அகத்தியர் ஸ்தாபித்த ஸ்ரீசக்கரம்!
அரிய வகை மூலிகைகளும் மருத்துவ குணம்கொண்ட சுனைகளும் நிரம்பிய திருத்தலம், ஊத்துமலை. கடல் மட்டத்திலிருந்து சுமார் 500 அடி உயரத்தில் இந்த மலையின்மீது கோயில் கொண்டிருக்கிறார் பாலசுப்ரமணிய சுவாமி.
நின்றகோலத்தில் அழகுத் திருக்கோலம் காட்டும் இந்த முருகப்பெருமானை அகத்தியர், போகர், புலிப்பாணி, கபிலர் ஆகிய முனிவர்கள் வழிபட்டு, அருள்பெற்றதாகச் சொல்கிறார்கள். இந்தக் கோயிலுக்கு வந்து இவரை ஒருமுறை தரிசிக்க, நினைத்த காரியங்கள் அனைத்தும் நினைத்தபடி நிறைவேறும் என்பது பக்தர்களது நம்பிக்கை. முருகப் பெருமானின் இடப்புறத்தில் விநாயகரும், வலப்புறத்தில் நந்தியுடன்கூடிய சிவலிங்க மூர்த்தியும் சந்நிதி கொண்டிருக்கிறார்கள். இந்தத் திருக்கோயிலுக்கு பல சிறப்புகள் உண்டு.
இங்கே, எட்டுத் திருக்கரங்களுடன் வடக்கு நோக்கியபடி அருள்பாலிக்கிறார் ஸ்ரீசக்ர மஹா கால பைரவர். தேய்பிறை அஷ்டமி நாள்களில் இங்கே நடைபெறும் சிறப்பு பூஜையில் கலந்துகொண்டு இந்தப் பைரவரை வழிபட்டால், சனி தோஷம் முதலான கிரக தோஷங்கள் நீங்கும், எதிரிகள் தொல்லை அகலும், மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்பது நம்பிக்கை.
அதேபோல், இக்கோயிலின் மற்றொரு சிறப்பம்சம் ஸ்ரீசக்ர தரிசனம். ஆம்… கோயிலுக்கு அருகிலேயே ஸ்ரீசக்ர சந்நிதி அமைந்திருக்கிறது. பொதிகை மலையில் இருந்து மனைவி லோபாமுத்திரையுடன் புறப்பட்ட அகத்தியர், ஊத்துமலையில் தங்கியிருந்த போது, ஒரு பாறையில் செங்குத்தாக ஸ்ரீசக்ரத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டாராம். அதற்குச் சான்றாக இங்குள்ள ஸ்ரீசக்ரத்தின் அருகில் அகத்தியர், லோபாமுத்திரை ஆகியோரின் சிற்பங்களைக் காணமுடிகிறது. இந்த ஸ்ரீசக்ரத்தின்முன்பு நின்று வணங்கினால், அனைத்துவிதமான நோய்களும் நீங்கிவிடுவதாகப் பக்தர்கள் நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்கள். இங்கே பௌர்ணமி நாளில் பதினெட்டு சித்தர்களுக்கும் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. இந்த பூஜையில் கலந்துகொள்வதன்மூலம் சித்தர்களின் அருள் கிடைப்பதாக ஐதீகம்.
ஸ்ரீசக்ரம் இருக்கும் பகுதிக்கு தெற்கில், கபிலர் தியான குகை அமைந்துள்ளது. இந்தக் குகையில் முனிவர்கள் தியானம் செய்ததாகச் சொல்லப்படுகிறது. இந்தக் குகையில் அமர்ந்து சிறிது நேரம் தியானம் செய்தால் மனம் அமைதி பெறும் என்பது நம்பிக்கை.
சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நாமக்கல், திருச்சி செல்லும் பேருந்தில் ஏறி, சீலநாயக்கன்பட்டி பைபாஸில் இறங்கினால், நடந்து செல்லும் தொலைவில் ஊத்துமலை கோயில் உள்ளது. சேலம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்தும் நகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.