆண்டுகள் தவமிருந்து சாபம் நீங்கப் பெற்றதாகத் தலபுராணம் கூறுகிறது.அதற்குச் சாட்சியாக பிரம்மாண்ட அரச மரமும், அதன் அடியில் ரோம மகரிஷியின் சன்னிதியும் ஆலயத்தின் அருகில் அமைந்துள்ளன. இதனை மூன்று முறை வலம் வருவோருக்கு தோஷமும், சாபமும் நீங்கும் என்பது ஐதீகமாக உள்ளது. கிழக்கில் சிறிய வாசலும், தெற்கே பெரிய நுழைவு வாசலையும் கொண்டு ஆலயம் விளங்குகிறது. ஆலயத்தின் தென்மேற்கு மூலையில் விநாயகர் சன்னிதி, தென்கிழக்கில் மடப்பள்ளி மற்றும் யாகசாலை, இதன் எதிரே கல்யாண மண்டபம் ஆகியன அமைந்துள்ளன.பஞ்சகோட்டம் கொண்ட கருவறைச் சுவரில், நின்ற நிலையில் விநாயகர், நாகத்தின் தலை மீது முட்டியை வைத்துள்ள அபூர்வ தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, அதன் கீழ் சண்டிகேசுவரர் ஆகியோர் காட்சி தருகின்றனர்.

சிறப்பு அம்சங்கள்

கருவறையின் பின்புறம் பாலசுப்பிரமணியரும், கிழக்கே கொடிமரம், பலிபீடம், எளிய வடிவில் நந்திதேவர் ஆகியோரும் காட்சி தருகின்றனர். இதன் வலதுபுறம் சுயம்பு பைரவர் தனிச் சன்னிதியில் வீற்றிருக்கிறார். இதில் மண்ணால் ஆன சுயம்பு பைரவர் மற்றும் சிலா வடிவ பைரவர் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆலயத்தின் தென்புற வாசலில் நுழைந்ததும், எதிரே அன்னை மரகதவல்லி எளிய வடிவில் எழிலான கோலத்தில் அருளாட்சி செய்து வருகின்றாள். அதன் அருகே நடராஜர் சன்னிதி அமைந்துள்ளது. இதில் அன்னை சிவகாமியுடன் மாணிக்கவாசகர், பதஞ்சலி மற்றும் வியாக்ரபாதர் வடிவங்கள் உற்சவமூர்த்திகளாகக் காட்சி தருகின்றன. இதுதவிர, திருமணஞ்சேரியின் வடிவத்தை ஒத்த கல்யாண சுந்தரேஸ்வரர், சோமாஸ்கந்தர் ஆகிய உற்சவ மூர்த்திகளும் உள்ளன. கோவிலின் நாயகர் வரமூர்த்தீஸ்வரர், கிழக்கு முகமாய் எளிய வடிவில் சதுர வடிவ ஆவுடையாராக காட்சி தருகின்றார். அரியத்துறையில் எண்ணற்ற திருவிளையாடல்கள் நிகழ்த்திவிட்டு, எதுவும் அறியாதவர் போல இறைவன் அமர்ந்திருப்பது, நம்மை வியக்க வைக்கிறது. இந்து சமய அறநிலையத் துறையால் நிர்வகிக்கப்படுகிறது.

திருவிழாக்கள்

திருக்கார்த்திகை, மகா சிவராத்திரி, திருவாதிரை, கந்த சஷ்டி.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

கவரைப்பேட்டை

அருகிலுள்ள இரயில் நிலையம்

கவரைப்பேட்டை

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top