அய்ஹோல் கோயில்
முகவரி
அய்ஹோல் கோயில் பாகல்கோட், கர்நாடகா- 587124 இந்தியா
இறைவன்
இறைவன்: விஷ்ணு
அறிமுகம்
ஐகொளெ அல்லது அய்கொளெ (Aihoḷe) கர்நாடக மாநிலம், பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர். இவ்வூர் வரலாற்றுச் சிறப்புபெற்ற பழங்காலக் கோயில்களைக் கொண்டுள்ளது. பெங்களூருவிலிருந்து 510 கிமீ தொலைவில் அமைந்துள்ள அய்கொளெ. கிபி ஐந்தாம் நூற்றாண்டு காலத்திலிருந்து கட்டப்பட்ட 125 (கிட்டத்தட்ட) கற்கோயில்களைக் கொண்டு சாளுக்கிய கட்டிடபாணிக்குச் சான்றாக விளங்குகிறது. இது வடகருநாடகத்தின் முக்கியச் சுற்றுலாத் தலம். மலப்பிரபா ஆற்றின் திசையில் பட்டடக்கல்லுக்குக் கிழக்கே அய்கொளெயும், பட்டடக்கல்லுக்கும் அய்கொளெக்கும் மேற்கில் பாதமியும் அமைந்துள்ளன. யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியக் களமாக இவ்வூர் அறிவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நிலுவையிலுள்ளது. தொடக்ககால கல்வெட்டுக்களில் அய்கொளெயின் பெயரானது ”ஆரியபுரம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. கிபி 450களில் உருவாக்கப்பட்ட அய்கொளெ, சாளுக்கிய அரசர்களின் முதல் தலைநகரமாக இருந்தது. இங்குள்ள 125 பழங்காலக் கோயில்களில் சில, சாளுக்கியக் காலத்து கட்டிடக் கலைஞர்களால் சோதனை முயற்சியாகக் கட்டப்பட்டவை. மெகுட்டி குன்றுகளுக்கருகிலுள்ள மொரெரா அங்கடிகாலுவில் (Morera Angadigalu) வரலாற்றுக்கும் முந்தைய ஆதாரங்கள் அதிகளவில் காணப்பட்டுள்ளன. சாளுக்கிய காலத்துக்கும் முந்தையகாலச் செங்கல் கட்டிடங்கள் இங்கு அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. வரலாற்று சிறப்புமிக்க அய்கொளெ, ’இந்தியப் பாறை கட்டிடக்கலையின் தொட்டில்’ என அழைக்கப்படுகிறது. சாளுக்கிய அரசன் முதலாம் புலிகேசி தனது தலைநகரை அய்கொளெயிலிருந்து அருகிலுள்ள பாதாமிக்கு மாற்றினான். தற்போது பாதாமி என்றழைக்கப்பட்டும் இவ்வூர் அக்காலத்தில் வாதாபி என்றழைக்கப்பட்டது. அய்கொளெயில் கோயில்கள் அமைப்பதில் கிடைத்த அனுபவங்களைக் கொண்டு சாளுக்கியர்கள் பட்டடக்கல்லில் மேலும் மேம்பட்ட கோயில்களைக் கட்டினர். அய்கொளெ கோயில் கட்டிடங்களின் காலம் கிபி 5-6ஆம் நூற்றாண்டுகளில் தொடங்கி 12 ஆம் நூற்றாண்டு வரை நீள்கிறது.
புராண முக்கியத்துவம்
பண்டைய இந்துக் கோயில் கட்டிடக்கலையின் தொட்டிலாக அய்கொளெ கருதப்படுகிறது. இங்கு 70 க்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. பல்வேறு பாணிகளில் கலைஞர்கள் கட்டிடங்கள் அமைப்பதற்கு சோதனை முயற்சிகளை மேற்கொண்டதை இங்குள்ள கட்டிடங்கள் காட்டுகின்றன. இங்குள்ள அக்காலக் கலைஞர்கள் அதிமுற்கால குடைவரைக் கோயில்களை உருவாக்கியுள்ளனர் அய்கொளெயில் தொடங்கிய கலைஞர்களின் கட்டுமானத் திறன், முழுவளர்ச்சியடைந்த சாளுக்கிய பாணி கட்டிடக்கலையாக முழுமையடைந்துள்ளது. சாளுக்கிய நாட்டிற்கு வடக்கிலும் தெற்கிலுமுள்ள நாட்டினரின் கட்டிட அமைப்புகளிலிருந்து, முற்காலச் சாளுக்கியர்கள் தங்களது கட்டிட பாணியை அமைத்துக் கொண்டனர். வட இந்தியபாணி வளைவு கோபுரங்கள், தாங்குபலகைகளுடன் அமைந்த தென்னிந்தியபாணி பூசப்பட்ட சுவர்கள், தக்காணப் பீடபூமியின் மேல்மாட அமருமிடங்கள், சரிவு இறவானங்கள், சாய்வு கூரைகள் மற்றும் வேலைப்பாடமைந்த தூண்களும் கூரைகளும் (George Michell,1997) சாளுக்கிய பாணி கட்டிடங்களில் பயன்படுத்தப்பட்டன. காரையில்லாத இணைப்புகள், அகலத்தையும் உயரத்தையும் விட நீளத்திற்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம், தட்டையான கூரைகள், சிறந்த சிற்ப வேலைபாடுகளுடைய உட்கூரைகள், கூட்டமாக இன்றி தனித்தனியாக வடிக்கப்பட்ட, தனிப்பட்ட முக்கியத்துவமளிக்கப்பட்ட சில குறிப்பிட வடிவங்கள் ஆகியவை பாதாமி சாளுக்கியக் கட்டிடங்களின் தனித்துவ அமைப்புகளாக உள்ளன. சாளுக்கியகாலச் சிற்பங்களில் காணப்படும் தரமும், அழகுணர்ச்சியும் பிற்கால இந்தியக் கலைப்பாணியில் காணப்படவில்லை. மேகுட்டி கோயிலிலுள்ள இரண்டாம் புலிகேசியின் புகழை எடுத்துரைக்கும் கல்வெட்டு ஒன்று மேகுட்டி கோயிலிலுள்ளது. இக்கல்வெட்டு, இரண்டாம் புலிகேசியின் அரசரவைப் புலவர் இரவிகீர்த்தியினதாகும். கிபி 634 காலத்தைச் சேர்ந்த இக் கல்வெட்டு சமசுகிருத மொழியில் பழைய கன்னட எழுத்துருக்களைக் கொண்டு அமைந்துள்ளது. இக்கல்வெட்டு அய்கொளெ கல்வெட்டு என அழைக்கப்படுகிறது. இதில் ஹர்சவர்த்தனரை எதிர்த்து அடைந்த வெற்றி, பல்லவர்களை வென்றது, தலைநகரை அய்கொளெயிலிருந்து பாதாமிக்கு மாற்றியது போன்ற இரண்டாம் புலிகேசியின் சாதனைகள் பற்றிய குறிப்புகளும், காளிதாசர் பற்றிய குறிப்பும் காணப்படுகின்றன. மானியம் வழங்கப்பட்ட குறிப்புடன் லாட் கான் கோயில் கல்வெட்டு (8 ஆம் நூற்றாண்டு). இரண்டாம் புலிகேசியால் அமைக்கப்பட்ட கல்வெட்டு (634 AD) ஒன்று அய்கொளெ ஜைனக் கோயிலில் உள்ளது. மகாபாரதப் போர் மற்றும் கலி யுகம் குறித்த விவரங்களுக்கு அறிஞர்கள் இக்கல்வெட்டை உறுதுணையாகக் கொள்கின்றனர். இக்கல்வெட்டில் சாளுக்கிய அரசன் மங்களேசன் காலசூரியர்களை வென்ற குறிப்பு உள்ளது. மேலும் பல்லவர்களுக்கும் வாதாபி சாளுக்கியர்களுக்கும் இடையே இருந்த எதிர்ப்புகள் பற்றிய குறிப்புகளும் இரண்டாம் புலிகேசிக்கும் மங்களேசனுக்கும் இடையே அரசுரிமை குறித்து நிகழ்ந்த உள்நாட்டுச் சண்டை மற்றும் அச்சண்டையின் விளைவாக முடிவுற்ற மங்களேசன் ஆட்சி பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. அய்கொளெயில் கண்டெடுக்கப்பட்ட முதலாம் அமோகவர்சன் கல்வெட்டில் அவனது புது ஆட்சிமுறை பற்றிய குறிப்புகள் உள்ளன. இங்கு துர்க்கா கோயில், லாட் கான் கோயில், இராவண பாடி குகை, ஜோதிர்லிங்க கோயில் தொகுதி, குச்சப்பய்ய குடி மற்றும் யேனியர் கோயில்களான, இராமலிங்கம் கோயில்கள், காளகநாதர் கோயில், சூரியநாராயணர் கோயில், சக்ரா குடி, குச்சிமல்லி கோயில், மேலும் சில பழமையான இந்துக் கோயில்களான படிகெர குடி (Badigera gudi), அம்பிகெர குடி (Ambigera Gudi), சிக்கி குடி (Chikkigudi Group), கௌடர் குடி (Gaudara gudi), ராச்சி குடி (Rachi gudi), குச்சப்பய்ய மடம் (Huchappayya Matha), காளபசப்பன்ன குடி (Halabasappana Gudi), கொண்டி குடி (Kontigudi group of temples), திரியம்பகேசுவரர் கோயில் (Triyambakeshvara Group) மற்றும் ஜைனக் கோயில்களான மேகுட்டி ஜைனக் கோயில், ஜைனக் குகைக் கோயில் மற்றும் புத்தக் குகை கோயில்கள் உள்ளன.
சிறப்பு அம்சங்கள்
இவை சிவன், விஷ்ணு, துர்கை ஆகியோரை வழிபடுவதற்காக எழுப்பப்பட்டவை. சில சமணக் கோயில்கள், மகாவீரர் மற்றும் நேமிநாதருக்கு எழுப்பப்பட்டவை . ஒரேயொரு பௌத்த விகாரை அமைந்திருக்கிறது.
காலம்
7 to 10ஆம் நூற்றாண்டு
நிர்வகிக்கப்படுகிறது
இந்திய தொல்பொருள் ஆய்வு (ASI)
அருகிலுள்ள பேருந்து நிலையம்
அய்ஹோல்
அருகிலுள்ள இரயில் நிலையம்
பாகல்கோட்
அருகிலுள்ள விமான நிலையம்
பெல்காம்