அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் மலைக்கோயில், கரூர்
முகவரி
அருள்மிகு ரத்தினகிரீஸ்வரர் மலைக்கோயில், அய்யர் மலை – வாட்போக்கி, குளித்தலை, சிவாயம் அஞ்சல்-639 120, வைகல்நல்லூர் வழி, கரூர் மாவட்டம். போன் +91-4323-245 522
இறைவன்
இறைவன்: ரத்தினகிரீஸ்வரர் (ராஜலிங்கம், வாள்போக்கி நாதர்), அரதனாசலேஸ்வரர் இறைவி: சுரப்பர்குழலி
அறிமுகம்
அய்யர்மலை இரத்னகிரீசுவரர் கோயில் (திருவாட்போக்கி) கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் அப்பர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது அகத்தியர் இறைவனை நண்பகலில் தரிசித்த தலமென்பதால் இவ்விறைவன் மத்தியான சுந்தரர் என்றும் வழங்குகிறார் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). இத்தலம் தற்போது மக்கள் வழக்கில் ஐயர்மலை என்று வழங்கப்படுகிறது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் முதலாவது சிவத்தலமாகும். [2] மேலும் இது ரத்தினாவளி சக்தி பீடமாகவும் விளங்குகிறது.
புராண முக்கியத்துவம்
இயற்கை எழில் சூழ்ந்த காட்சியுடன் விளங்கும் இம்மலை மேருமலையின் ஒரு சிகரம். சோதிலிங்க வடிவமானது. மலைக்கொழுந்தீஸ்வரராக எழுந்தருளியுள்ள பெருமான் சுயம்பு மூர்த்தி. காலையில் காவிரிக் கரையிலுள்ள கடம்பர் கோயிலில் வழிபாடு செய்துவிட்டு நடுப்பகலில் ரத்தினகிரீஸ்வரரை வணங்கி மாலையில் திருஈங்கோய் மலைநாதரை வழிபட்டால் நல்ல புண்ணியமுண்டு என்பது ஐதீகம். மணி முடி இழந்த ஆரிய மன்னன் ஒருவன் இத்தலத்திலுள்ள இறைவனுக்கு அபிசேக ஆராதனைகள் செய்கின்ற போது அங்குள்ள கொப்பரையில் காவேரி தீர்த்தம் ஊற்றி நிரப்பப்பட்டது. ஆனால் தீர்த்தம் ஊற்ற ஊற்ற கொப்பரை நிரம்பவே இல்லை. ஊர் மக்கள் அனைவரும் ஊற்றியும் நிரம்பாததால் மன்னன் கோபம் கொண்டு தன் வாளை உருவி சுவாமி மீது வீசினான். இதனால் சுயம்புவில் இருந்து ரத்தம் வந்தது. இதையடுத்து மன்னன் தன் தவறை உணர்ந்து இறைவனை வணங்கினான். இதையடுத்து இறைவன் தோன்றி மன்னனுக்கு அருளாசி வழங்கி இரத்தினங்களை வழங்கினான். அந்த தழும்பு இன்னும் சுவாமியின் முடியில் உள்ளது.
நம்பிக்கைகள்
தங்கள் குல தெய்வம் தெரியாதவர்கள் ரத்தினகிரீஸ்வரரை தங்கள் குலதெய்வமாக வழிபடலாம். தவிர இங்கு இறைவனை வழிபட்டால் கல்யாண வரம், தொழில் விருத்தி, புத்திர பாக்கியம் ஆகியவை நிறைவேறுகின்றன. இத்தலத்து ரத்தினகிரீஸ்வரரை வணங்கினால் மன அமைதி கிடைக்கும். நிம்மதி வேண்டுவோர் நிறைய பேர் இம்மலைக்கு வருகிறார்கள். தவிர இம்மலையில் படிகள் வழியே மலை ஏறும் போது ஏராளமான மூலிகை மரங்கள் இருபுறமும் உள்ளன. இத்தகைய அபூர்வமான மூலிகை காற்றை சுவாசிப்பதால் உடலில் உள்ள ஆஸ்துமா, ரத்த கொதிப்பு,நெஞ்சுவலி, கை கால் மூட்டு வலி, இரத்த அழுத்தம் ஆகியவை உள்ளவர்கள் ஒருமுறை மலை ஏறிவிட்டு வந்தாலே அதிசயமான மாற்றத்தை அடைவதை முழுமையாக உணர முடியும். இந்த பிரச்சினைகள் உள்ளவர்கள் அடிக்கடி வந்து வழிபட்டால் கூடிய விரைவில் குணமடைவது கண்கூடாக நடந்து வரும் அதிசயமான உண்மை.
சிறப்பு அம்சங்கள்
இறைவன் 9(நவ) ரத்தினங்களாக இருப்பதால் இம்மலையை சுற்றி அமைந்த சுற்று வட்டாரப்பகுதிகளில் பூமிக்கடியில் பச்சை கற்கள், சிவப்பு கற்கள் ஆகியவை நிறைய கிடைக்கின்றன. சுற்றிலும் 8 பாறைகளுக்கு நடுவே உள்ள ஒன்பதாவது பாறையில் சிவபெருமான் சுயம்புவாக எழுந்தருளியுள்ளார். 1117 படிகள் கொண்ட மலை மீது அமைந்துள்ள மிகவும் சிறப்பு வாய்ந்த சிவதலம். சித்திரை மாதங்களில் சூரிய கிரணங்கள் சுவாமி சன்னதிக்கு நேரேயுள்ள நவத்துவாரங்களின் வழியே சிவலிங்கத்தின் மீது விழுகின்றன. இம்மலையில் உள்ள பாம்புகள் தீண்டினால் விஷம் ஏறுவதில்லை. மணிமுடி இழந்து தேடி வந்த ஆரிய மன்னனுக்கு இரத்தினமும், சுந்தர மூர்த்தி சுவாமிகளுக்கு பொற்கிழியும் இறைவன் கொடுத்ததும் இத்தலத்தில்தான். வைராக்கிய பெருமாள் காஞ்சிபுரத்தை சேர்ந்த இவர் தனக்கு குழந்தை பிறந்தால் தன் சிரசை தருவதாக வேண்டினார். அது படியே நடக்க வைராக்கிய பெருமாள் தன் சிரசை சுவாமிக்கு காணிக்கையாக கொடுத்தார். மலைக்கு கீழே பாதமும், மேலே சிரசும் வந்தது. தேனும் தேங்காய்ப்பாலும் மட்டும்தான் இவருக்கு அபிசேகம். பூஜை முடிந்த பிறகு சுவாமியின் மாலை இவருக்குத்தான் போடப்படும். இத்தலத்தில் இவர் மிகவும் விசேசமானவர். காகம் பறவா மலை ஆயர் ஒருவர் அபிசேகத்துக்காக கொண்டு வந்து வைத்திருந்த பால் காகம் கவிழ்ந்ததால் அது எரிந்து போயிற்று. அப்படி கவிழ்ந்த எல்லைக்கு மேல் காகம் இப்போதும் இந்த மலையின் மீது ஒரு காகம் கூட பறப்பதில்லை என்பது சிறப்பான அதிசயம். தீர்த்தசிறப்பு காவேரித் தீர்த்தம் ( தினமும் கால்நடையாகவே 8 கி.மீ., நடந்து எடுத்துக் கொண்டு வந்து சுவாமிக்கு அபிசேகம் செய்யப்படுகிறது.
திருவிழாக்கள்
சித்திரைத் திருவிழா – 15 நாட்கள் கார்த்திகை சோமாவாரம் 1017 படிகளில் பக்தர்கள் புரண்டே மேலேறி மலைக்கோயிலுக்கு வருவது சிறப்பு பிரதோச காலங்கள், குருபெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி மற்றும் பௌர்ணமி கிரிவல நாட்கள் வாரத்தின் சனி ஞாயிற்றுக் கிழமைகள், மாதப்பிறப்பு நாட்கள், தமிழ் ஆங்கில வருடப்பிறப்பு, தீபாவளி, பொங்கல்.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்துசமயஅறநிலையத்துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
அய்யர் மலை
அருகிலுள்ள இரயில் நிலையம்
குளித்தலை
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி