வேந்தன்பட்டி ஸ்ரீ நெய் நந்தீஸ்வரர் திருக்கோயில், புதுக்கோட்டை
முகவரி
வேந்தன்பட்டி ஸ்ரீ நெய் நந்தீஸ்வரர் திருக்கோயில், வேந்தன்பட்டி, புதுக்கோட்டை மாவட்டம், தமிழ்நாடு தொலைபேசி: +91 95858 50663.
இறைவன்
இறைவன்: சொக்கலிங்கேஸ்வரர் இறைவி: மீனாட்சி அம்மன்
அறிமுகம்
வேந்தன்பட்டி நெய் நந்தீஸ்வரர் கோயில் புதுக்கோட்டை மாவட்டத்தின் பொன்னமராவதி வட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும். தனிப்பெரும் சிறப்புகளை கொண்ட ஐந்து நிலை நாட்டின் ஒர் அங்கமான வேந்தன்பட்டி கிராம நகரத்தார்கள் போற்றும் இக்கோவில் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வட்டத்தில் அமைந்துள்ளது. இக்கோயிலின் மூலவராக சொக்கலிங்கேஸ்வரர் உள்ளார். இறைவி மீனாட்சி அம்மன் அம்மாள் ஆவார். கோயிலின் மரம் வன்னி ஆகும். கோயிலின் எதிரே நந்தி தீர்த்தம் உள்ளது. மூலவரின் இடப்புறம் அம்மன் சன்னதி உள்ளது. திருச்சுற்றில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், மகாலட்சுமி, சூரியன், பைரவர், நவக்கிரகங்கள் ஆகியோர் உள்ளனர். வேந்தன்பட்டியில் கச்சேரிக்கூடம் என்னுமிடத்தில் வேப்ப மரம் ஒன்று இருந்தது. அவ்விடத்தில் நெய் நந்தீசுவரர் சுயம்புவாகத் தோன்றியதாகக் கூறுவர். இக்கோயிலில் உள்ள நந்தி நெய்யினால் அபிஷேகம் செய்யும்போது எந்த நெய்யும் கீழே விழாமல் ஈர்த்து விடும் சக்தி உள்ளது. அவ்விடத்தருகே ஈக்களோ, எறும்புகளோ வருவதில்லை. நந்தீசுவரரின் மீது பூசப்பட்ட நெய்யின்மீது ஈக்களோ, எறும்புகளோ அமர்வதுமில்லை. அவ்வாறே இக்கோயிலில் உள்ள நெய்க்கிணற்றில் ஈக்கள் மொய்ப்பதில்லை. இங்குள்ள நந்தியின் கொம்புகளுக்கு நடுவில் இயற்கையாகவே ஒரு சக்கரம் அமைந்துள்ளது. தஞ்சாவூர் நந்தியின் தம்பி என்ற நிலையில் வைத்து, இந்த நந்தியைத் தம்பி நந்தி என்றழைக்கின்றனர். இதுவரை இக்கோயிலில் எட்டு முறை குடமுழுக்கு நடைபெற்றதாகக் கூறுகின்றனர்.
புராண முக்கியத்துவம்
மதுரையில் உறையும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் இத்தலத்தில் எழுந்தருளியுள்ளனர். இத்தலம் பாண்டியர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட பிரார்த்தனை தலமாக இருக்கலாம். இப்பகுதிக்கு சென்ற பாண்டியர்கள் தங்கள் இஷ்ட தெய்வமான மீனாட்சி சொக்கநாதரை பிரதோஷ வேளையில் வழிபட உருவாக்கியிருக்கலாம். இத்தல வரலாறு சரிவர கிடைக்கவில்லை. ஆயினும், இது பழமையான கோயில். சோழர்களும் இத்தலத்தின் திருப்பணியில் பங்கு கொண்டிருக்க வேண்டும். கொடும்பாளூரில் இருந்து தஞ்சாவூர் கோயிலுக்கு இரண்டு நந்திகள் கொண்டு வரப்பட்டன. இதில் பெரிய நந்தி, தஞ்சையில் வைக்கப்பட்டது. சிறிய நந்தி வேந்தன்பட்டியில் உள்ளது. இரண்டு நந்திகளின் அமைப்பும் ஏறத்தாழ சமநிலையில் உள்ளன. எனவே, இங்கு நந்தி வழிபாடே முக்கியமானதாயிற்று. கொடும்பாளூர் என்னும் தலத்தில் மூன்று சிவலிங்கங்களுடன் மூவர் கோயில் இருந்தது. அப்பகுதிக்கு போர் தொடுத்து வந்த அந்நியர்கள், அக்கோயிலை சேதப்படுத்தினர். இதனால், கோயில் அழிந்து, சிவலிங்கங்கள் மட்டும் இருந்தது. சிவபக்தர்கள் சிலர் அங்கிருந்த லிங்கங்களையும், நந்தியையும் எடுத்து வந்து வேந்தன்பட்டி, தெக்கூர் மற்றும் புதுப்பட்டி ஆகிய ஊர்களில் பிரதிஷ்டை செய்து கோயில் எழுப்பினார். இவ்வூரில் பிரதிஷ்டை செய்த சிவனுக்கு “சொக்கலிங்கேஸ்வரர்’ என்ற பெயர் சூட்டப்பட்டது. வீட்டில் தரையில் நெய் சிறிதளவு கொட்டினாலும் என்னாகும்? சற்று நேரத்தில் ஈயும், எறும்பும் குவிந்து விடும். ஆனால், புதுக்கோட்டை மாவட்டம் வேந்தன்பட்டி மீனாட்சியம்மன் கோயிலில் உள்ள நந்திக்கு லிட்டர் கணக்கில் நெய் அபிஷேகம் செய்து கொட்டிக் கிடந்தாலும் அந்த இடத்திற்கு ஈக்களோ, எறும்புகளோ வராது. கோயிலில் உள்ள நெய்க்கிணற்றில் ஈக்கள் மொய்ப்பதில்லை. நந்தீஸ்வரின் கொம்புகளுக்கு நடுவே ஒரு சக்கரம் உள்ளது. இது இயற்கையாகவே அமைந்த அமைப்பு. இதை வேறு எங்கும் காண இயலாது. நந்தீஸ்வரரின் மேல் பூசிய நெய்யில் ஈக்களோ, எறும்புகளோ உட்காருவதில்லை. இந்த தன்மைக்கு இந்த சக்கரம்தான் ஆதார சக்தியாக அமைந்துள்ளது. வேந்தன்பட்டியில் கச்சேரிக்கூடம் என்னும் பகுதி உள்ளது. இந்தப்பகுதியில் 90 வருடங்களாக வேப்பமரம் ஒன்று உள்ளது. இந்தவேப்பமரத்தில் நெய் நந்தீஸ்வரர் சுயம்புவாக தோன்றி உள்ளார். இந்த சுயம்பு நந்திக்கு வேப்பமரத்து நந்தி என்று பெயரிட்டு வழிபட்டு வருகின்றனர்.
நம்பிக்கைகள்
இங்குள்ள மீனாட்சியை வழிபட்டு, திருமணமாகாத பெண்கள் திருமணத்தடை நீங்கப் பெறலாம். வறுமை நீங்கி செல்வம் உண்டாகவும், நினைத்த காரியம் கைகூடவும் இங்குள்ள நந்தீஸ்வரரிடம் பிரார்த்தனை செய்துகொள்கின்றனர்.
சிறப்பு அம்சங்கள்
நெய் நந்தீஸ்வரர்: இந்த நந்தியை “தம்பி நந்தி’ என பக்தர்கள் செல்லப்பெயரிட்டு அழைக்கின்றனர். இவர் தஞ்சாவூர் நந்தீஸ்வரரின் தம்பியாகக் கருதப்படுகிறார். தஞ்சாவூர் நந்தி மிகப்பெரிய அளவில் அமர்ந்து பக்தர்களை எப்படி கவர்ந்தாரோ, அதே போல வேந்தன்பட்டி நந்தியும் ஒரு அற்புதம் செய்து பக்தர்களை ஈர்த்துள்ளார். இவ்வூரில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்த பக்தர், நந்தீஸ்வரரை பிரதிஷ்டை செய்யாமல் விட்டுவிட்டார். அதை, புனிதம் கருதி இங்கிருந்த தீர்த்தக் குளத்திற்குள் வைத்து விட்டார். ஒருசமயம் அவருக்கு கடுமையான வயிற்று வலி உண்டானது. தனக்கு நோய் குணமான சிவனை மானசீகமாக வழிபட்டார். ஒருநாள் அவரை மாடுகள் விரட்டுவது போல கனவு கண்டார். நந்தீஸ்வரரை பிரதிஷ்டை செய்யாததால் தனக்கு வயிற்று வலி உண்டானதாக உணர்ந்த பக்தர், தனக்கு நோய் குணமானால், நந்தியை பிரதிஷ்டை செய்து, நெய் அபிஷேகம் செய்வதாகவும், கோயிலையும் பெரியளவில் திருப்பணி செய்வதாகவும் வேண்டிக் கொண்டார். சில நாட்களிலேயே நோய் குணமானது. எனவே, நந்தியை பிரதிஷ்டை செய்து கோயில் எழுப்பினார். நந்திக்கும் நெய்யபிஷேகம் செய்து வழிபட்டார். இதன்பிறகு, நந்திக்கு பிரதானமாக நெய் அபிஷேகம் செய்யும் வழக்கம் ஏற்பட்டது. அதிசய நெய்: இங்கு வரும் பக்தர்கள் தங்கள் பிரார்த்தனை நிறைவேற நெய் நந்தீஸ்வரருக்கு, நெய்யபிஷேகம் செய்து வேண்டிக் கொள்கின்றனர். ஒரு சமயம் அபிஷேக நெய்யில், கோயிலுக்கு தீபம் ஏற்றினர். அப்போது, நெய் ரத்தம் போல சிவப்பு நிறத்தில் மாறியதாம். எனவே, அபிஷேக நெய்யை பிற உபயோகத்திற்காக இக்கோயிலில் பயன்படுத்துவதில்லை. அதை கோயில் வளாகத்திலுள்ள ஒரு கிணற்றில் கொட்டி விடுகின்றனர். தற்போது, இந்த கிணறு நெய் நிறைந்த நிலையில் இருக்கிறது. பொதுவாக நெய்யின் வாசனைக்கு ஈ, எறும்பு போன்ற உயிர்கள் வரும். ஆனால், இங்கு இவை இன்று வரையிலும் வராதது கலியுகத்திலும் நாம் காணும் அதிசயம். ரிஷப ராசி கோயில்: நந்தீஸ்வரருக்கு ரிஷபம் என்றும் பெயருண்டு. எனவே, ரிஷப ராசிக்காரர்களுக்கான பரிகாரத் தலமாகவும் இக்கோயில் திகழ்கிறது. ஜாதகத்திலோ அல்லது அவ்வப்போது நிகழும் கிரகப் பெயர்ச்சிகளாலோ பாதிக்கப்படும் இந்த ராசிக்காரர்கள், நிவர்த்திக்காக இங்கு வணங்குகின்றனர். நந்திக்கு முக்கியத்துவம் உள்ள கோயில் என்பதால், நந்திக்கு அர்ச்சனை செய்யும் வழக்கமும் உள்ளது. கால்நடை வளர்ப்போர், அவை நோயின்றி வாழவும், பால், தயிர், மோர், வெண்ணெய், நெய் ஆகிய பொருட்களை விற்பனை செய்வோர் வியாபாரம் செழிக்கவும் இங்கு அதிகளவில் வேண்டிச் செல்கின்றனர். நோயால் அவதிப்படும் கால்நடைகள் குணமாக, நந்திக்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தைப் பெற்றுச் சென்று அதற்கு புகட்டுகின்றனர். இதனால், அவற்றிற்கு நோய் நிவர்த்தியாவதாக நம்பிக்கை. இங்கு வணங்கி பசு மாடுகளை வாங்குவோர் முதலில் சுரக்கும் பால் மற்றும் முதலில் உருக்கிய நெய்யால் அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர். ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் வெற்றி பெறுவதற்காகவும் இங்கு வேண்டிச் செல்கின்றனர். மாட்டுப்பொங்கல் விசேஷம்: நந்தீஸ்வரர் தலையில் இரு கொம்புகளுக்கு நடுவே சக்கரம் உள்ளது விசேஷமான அமைப்பு. இவருக்கு பிரதோஷ பூஜை விசேஷமாக நடக்கும். நல்லெண்ணெய் தவிர பிற அபிஷேகங்களும், இறுதியாக நெய்யால் அபிஷேகமும் நடக்கும். மாட்டுப்பொங்கலன்று நந்தி அருகில் பிரதோஷநாயகரை எழுந்தருளச் செய்து, இருவருக்கும் ஒரே சமயத்தில் விசேஷ அபிஷேகம் நடக்கும். பின், நந்திக்கு பழங்கள், பூக்கள், இனிப்பு பதார்த்தங்கள், பட்சணங்கள், கல்கண்டு உள்ளிட்டவைகளால் அலங்காரம் செய்வர். பின், பிரதோஷநாயகர் கோயிலுக்குள் புறப்பாடாவார். இவ்வூரில் உள்ள கச்சேரிக்கூடம் என்னுமிடத்தில் ஒரு வேப்ப மரம் உள்ளது. இதில், இயற்கையாகவே நந்தியின் உருவம் தோன்றியிருக்கிறது. அக்னி காவடி வைபவம்: வைகாசி விசாகத்தை ஒட்டி இங்கு 3 நாள் விழா நடக்கும். விசாகத்தன்று “அக்னி காவடி’ தூக்கும் வைபவம் விமரிசையாக நடக்கும். அப்போது, இங்கு வேண்டி பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் காவடி தூக்கிக் கொண்டு, பூக்குழியில் இறங்குவர். நந்தீஸ்வரருக்கு முடிக்காணிக்கை செய்து நேர்த்திக்கடன் செலுத்துவதுமுண்டு. கோயில் எதிரே நந்தி தீர்த்த தெப்பம் உள்ளது. சுவாமிக்கு இடப்புறம் மீனாட்சி சன்னதி உள்ளது. பிரகாரத்தில் சூரியன், விநாயகர், வள்ளத தெய்வானையுடன் சுப்பிரமணியர், மகாலட்சுமி, பைரவர், நவக்கிரகம், சூரியன் ஆகியோர் உள்ளனர்.
திருவிழாக்கள்
மகா சிவராத்திரி, ஆருத்ரா தரிசனம், ஐப்பசி அன்னாபிஷேகம். சித்ராபவுர்ணமி, வைகாசி விசாகம், நவராத்திரி, திருக்கார்த்திகை, கார்த்திகை சோமவாரம், தைப்பூசம், பங்குனி உத்திரம். இக்கோயிலில் சிவனுக்குரிய வழக்கமான விழாக்கள் நடக்கின்றன. பிரதோஷம் தான் முக்கியம். சனிப்பிரதோஷம் என்றால் இரட்டிப்பு கூட்டம் வருகிறது.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத் துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
வேந்தன்பட்டி
அருகிலுள்ள இரயில் நிலையம்
புதுக்கோட்டை
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி