Tuesday Apr 22, 2025

வேளிமலை குமாரசுவாமி திருக்கோயில், நாகர்கோயில்

முகவரி :

அருள்மிகு குமார சுவாமி திருக்கோயில்,

வேளிமலை, குமாரகோவில்,  

நாகர்கோயில்,

கன்னியாகுமரி மாவட்டம் – 629 301.

போன்:  +91-4651 – 250706, 233270

இறைவன்:

குமார சுவாமி

அறிமுகம்:

வேளிமலை குமாரசாமி கோவில் கன்னியாகுமரி மாவட்டத்தில் குமாரகோவில் என்ற சிற்றூரில் அமைந்துள்ளது. இது 200 அடி உயரமுள்ள வேளிமலை என்ற குன்றில் குடவரைக் கோவிலாகக் கட்டப்பட்டுள்ளது. முருகரும் வள்ளியும் இங்கு முதன்மைத் தெய்வங்களாகவும், அவர்கள் இங்கு திருமணம் கொண்டதாக நம்பப்படுவதாகவும் கூறப்படுகிறது. 

கன்யாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் உள்ளது வேளிமலை குமார கோயில் தென்தமிழ்நாட்டின் முக்கிய ஊர்களிலிருந்து நாகர்கோவிலுக்கு நிறையபஸ் வசதி உள்ளது. அங்கிருந்து தக்கலை மார்க்கமாக கோயிலுக்கு செல்லலாம்

புராண முக்கியத்துவம் :

கேரள எல்லையில் உள்ள மிக முக்கிய முருகன் கோயில்.கஞ்சி தர்மம் வாங்கி சாப்பிட்டால் சகல நோய்களும் குணமாகும்.குறவர் படுகளம் – வள்ளி தோழியரோடு தினைப்புனம் விளையாடிய இடமாக கருதப்படுகிறது. நம்பி ராஜன் வாழ்ந்த இடமாக இது இருக்கிறது. முருகப்பெருமான் இங்குதான் வள்ளியைத் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மிகவும் பழமையான இக்கோயிலில் தென் கிழக்கு பக்கமாக திரும்பி சுவாமியோடு வள்ளி இருக்கிறார். கேரள எல்லையில் அமைந்துள்ள இக்கோயில் அப்பகுதியில் மிகப்பிரபலமாகக் கருதப்படுகிறது.

குமார கோயிலின் முக்கிய விழாக்களில் ஒன்று, பங்குனி மாதம் அனுஷ நட்சத்திர நாளில் நடைபெறும் வள்ளி திருமணம். அன்று காலையில் பல்லக்கில் எழுந்தருளும் முருகப் பெருமான், வள்ளி குகை அருகே உள்ள கல்யாண மண்டபத்துக்குச் செல்கிறார். வழியெங்கும் மக்கள் வரவேற்பு கொடுக்கிறார்கள். மண்டபத்தில் தீபாராதனை மற்றும் அன்னதான நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. பிற்பகலில் முருகன்- வள்ளி தம்பதியை பல்லக்கில் அழைத்து வருகிறார்கள். அப்போது முருகப் பெருமானுடன் குறவர்கள் போரிடும் ‘குறவர் படுகளம்’ எனும் நிகழ்ச்சி மலைப்பாதை நெடுகிலும் நடைபெறுகிறது. இறுதியில் கோயிலின் மேற்கு வாசலில் குறவர்கள் முருகப் பெருமானிடம் தோல்வியடைந்து சரணடையும் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் அங்கு மலையில் வாழும் குறவர் இனத்தவரே கலந்து கொள்கின்றனர்.

இரவு 8 மணியளவில், அபிஷேக- ஆராதனைக்குப் பின் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கல்யாண மண்டபத்தில் முறைப்படி வள்ளிக்கும் முருகனுக்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அதன் பின்னர் தேன், தினைமாவு மற்றும் குங்குமம் ஆகியவை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகின்றன.

சிறப்பு அம்சங்கள்:

  • வள்ளி திருமணம் நடந்த தலம் என்று கூறப்படுகிறது.
  • மூலவர் முருகப்பெருமான் 10அடி உயரத்தில் இருப்பது சிறப்பாகும்.
  • மிகவும் பழமையான இக்கோயிலில் மூலவர் தென்கிழக்கு பக்கமாக திரும்பி சுவாமியோடு வள்ளி இருக்கிறார். சுவாமியின் காதுகள் நீண்டு காணப்படுகிறது.
  • ஆறுமுகக் கடவுள் முருகப் பெருமானுக்கும் வள்ளிக்கும் இடையே காதல் வேள்வி நடந்த மலை என்பதால், இதற்கு வேள்வி மலை என்று பெயர். இதுவே பின்னர் வேளி மலையாக மருவியது. கேரளத்தில் திருமணத்தை ‘வேளி’ என்பர். முருகப் பெருமான் இங்கு வள்ளியைக் காதலித்து, கடிமணம் புரிந்ததால், ‘வேளி மலை’ என்று பெயர் பெற்றதாகவும் கூறுவர்.
  • இந்த மலையின் அடிவாரத்தில் கோயிலுக்கு நேர் கீழாக அழகான திருக்குளம் உள்ளது. அதன் கரையில் ஒரு விநாயகர் சந்நிதி. இவரை வணங்கி விட்டு, 38 படிகள் ஏறிச் சென்றால், குன்றின் உச்சியில் கிழக்கு நோக்கிக் காட்சி தருகிறது திருக்கோயில். கோயிலுக்குள் நுழைந்ததும் கொடிமரம். அதைத் தாண்டிச் சென்றால், இடப் புறம் விநாயகர்.
  • பிரதான மூர்த்தியான முருகப் பெருமான் சுமார் 8 அடி 8 அங்குல உயரத்தில், அழகிய இரு திருக்கரங்களுடன் கருவறையில் கம்பீரமாகக் காட்சி தருகிறார். இடக் கரம் இயல்பான நிலையில் பாதத்தை நோக்கியிருக்க, வலக் கரம் வரத முத்திரை யுடன் திகழ்கிறது. இவர் பெரும்பாலான நாட்களில் சந்தனக் காப்புடன் தரிசனம் தருகிறார்.
  • முருகப் பெருமானுக்கு இடப் புறம் சுமார் 6 அடி 2 அங்குல உயரத்தில் வள்ளிதேவி. இங்கு, முருகப் பெருமானின் அருகில் வள்ளிதேவியை மட்டுமே தரிசிக்க முடியும் (தெய்வானையின் விக்கிரகம் இல்லை). இதுவே இந்தக் கோயிலின் சிறப்பு.
  • கருவறையை அடுத்து சிவபெருமான் சந்நிதி. அருகில் நந்தி. இதையட்டி தெற்கு நோக்கியவாறு ஆறுமுகநயினார் மற்றும் நடராஜர். அருகிலேயே இந்தக் கோயிலின் தல விருட்சமான வேங்கை மரத்துக்கான தனிச் சந்நிதி.
  • வள்ளியை முருகப் பெருமான் காதலித்த காலகட்டம்… அப்போது வள்ளியின் உறவினர்கள் வள்ளியைத் தேடி அங்கே வர, வள்ளியுடன் இருந்த முருகப் பெருமான் வேங்கை மரமாக மாறினார் என்கிறது புராணம். எனவே இங்கு வேங்கை மரத்துக்கு சிறப்பு உண்டு. இந்த வேங்கை மரம், சுமார் 3 அடி உயரத்தில் கிளைகள் வெட்டுப்பட்ட நிலையில் உள்ளது. இதன் எஞ்சிய பகுதிக்கு உடை அணிவித்து, தினசரி பூஜைகள் நடைபெறுகின்றன.
  • கோயிலின் மேற்கு வாயிலில் தட்சனுக்கும் தனிச் சந்நிதி உண்டு. கோயிலுக்குள் நுழையுமுன் ஆட்டுத்தலையுடன் கூடிய இந்த தட்சனை வணங்குகிறார்கள். ‘தன்னை அவமதித்த தட்சனது யாகமும் அகங்காரமும் அழியும்படி சிவபெருமான் சாபமிட்டார். அதன்படி சிவ அம்சத் தினரான வீரபத்திரரால் அழிவை சந்தித்த தட்சன் இறுதியில் ஆட்டுத்தலையுடன் விமோசனம் பெற்றான்!’ என்கிறது புராணம்.
  • திருக்குளத்தின் அருகே கஞ்சி தர்மத்துக்கான ‘கஞ்சிப்புரை’ அமைந்துள்ளது. இங்கு வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் ‘கஞ்சி தர்மம்’ விசேஷமானது. இது நோய் தீர்க்கும் அருமருந்தாக பக்தர்களால் கருதப்படுகிறது. கஞ்சி தர்மம் முடிந்ததும் அந்த இடத்தில் தொழுநோயாளிகள் அங்கப்பிரதட்சணம் செய்கிறார்கள். இதனால் தங்களது நோய் விலகும் என்று நம்புகிறார்கள்.
  • கோயிலில் இருந்து சுமார் அரை கி.மீ. தொலைவில் உள்ள ஒரு குகையை ‘வள்ளிக் குகை’ என்பர். முருகப் பெருமான்- வள்ளி திருமணம் இந்த பகுதியில் நடந்ததாகக் கருதப்படுகிறது. தற்போது, குகை அருகே மண்டபம் ஒன்றும் சிறிய அளவில் விநாயகர் கோயில் ஒன்றும் உள்ளன. இந்த இடத்தையட்டி முருகன்- வள்ளி திருமண சம்பவத்துடன் தொடர்பு கொண்ட தினைப்புனம், வள்ளிச் சோலை, வட்டச் சோலை, கிழவன் சோலை ஆகிய இடங்கள் உள்ளன. வள்ளிதேவி நீராடிய சுனை அருகே பாறையில்- விநாயகர், வேலவர், வள்ளிதேவி ஆகியோரது புடைப்புச் சிற்பங்களைக் காணலாம்.

திருவிழாக்கள்:

வைகாசி விசாகத் திருவிழா – 10 நாள் ஆவணி கடைசி வெள்ளி – புஷ்பாபிஷேகம் – 1 நாள் பங்குனி திருக்கல்யாணம் – 7 நாள்.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

 வேளிமலை

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருவனந்தபுரம்

அருகிலுள்ள விமான நிலையம்

திருவனந்தபுரம்

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top