Saturday Nov 23, 2024

அகத்தியான்பள்ளி அகத்தீஸ்வரர் திருக்கோவில், நாகப்பட்டினம்

முகவரி

அருள்மிகு அகஸ்தியர் திருக்கோயில் சேது ரஸ்தாசாலை, அகஸ்தியம்பள்ளி அஞ்சல் – 614 810 (வழி) வேதாரண்யம் வேதாரண்யம் வட்டம். நாகப்பட்டினம் மாவட்டம். போன்: +91-4369 – 250 012

இறைவன்

இறைவன்: அகத்தீஸ்வரர் இறைவி: மங்கைநாயகி

அறிமுகம்

அகத்தீஸ்வரர் கோயில் திருஞானசம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் உள்ள 126ஆவது சிவத்தலமாகும். இத்தலத்தின் மூலவர் அகத்தீஸ்வரர், தாயார் மங்கை நாயகி. தலவிருட்சமாக வன்னி மரமும், அகத்தி மரமும் உள்ளன. இத்தலத்தில் அகத்திய தீர்த்தம் மற்றும் அக்னி தீர்த்தம் ஆகியவை உள்ளன. இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலம் அகத்தியர் கோவில் என்று வழங்கப்படுகிறது. இயமன் வழிபட்ட தலமிது. அகத்தியருக்குக் கோயில் இங்குள்ளது.

புராண முக்கியத்துவம்

கைலாயத்தில் நடக்க இருக்கும் பார்வதி சிவபெருமான் திருமணம் காண தேவர்கள், முனிவர்கள் மற்றும் எல்லோரும் கூடினர். அப்போது வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது. பூமியை சமன் செய்ய இறைவன் அகத்திய முனிவரை தென்திசை செல்லும்படி பணித்தார். அகத்தியர் தனக்கு சிவன் பார்வதி திருமணத்தைக் காணும் பேறு கிடைக்கவில்லையே என்று வருந்தினார். சிவபெருமான் அகத்தியருக்கு திருமணக் கோலம் காட்டி அருளுவேன் என்று வாக்களித்தார். அகத்தியரும் புறப்பட்டு தென்திசை வந்து அகத்தியான்பள்ளி தலத்தில் ஒரு ஆசிரமம் அமைத்துக் கொண்டு தங்கினார். சிவலிங்கம் ஒன்றை ஸ்தாபித்து அதற்கு பூஜைகள் செய்து வரலானார். இறைவன் அகத்தியருக்கு கொடுத்த வாக்கின் படி அகத்தியான்பள்ளியில் பார்வதியுடன் நடந்த தனது திருமணக் கோலத்தை காட்டி அருள் புரிந்தார். அகத்தியருக்குக் காட்சி கொடுத்ததால் இத்தலத்து இறைவன் அகத்தீஸ்வரர் எனப்படுகிறார்.

நம்பிக்கைகள்

திருமணத்தடை நீங்க, கல்வியில் சிறந்து விளங்க, செல்வ வளம் பெருக இத்தலத்து இறைவனிடம் பிரார்த்தனை செய்துகொள்கிறார்கள்.

சிறப்பு அம்சங்கள்

இங்கு மூலவர் அகத்தீஸ்வரர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 190 வது தேவாரத்தலம் ஆகும். எமன் வழிபட்ட சிறப்புடையது. இக்கோயிலில் நவக்கிரகங்கள் ஒரே திசை பார்த்து உள்ளன. ராஜகோபுரம் மூன்று நிலைகளை உடையது. சுவாமி கிழக்கு நோக்கியும் அம்பாள் மேற்கு நோக்கியும் காட்சி தருகின்றனர். அம்பாள் கோயிலுக்குப் பக்கத்தில் சுவாமியைப் பார்த்தவாறு அகத்தியர் கோயில் உள்ளது. இராசராசன் மாறவர்மன் குலசேகரன் ஆகியோர் காலத்துக் கல்வெட்டுக்கள் இக்கோயிலுக்கு உள்ளன. சுவாமி சன்னதியில் உள்ள குளம் அக்னி புஷ்கரணி எனப்படுகிறது. மக்கள் இக்கோயிலை அகஸ்தியர் கோயில் என்றே கூறுகின்றனர். நெடுஞ்சாலைத்துறையின் பெயர்ப்பலகையும் அகஸ்தியர் கோயில் என்றே எழுதப்பட்டுள்ளது.

திருவிழாக்கள்

நவராத்திரி, சிவராத்திரி, கந்தசஷ்டி, சித்திரை திருவிழா.

காலம்

1000-2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

வேதாரண்யம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

வேதாரண்யம்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top