Friday Dec 27, 2024

வெட்டுவாணம் எல்லையம்மன் கோயில், வேலூர்

முகவரி :

வெட்டுவாணம் எல்லையம்மன் கோயில்,

வெட்டுவாணம்,

வேலூர் மாவட்டம் – 635809.

இறைவி:

எல்லையம்மன்

அறிமுகம்:

 மணப்பேறு, மகப்பேறு மட்டுமின்றி, மருத்துவர்கள் கைவிட்டோரையும் காத்தருளும் அன்னை, என்ற பல்வேறு சிறப்புகள் கொண்ட ஆலயமாகத் திகழ்வது, வெட்டுவாணம் எல்லையம்மன் ஆலயம். ரேணுகாதேவியின் அம்சமாய்த் தோன்றிய அன்னை, படவேடு ஆலயத்தின் எல்லை தெய்வம், மணப்பேறு, மகப்பேறு மட்டுமின்றி, மருத்துவர்கள் கைவிட்டோரையும் காத்தருளும் அன்னை, ஆடி மாதத்தில் ஏழு வெள்ளிக்கிழமைகள் விழாக்கோலம் பூணும் கோவில் என பல்வேறு சிறப்புகள் கொண்ட ஆலயமாகத் திகழ்வது, வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வெட்டுவாணம் எல்லையம்மன் ஆலயம்.

அமைவிடம்: வேலூர் – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், வேலூரில் இருந்து மேற்கே 23 கி.மீ. தொலைவில், ஜவ்வாது மலைச்சாரலிலும், பாலாறு நதிக்கரை ஓரத்திலும் நடுநாயகமாக இவ்வாலயம் அமைந்துள்ளது. ரெயில் மூலம் வர விரும்புவோர் சென்னை சென்ட்ரல் ெரயில் வழித் தடத்தில் குடியாத்தம் ரயில் நிலையம் வந்து, அங்கிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள இத்தலத்தை வந்தடையலாம்.

புராண முக்கியத்துவம் :

 ஜமதக்னி என்ற முனிவரும், அவரின் தர்ம பத்தினியான ரேணுகாதேவியும் சிவன், பார்வதி அம்சங்களாக அவதரித்து வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு விசு, விசுவாஸ், விஸ்வரூபன், பரஞ்ஜோதி, பரசுராமன் என ஐந்து புதல்வர்கள். இவர்களில் பரசுராமனே கடைக்குட்டி. தன் கணவர் ஜமதக்னிக்காக அருகில் உள்ள நதிக்குச் சென்று அங்கே மண்ணைக் கொண்டு குடம் செய்து நீர் மொண்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தாள் ரேணுகாதேவி. ஒரு சமயம் ஆற்றிற்குச் சென்று மணலால் குடம் செய்து ஆற்றில் நீர் மொண்ட போது, தண்ணீரில் கந்தர்வன் ஒருவனின் முகம் பிரபதிபலித்தது. பார்த்த மாத்திரத்தில் அந்த கந்தர்வனின் உருவம் அவளது மனதை ஆட்கொண்டது.

ரேணுகாவும் அந்த வசீகரத்தில் மூழ்கிடவே, அவளின் சக்தி வீணாக, குடம் ஆற்றோடு கரைந்து போனது. இதனால் அச்சமுற்று சுயநினைவிற்கு வந்த ரேணுகை, தன் தவறை உணர்ந்தாள். அவளால் மீண்டும் மணலால் குடம் செய்ய சக்தி கூடவில்லை. வெறுங்கையோடு ஆசிரமம் திரும்பினாள். ஜமதக்னியிடம் விலங்கு விரட்டியதால் குடம் தவறி விழுந்து விட்டதாகப் பொய் கூறினாள். அவளின் பொய்யைத் தன் ஞானத்தால் உணர்ந்த முனிவர், தன் பிள்ளைகளை அழைத்தார். ரேணுகை செய்த குற்றத்திற்கு தண்டனையாக அவளின் தலையை வெட்டுமாறு பணித்தார். முதல் நான்கு மகன்களும் மறுத்துவிட்டனர். அதனால் கோபம் கொண்ட முனிவர் அவர்களைச் செடி கொடிகளாக மாறும்படிச் சபித்தார். கடைசி மகனான பரசுராமனிடமும் அதே உத்தரவை இட்டார். மறுப்பின்றி பரசுராமன் ஒப்புக் கொண்டு, தன் தந்தையிடம் இரண்டு வரங்களைக் கேட்டார். அவரும் தருவதாக ஒப்புக் கொண்டார்.

இதையடுத்து பரசுராமன் தன் தாய் என்றும் பாராமல், கையில் கோடரியோடு ரேணுகையைத் துரத்தினார். உயிர் பயத்தால் ஓடிய ரேணுகை, அருந்ததியப் பெண்ணைக் கட்டியணைத்துத் தன்னைக் காக்கும்படி வேண்டி நின்றாள். அதற்குள் அங்கு வந்த பரசுராமன் தன் கையில் இருந்த கோடரியால் வீச, அது இருவரின் தலையையும் துண்டித்தது. தன் தாயின் தலையைக் கையில் ஏந்தியபடி ஜமதக்னி முன் நின்றார் பரசுராமன். பின்னர் தான் கேட்க விரும்பிய வரங்களைக் கேட்டார். அதன்படி தன் தாய் ரேணுகைக்கு மீண்டும் உயிர்ப்பிக்க வழிபிறந்தது.

ஆனால் அவசர கோலத்தில் இரு பெண்களுக்கும் தலை மாறி பொருந்தியவுடன் இருவருமே உயிர்பெற்றனர். இருபெண்களின் தலை வெட்டுப்பட்ட ஊரே ‘வெட்டுவாணம்’ என வழங்கப்பட்டது. மேலைவித்தூர் என்ற பழைய பெயர் மறைந்து போனது என தல வரலாறு குறிப்பிடுகிறது. இந்த ரேணுகையே வெட்டுவாணம் தலத்தின் மூலநாயகி ஆவாள். எல்லையம்மன் அழகிய திருக்காட்சி

மற்றொரு வரலாறு : வெட்டுவாணம் வழியே புண்ணிய தீர்த்த மாக ஓடும், நதியின் கால்வாய் சீரமைப்பு பணி நடைபெற்று வந்தது. விவசாயி ஒருவர் மண் வெட்டியால் அகலப்படுத்தியபோது ஒரு கல் வெட்டுப்பட்டது. அதிலிருந்து ரத்தம் பெருக்கெடுத்தது. இதனைக் கண்ட அந்த விவசாயி மயங்கி விழுந்தான். அப்போது அசரீரி ஒலித்தது. ‘இத்தலத்து தெய்வமான எல்லையம்மன் நான். இவ்வளவு காலம் பூமியில் மறைந்திருந்த நான் வெளிப்படும் நேரம் வந்துள்ளது. என்னை பிரதானமாக வைத்து ஆலயம் எழுப்புங்கள்’ என்றது. இவ்வூரில் அம்மன் வெட்டுண்டதால் இத்தலம் வெட்டுவாணம் ஆனது. ஊர்மக்கள் ஒன்று கூடி எல்லையம்மனுக்கு அழகிய ஆலயம் ஒன்றை எழுப்பினர். கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற அம்மன் கோவிலாகத் திகழும் சோட்டாணிக்கரை பகவதியம்மன் ஆலய புராண வரலாற்றின்படி பரசுராமன் உருவாக்கிய 108 துர்க்கை அம்மன் தலங்களில் வெட்டுவாணமும் ஒன்று எனக் கூறப்படுகிறது.

நம்பிக்கைகள்:

இத்தல இறைவி மணப்பேறும், மகப்பேறும் அருளும் கண்கண்ட தெய்வம் என்பது கண்கூடான ஒன்று. அருமருந்துகளாக அம்மனின் அபிஷேக மஞ்சள் நீரும், தல மரத்து வேப்பிலையும், புனிதமான குங்குமமும் அருட்பிரசாதங்களாக விளங்குகின்றன செவ்வாய்க்கிழமைகளில் காலை 8 மணி முதல் 9 மணி வரை நாகதோஷ நிவர்த்தி பூஜையில் கலந்துகொண்டு அனைத்துவித நாக தோஷங்களும் நீங்கப்பெறலாம்.

உடல் நலிவுற்றவர்கள் இங்கு விற்கப்படும் மண் பொம்மைகளை வாங்கி காணிக்கை செலுத்துகின்றனர். விவசாயிகள் தங்கள் கால்நடைகளுக்கு வரும் நோய்களுக்கு வேண்டிக் கொண்டு அவை குணம் பெற்ற பின்பு, விலங்கு பொம்மைகளைக் காணிக்கையாகச் செலுத்துகின்றனர்.

சிறப்பு அம்சங்கள்:

ஆலய அமைப்பு: தேசிய நெடுஞ்சாலையில், வெட்டுவாணம் ஊரின் சாலையோரம் ஆலயம் அமைந்துள்ளது. கிழக்கு நோக்கிய ஐந்துநிலை ராஜகோபுரமும், அதனையொட்டி அழகிய மண்டபமும், எழிலான திருக்குளமும், குளத்தின் மேற்புறம் புற்றும், வேம்பும் ஒருங்கே அமைந்துள்ளன. ஆலயத்தில் நுழைந்து இடதுபுறம் நாகர் சிலையின் பீடத்தில் பழமையான பெரிய வேம்புமரம் தலமரமாக அமைந்துள்ளது. தென்மேற்கே அலங்கார மண்டபம் இருக்கிறது. தென்மேற்கில் உற்சவ மண்டபமும், வடமேற்கில் தீபம் ஏற்றும் அட்ட நாக தீப மண்டபமும் அமைந்துள்ளன.

நடுநாயகமாக அன்னை வெட்டுவாணம் எல்லையம்மன், கருவறையில் கழுத்தளவு மேனியளாக, அழகிய அகன்ற கண்கள் கொண்டு அழகுற அருள்காட்சி வழங்குகின்றாள். அன்னை எல்லையம்மன் என்று வழங்கப்பட்டாலும், இவளின் புராணப் பெயர் ரேணுகாதேவியாகும். அம்மனின் பின்புறம் முழு உருவ சுதைச் சிற்பம் அழகுற அருள்கோலத்தில் காட்சி அளிக்கிறது. அபிஷேக ஆராதனை, சிரசு அம்மனுக்கும், அலங்காரம் உள்ளிட்டவை இரு அம்மன்களுக்கும் செய்யப்படுகின்றது.

தீபம் ஏற்றும் மேடை அழகிய திருக்குளம் : அம்மன் ஆலயத்தின் நேர் எதிரே அழகிய படிகள் கொண்ட சதுர வடிவிலான திருக்குளம் வெகு நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளது. எப்போதும் நீர் நிறைந்து காணப்படும் இத்திருக்குளத்தின் படிகளில், லட்ச தீப விழாவின் போது விளக்கேற்றி வழிபடும் காட்சி, மனம் கவரும் விதமானது. இத்திருக்குளமே தலத் தீர்த்தமாக அமைந்துள்ளது.

திருவிழாக்கள்:

                அம்மனுக்கு ஆடி மாதம் முழுவதுமே விழாக் கோலம் தான். ஆடி முதல் வெள்ளிக்கிழமையில் இருந்து ஏழு வெள்ளிக்கிழமைகளில் விழாக்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன. இந்த ஆலயத்தில் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் தரிசனம் செய்யலாம். வெள்ளிக்கிழமைகளில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை தொடர்ந்து தரிசனம் செய்யலாம்.

காலம்

500-1000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

வெட்டுவானம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

குடியாத்தம்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top