Sunday Oct 06, 2024

வாசுதேவநல்லூர் சிந்தாமணிநாதர் (அர்த்தநாரீஸ்வரர்) திருக்கோயில், திருநெல்வேலி

முகவரி :

அருள்மிகு சிந்தாமணிநாதர் (அர்த்தநாரீஸ்வரர்) திருக்கோயில், வாசுதேவநல்லூர்,

திருநெல்வேலி மாவட்டம் – 627 758.

போன்: +91-4636 241900, 87787 58130

இறைவன்:

சிந்தாமணிநாதர் (அர்த்தநாரீஸ்வரர்)

அறிமுகம்:

தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் வாசுதேவநல்லூரில் அமைந்துள்ள சிந்தாமணிநாதர் கோயில், அர்த்தநாரீஸ்வர் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. மூலவர் சிந்தாமணிநாதர் / அர்த்தநாரீஸ்வர் என்று அழைக்கப்படுகிறார். தாயார் இடபக வள்ளி என்று அழைக்கப்படுகிறார். ஸ்தல விருக்ஷம் புளியமரமாகவும், இந்த கோயிலின் தீர்த்தம் கருப்பாயி நதியாகவும் உள்ளது. வரலாற்று ரீதியாக இந்த இடம் வாசவனூர் என்று அழைக்கப்படுகிறது. பெரிய மன்னன் புலித்தேவன் ஆங்கிலேயருக்கு எதிராக வாசுதேவநல்லூரில் போரிட்டார். பழைய பேருந்து நிலையம் அருகில் கோயில் உள்ளது. அருகிலுள்ள ரயில் நிலையம் சங்கரன்கோயிலிலும், அருகிலுள்ள விமான நிலையம் மதுரையிலும் அமைந்துள்ளது.

புராண முக்கியத்துவம் :

மகரிஷிகளில் ஒருவரான பிருங்கி, சிவம் வேறு, சக்தி வேறு என்ற எண்ணத்தில் சிவனை மட்டுமே வணங்கி வந்தார். பார்வதி, சிவனிடம் பிருங்கிக்கு உண்மையை உணர்த்தும்படி சொல்லியும் அவர் கேட்கவில்லை. எனவே அவள், சிவனைப் பிரிந்து பூலோகம் வந்தாள். ஒரு புளிய மரத்தின் அடியில் தவமிருந்தாள். அவளுக்கு காட்சி தந்த சிவன், தன்னுள் ஏற்றுக்கொண்டு அர்த்தநாரீஸ்வரராக காட்சி தந்தார். அர்த்தநாரீஸ்வரரை “சிந்தாமணிநாதர்’ என்று அழைக்கின்றனர். இப்பகுதியில் சிவபக்தியுடைய ரவிவர்மன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். இவனது மகன் குலசேகரன் தீராத நோயால் அவதிப்பட்டான். மகன் குணமடைய சிவனை வேண்டினான் மன்னன். ஒருநாள் அவனைச் சந்தித்த சிவனடியார் ஒருவர், இத்தலத்து சிவனிடம் வேண்ட நோய் நீங்கும் என்றார். அதன்படி மன்னன் இங்கு வந்து வணங்க, மகனின் நோய் குணமானது. பின்பு மன்னன் அர்த்தநாரீஸ்வரருக்கு பெரிய அளவில் கோயில் கட்டினான்.

நம்பிக்கைகள்:

பிரச்னையால் பிரிந்திருக்கும் தம்பதியர், அர்த்தநாரீஸ்வரரிடம் வேண்டிக்கொள்ள மீண்டும் இணைவர் என்பது நம்பிக்கை.

சிறப்பு அம்சங்கள்:

சுவாமி அமைப்பு: அர்த்தநாரீஸ்வரரின் தலையில் கங்கை இருக்கிறாள். சிவனுக்குரிய வலப்பாகத்தில் சந்திரனும், அம்பாளுக்கு பின்புறம் ஜடையும் உள்ளது. சிவப்பகுதி கரங்களில் சூலம், கபாலமும், காதில் தாடங்கமும் இருக்கிறது. அம்பாள் பகுதியிலுள்ள கைகளில் பாசம், அங்குசம், பூச்செண்டும், காதில் தோடும் உள்ளன. சுவாமி பகுதி காலில் தண்டம், சதங்கையும், அம்பாள் பகுதி காலில் கொலுசும் இருக்கிறது. சுவாமி பாகத்திற்கு வேஷ்டியும், அம்பாள் பாகத்திற்கு சேலையும் அணிவித்து அலங்காரம் செய்யப்படுகிறது. அம்பாள் பகுதியை “இடபாகவல்லி’ என்கின்றனர்.

அன்னாபிஷேக சிறப்பு: பிருங்கி மகரிஷி, இங்கு உற்சவராக இருக்கிறார். ஆனி பிரம்மோற்ஸவத்தின்போது சிவனையும் அம்பாளையும் அருகருகில் வைப்பார்கள். பிருங்கி முனிவர் சிவனை மட்டும் வழிபடும் வகையில் பாவனை செய்வார்கள். இதனால், பார்வதி கோபமடைவது போலவும், சிவன் அர்த்தநாரியாக அம்பாளை ஏற்பதுமான சடங்குகள் செய்யப்படும். பின்னர், பிருங்கி மனம் திருந்தி அர்த்தநாரியை வழிபடுவார். இந்த வைபவம் மிக விசேஷமாக நடக்கும். புத்திரபாக்கியம் இல்லாதவர்கள் இங்குள்ள நதியில் நீராடி அம்பிகையை வழிபட கரு உண்டாகும் என்பது நம்பிக்கை. எனவே இந்த நதி, “கருப்பை ஆறு’ (கருப்பாநதி)என்று அழைக்கப்படுகிறது. சிவராத்திரியன்று விசேஷ பூஜை நடக்கிறது. இவருக்கு ஐப்பசி பவுர்ணமியில் அன்னாபிஷேகம் செய்யப்படுவதில்லை. மாறாக, சித்திரைப்பிறப்பன்று காலையில் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.

புளிய மரங்கள் நிறைந்த வனத்தில் சிவன் காட்சி தருவதால், “சிந்தாமணிநாதர்’ என்று அழைக்கப்படுகிறார். புளிய மரத்திற்கு “சிந்தை மரம்’ என்றும் பெயர் உண்டு. இத்தலத்தின் விருட்சமும் புளியமரம் ஆகும். இம்மரத்தின் பழங்கள் இனிப்பு, புளிப்பு என இரட்டைச் சுவையுடன் இருப்பது சிறப்பம்சம். பிரிந்திருக்கும் தம்பதியர் இங்கு வேண்டிக்கொள்ள மீண்டும் இணைவர் என்பது நம்பிக்கை.

திருவிழாக்கள்:

ஆனியில் பிரம்மோற்ஸவம், கந்தசஷ்டி, மார்கழி திருவாதிரை, தை அமாவாசை

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

வாசுதேவநல்லூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

சங்கரன்கோயில்

அருகிலுள்ள விமான நிலையம்

மதுரை

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top