அம்பலப்புழா ஸ்ரீ கிருஷ்ணர் திருக்கோயில், கேரளா
முகவரி
அம்பலப்புழா ஸ்ரீ கிருஷ்ணர் திருக்கோயில், அம்பலப்புழா, ஆலப்புழா மாவட்டம், கேரளா – 688651
இறைவன்
இறைவன்: ஸ்ரீ கிருஷ்ணர்
அறிமுகம்
அம்பலப்புழா ஸ்ரீ கிருஷ்ணர் கோயில் என்பது இந்தியாவின், கேரளத்தின், ஆலப்புழா மாவட்டத்தின், அம்பலப்புழாவில் உள்ள கோவிலாகும். அம்பலப்புழா ஸ்ரீ கிருஷ்ணர் கோயிலானது கி.பி 17 ஆம் நூற்றாண்டில் உள்ளூர் ஆட்சியாளரான செம்பகாசேரி பூராடம் திருனாள்-தேவநாராயணன் தம்புரனால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. அம்பலபுழாவில் கோயிலில் உள்ள கிருஷ்ணரின் சிலையானது விஷ்ணுவின் பார்த்தசார்தி வடிவத்தை ஒத்துள்ளது. வலது கையில் சவுக்கையும், இடது கையில் சங்கையும் வைத்திருப்பதாக உள்ளது. 1789 இல் திப்பு சுல்தானின் படையெடுப்பின்போது, குருவாயூர் கோயிலின் கிருஷ்ணர் சிலையானது கொண்டுவரப்பட்டு 12 ஆண்டுகள் அம்பலப்புழா கோவிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. இக்கோயிலில் பிரசாதமாக அரிசி, பால் போன்றவற்றால் ஆன பால்பாயாசம், அளிக்கப்படுகிறது. மேலும் இக்கோயில் பிரசாதத்தை குருவாயூரப்பன் தினமும் வந்து ஏற்றுக்கொள்வதாக நம்பப்படுகிறது. கடன் பிரச்சினையால் ஏற்படும் துன்பங்களை நீக்கி, மனமகிழ்ச்சியுடன் வாழ உதவும் தலமாக இக்கோவில் திகழ்கிறது.
புராண முக்கியத்துவம்
வில்வமங்களம் சுவாமிகளும், அந்தப் பகுதியை ஆண்ட அரசன் செம்பகச்சேரியும் ஒரு படகில் ஆற்றைக் கடந்து கொண்டிருந்தனர். ஆற்றின் கரையை நெருங்கிய போது, அவர்களுக்கு இனிய புல்லாங்குழல் ஓசை கேட்டது. இனிய இசையில் மயங்கிய இருவரும் ‘ஓசை எங்கிருந்து வருகிறது?’ என்று சுற்றிலும் பார்த்தனர். வில்வமங்களம் சுவாமிகளுக்கு மட்டும் ஆற்றின் கரையிலிருந்த ஆலமரம் ஒன்றில், அமர்ந்த நிலையில் கிருஷ்ணன் புல்லாங்குழலை வாசித்துக் கொண்டிருந்த காட்சி தெரிந்தது. உடனே அவர் அங்கிருந்த கிருஷ்ணனைப் பார்த்து வணங்கினார். அரசனுக்கு எதுவும் தெரியாததால், ‘சுவாமி! கரையிலிருக்கும் ஆலமரத்தைப் பார்த்து வணங்குகிறீர்களே! அந்த ஆலமரத்தில் என்ன இருக்கிறது?’ என்று கேட்டான். ‘மரத்தில் கிருஷ்ணன் அமர்ந்து புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருப்பது, உமக்குத் தெரியவில்லையா?’ என்று அரசனைப் பார்த்து கேட்டார், வில்வமங்களம் சுவாமிகள். உடனே அரசன், ‘இறைவா! சுவாமிகளுக்குக் காண்பித்த தங்களின் திருவுருவை எனக்கும் காட்டியருளுங்கள்’ என்று வேண்டினான். அவனின் வேண்டுதலைக் கேட்ட இறைவன் அரசனுக்கும் தன் திருக்காட்சியை காட்டியருளினார். புல்லாங்குழல் இசைத்தபடி அம்மரத்தில் அமர்ந்திருந்த இறைவனின் அழகிய தோற்றத்தைக் கண்டு மனம் மகிழ்ந்த அரசன், அந்த இடத்தில் இறைவன் கோவில் கொண்டருள வேண்டும் என்று வேண்டினான். இறைவனும் அவனுடைய வேண்டுதலுக்காக அங்கே கோவில் கொள்வதாகச் சொன்னார். அரசன் செம்பகச்சேரி, வில்வமங்களம் சுவாமி களின் ஆலோசனையுடன் ஆலமரம் இருந்த ஆற்றங்கரைப் பகுதியில் கிருஷ்ணருக்கு ஒரு கோவிலைக் கட்டினான். ஆற்றங்கரையில் கட்டப்பட்டதால் அந்த இடம் அம்பலப்புழை (அம்பலம் – கோவில், புழை -ஆறு) என்று பெயர் பெற்றது. அம்பலப்புழை என்பதே பின்னர் அம்பலப்புழா என்று மாற்றமடைந்து விட்டது என்கின்றனர் சிலர். இன்னும் சிலரோ, ‘அம்பலப்புழா என்று பெயர் வந்ததற்கு அது காரணமில்லை, அதற்கு வேறு ஒரு கதை இருக்கிறது’ என்கின்றனர். வாருங்கள் அந்தக் கதையையும் பார்த்து விடுவோம். கோவில் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்த செம்பகச்சேரி, அந்தக் கோவில் கருவறையில் நிறுவுவதற்காகக் கண்ணன் சிலை ஒன்றைச் செய்யச் சொன்னான். அரசன் சொன்னபடி கண்ணன் சிலை உருவாக்கப்பட்டது. சிலையை கருவறையில் பிரதிஷ்டை செய்வதற்கான நாளும் குறிக்கப்பட்டது. பிரதிஷ்டை செய்யும் நாளுக்கு முன்பாக, கண்ணனின் சிலையைப் பார்த்த அர்ச்சகர், அந்தச் சிலையில் குறைபாடு இருப்பதாகவும், அதை கோவில் கருவறையில் நிறுவ வேண்டாம் என்றும் சொல்லிவிட்டார். அதைக் கேட்ட அரசன், ‘சிலையில் என்ன குறைபாடு இருக்கிறது?’ என்றான். உடனே அர்ச்சகர், சிலையில் ஒரு கையில் தனது விரலால் லேசாகத் தொட்டார். அவ்வளவுதான், சிலையின் கை உடைந்து கீழே விழுந்து விட்டது. அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மன்னன், கோவிலில் தான் திட்டமிட்ட நாளில் சிலையை நிறுவ முடியாமல் போய்விட்டதே என்று வருந்தினான். அங்கிருந்தவர்களில் சிலர், ‘குறிச்சி என்ற பகுதியில் சிலைகளை செய்யும் பணி நடக்கிறது. அங்கிருந்து நல்ல தொரு கண்ணன் சிலையை வாங்கி வரலாம்’ என்று மன்னனிடம் ஆலோசனை தெரிவித்தனர். ஆனால் அரசன் செம்பகச்சேரிக்கும், குறிச்சிப் பகுதியை ஆண்ட அரசனுக்கும் பகை இருந்தது. அதனால் அங்கிருந்து சிலையை வாங்குவதில் மன்னன் தயக்கம் காட்டினான். இந்த நிலையில் மன்னனின் பணியாள் ஒருவர், குறிச்சி பகுதிக்குச் சென்று ஒரு சிலையைக் கடத்தி வந்துவிட்டார். ஆனால் அந்த சிலை கண்ணன் சிலையாக இல்லாமல், பார்த்தசாரதி சிலையாக இருந்தது. கண்ணனின் சித்தம் அதுதான் என்பதால், பார்த்தசாரதி சிலையையே கோவிலில் நிறுவ முடிவு செய்தனர். அதுவரை அந்த சிலையை மறைத்து வைத்தனர். குறிப்பிட்ட நாளில் சிலையை பிரதிஷ்டை செய்ய கோவிலுக்குக் கொண்டு சென்றனர். கருவறை பீடத்தில் சிலையை வைத்தபோது, அது சமநிலை இல்லாமல் ஒரு பக்கமாக சாய்ந்தது. அப்போது அங்கு வந்த வில்வமங்களம் சுவாமிகள், ஒரு வெற்றிலையை எடுத்து சிலையின் கீழ் பகுதியில் வைத்தார். சிலை அசையாமல் அப்படியே சம நிலையில் நின்றது. இதனால் இந்தக் கோவிலுக்கு ‘தாம்பூலப்புழா’ என்ற பெயர் வந்தது. இதுவே நாளடைவில் மருவி, ‘அம்பலப்புழா’ என்று மாறிப்போனதாக சொல்கிறார்கள்.
நம்பிக்கைகள்
இங்கு படைக்கப்படும் பால் பாயாசத்திற்காகக் குருவாயூரப்பன் தினமும் இப்பூஜையில் கலந்து கொள்ள வருவதாக நம்பிக்கை நிலவுகிறது. தீராத கடன் தொல்லையால் அவதிப்பட்டு வருபவர்கள், இக்கோவிலில் சிறப்பு வழிபாடு செய்து வேண்டிக் கொண்டால், அவர் களது அனைத்துக் கடன்களும் தீர்ந்து, அதனால் ஏற்பட்ட துன்பங்கள் எல்லாம் மறைந்துவிடும் என்பது பக்தர் களின் நம்பிக்கையாக உள்ளது.
சிறப்பு அம்சங்கள்
இந்தக் கோவிலில் மூலவராக இருக்கும் பார்த்தசாரதி ஒரு கையில் சாட்டையுடனும், மறு கையில் சங்குடனும் ருத்ர நிலையில் காட்சி தருகிறார். விஷ்ணு கோவில்களில் உள்ள அனைத்துத் தோற்றங்களும் சங்கு ஏந்திய கோலத்தில் காணப்பட்டாலும், சாட்டையுடன் இருக்கும் விஷ்ணுவை இக்கோவிலில் மட்டுமே பார்க்க முடியும்.
திருவிழாக்கள்
இக்கோவிலில் கேரள நாட்காட்டியின் துலாம் (ஐப்பசி) மாதம் தவிர்த்து, அனைத்து மாதங்களிலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. கேரள நாட்காட்டியின் மீனம் (பங்குனி) மாதத்தில் 10 நாட்கள் வரை நடைபெறும் ‘ஆறாட்டு விழா’ முதன்மை விழாவாக இருக் கிறது. இவ்விழாவின் போது, வேலக்களி எனும் ஆட்டம் நடத்தப்பெறுகிறது. கேரள நாட்காட்டியின் மிதுனம் (ஆனி) மாதம் மூலம் நட்சத்திர நாளில் அம்பலப்புழா மூலக் கலசா எனப்படும் மூலநாள் விழா சிறப்பாக நடத்தப்படுகிறது. இதுதவிர கிருஷ்ணஜெயந்தி, ராம நவமி போன்ற நிகழ்வுகளும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தினமும் மதியம் 12 மணி முதல் 12.30 மணி வரை இறைவனுக்குப் பால் பாயாசம் படைத்து உச்சி கால பூஜை செய்யப்படுகிறது.
காலம்
15 ஆம் நூற்றாண்டு
நிர்வகிக்கப்படுகிறது
மலபார் தேவஸ்வம் வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.
அருகிலுள்ள பேருந்து நிலையம்
அம்பலப்புழா
அருகிலுள்ள இரயில் நிலையம்
அம்பலப்புழா
அருகிலுள்ள விமான நிலையம்
கொச்சி