வளையாத்தூர் வளவநாதீஸ்வரர் திருக்கோயில், வேலூர்
![](https://lightuptemples.com/wp-content/uploads/2024/05/2018-09-02.jpg)
முகவரி :
அருள்மிகு வளவநாதீஸ்வரர் திருக்கோயில்,
வளையாத்தூர்,
வேலூர் மாவட்டம் – 632518.
போன்: +91 99769 99793, 98436 43840
இறைவன்:
வளவநாதீஸ்வரர்
இறைவி:
பெரியநாயகி
அறிமுகம்:
வேலூர்- சென்னை ரோட்டில் 24 கி.மீ., தூரத்திலுள்ள ஆற்காடு சென்று, அங்கிருந்து பிரியும் ரோட்டில் 17 கி.மீ., சென்றால் வளையாத்தூரை அடையலாம்.
புராண முக்கியத்துவம் :
முற்காலத்தில் இப்பகுதியில் வசித்த மன்னர் ஒருவர், தீவிர சிவபக்தராக இருந்தார். மக்கள் சிறப்பாக வாழவும், விவசாய நிலம் செழித்துத் வளரவும் அருள்புரியும் சிவனுக்கு, தம் ஆட்சிக்குட்பட்ட பகுதியில் கோயில் கட்ட வேண்டுமென விரும்பினார். ஆனால், அவருக்கு எங்கு, எப்படி கோயில் அமைப்பதெனத் தெரியவில்லை. ஒருசமயம் அவரது கனவில் தோன்றிய சிவன், இந்த இடத்தை குறிப்பால் உணர்த்தினர். அதன்படி, மன்னர் இங்கு சிவனுக்கு கோயில் எழுப்பினார். இங்கு அருளும் சிவன் மக்களுக்கு வேண்டும் வளத்தை தந்தருளியதால் “வளவநாதீஸ்வரர்’ என்றே பெயர் பெற்றார். மக்களின் பிரார்த்தனைகளுக்கேற்ப வளைந்து கொடுத்துத் அருள் செய்பவர் என்பதாலும், இப்பெயர் ஏற்பட்டதாகச் சொல்வர். பல்லவர், சோழர், சம்புவராயர், நாயக்கர் மற்றும் விஜயநகரப் பேரரசர்களால் திருப்பணி செய்யப்பட்ட புராதனமான கோயில் இது.
நம்பிக்கைகள்:
எந்த கிரகத்தால் ஏற்பட்ட தோஷத்தாலும் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வேண்டிக் கொள்கிறார்கள்.
சிறப்பு அம்சங்கள்:
கிரகதோஷ நிவர்த்தி:வளவநாதீஸ்வரர் சதுர வடிவ பீடத்தில், இடப்புறமாக சற்றே வளைந்த நிலையில் காட்சியளிக்கிறார். இங்கு சிவன் ஒன்பது நிலைகளைக் கடந்து, நவாம்ச மூர்த்தியாகக் காட்சி தருவதாக ஐதீகம். இந்த ஒன்பது நிலைகளும் நவக்கிரகங்களைக் குறிப்பதாகவும் சொல்வர். இதனால், எந்த கிரகத்தால் ஏற்பட்ட தோஷத்தாலும் பாதிக்கப்பட்டவர்கள், இங்கு நிவர்த்திக்காக வேண்டிக்கொள்கிறார்கள்.
நெற்றிக்கண் அம்பிகை: சிவபெருமான் சூரியன், சந்திரன், அக்னி என மூவரையும் கண்களாகக் கொண்டவர். சிவனின் சக்தி வடிவமே அம்பிகை என்பதால், அவளும் முக்கண்உடையவள் ஆகிறாள். இதை உணர்த்தும் விதமாக அம்பிகை இக்கோயிலில் நெற்றிக்கண்ணுடன் காட்சியளிக்கிறாள். சிவராத்திரியன்று இரவில் இவளுக்கு பூஜையும் உண்டு. பிரார்த்தனை நிறைவேற பக்தர்கள் இவளுக்கு பாலபிஷேகம் செய்வித்துத் வழிபடுகிறார்கள். இவளது நான்கு கைகளிலுள்ள சுண்டு விரல்களிலும் மோதிரம் அணிந்திருக்கிறாள். இங்குள்ள சந்திரசேகரர் சுண்டு விரல்கள் இரண்டிலும் மோதிரம் அணிந்தபடி காட்சி தருகிறார். சிவன் சன்னதி எதிரே வாசல் கிடையாது. கல் ஜன்னல் மட்டுமே உள்ளது. பிரதான வாசல் அம்பாள் சன்னதி எதிரே அமைந்துள்ளதால், இக்கோயிலில் நுழைந்ததும் முதலில் அம்பாளைத்தான் தரிசனம் செய்கின்றனர்.
திருவிழாக்கள்:
அன்னாபிஷேகம், ஆருத்ராதரிசனம், திருக்கார்த்திகை, சிவராத்திரி.
![](https://lightuptemples.com/wp-content/uploads/2024/05/2018-09-02.jpg)
![](https://lightuptemples.com/wp-content/uploads/2024/05/1-1.jpg)
காலம்
1500 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
வளையாத்தூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
ஆரணி
அருகிலுள்ள விமான நிலையம்
சென்னை