வலங்கைமான் மாரியம்மன் திருக்கோயில், திருவாரூர்
முகவரி
அருள்மிகு வலங்கைமான் மாரியம்மன் திருக்கோயில், வலங்கைமான், திருவாரூர் மாவட்டம் – 612804. போன்: +91 4374-264575
இறைவன்
இறைவி: மாரியம்மன்
அறிமுகம்
வலங்கைமான் மாரியம்மன் கோயில், தமிழ்நாடு, திருவாரூர் மாவட்டம், வலங்கைமானில் கும்பகோணம்-நீடாமங்கலம் சாலையில், கும்பகோணத்திலிருந்து 9 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இக்கோயில் முன் மண்டபம், மகாமண்டபம், அர்த்தமண்டபம், கருவறை, திருச்சுற்று ஆகிய அமைப்புகளோடு விளங்குகிறது. மகா மண்டபத்தின் தென் பகுதியில் விநாயகர் சிலையும், வட பகுதியின் கீழ்ப்புறம் இருளன், பேச்சியம்மன், வீரன், வீரனுடைய தேவியர் ஆகியோரின் சுதைச் சிற்பங்கள் உள்ளன. அர்த்தமண்டபத்தில் உத்சவத் தருமேனிகள் உள்ளன. கருவறை சதுர வடிவில் உள்ளது. இதன்மேல் விமானம் உள்ளது. கோயிலின் தெற்கில் குளம் உள்ளது. இக்கோயிலின் மூலவராக சீதளாதேவி மகாமாரியம்மன் அமர்ந்த நிலையில் நாற்கரங்களுடன் உள்ளார். வலது மேற்கரத்தில் உடுக்கையும், இடது மேற்கரத்தில் சூலமும் உள்ளது. வலது கீழ்க்கரத்தில் கத்தியும், இடது கீழ்க்கரத்தில் கபாலமும் உள்ளது. இடது காலை மடித்து, வலது காலை தொங்கவிட்டு வீரசிம்மாசனத்தில் உள்ளார். இரு தோள்களின் மீதும் இரு நாகங்கள் உள்ளன. அவர் பாடைகட்டி மாரியம்மன் என்றும் அழைக்கப்படுகிறார்.
புராண முக்கியத்துவம்
தட்சனின் வேண்டுகோள்படி சக்திதேவி அவனது மகளாகப் பிறந்தாள். தட்சன் சிவபெருமானை வெறுத்தான். ஆனால் சக்தியோ சிவனையே திருமணம் செய்து கொண்டாள். தட்சன் யாகம் செய்த போது சக்தி யாகத்தீயில் விழுந்து மீண்டும் இமயமலையில் அவதரித்தாள். சக்திதேவியின் உருவம் நெருப்பில் குளித்ததால் சிதைந்து போயிற்று எனவே திருமால் உலகத்தை காப்பாற்ற சிவபெருமானை வேண்டி அழகிய சக்தியை உருவாக்க கேட்டார். அவ்வாறு உருவான சக்தி பல தலங்களில் அமர்ந்தாள். இவற்றை சக்திபீடங்கள் என்றனர். ஆனால் சக்திபீடங்களையும் மிஞ்சும் வகையில்சில கோயில்கள் அமைந்தன அவற்றில் ஒன்று தான் வலங்கை மான் மகா மாரியம்மன் கோயில்.
நம்பிக்கைகள்
கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், திருமணத் தடை, பார்வை இழந்தவர்கள், அம்மை நோய் கண்டவர்கள் ஆகியோர் இங்கு வந்து குணம் பெறுகின்றனர்.
சிறப்பு அம்சங்கள்
அம்மன் தோன்றிய விதம்: வலங்கைமான் அருகிலுள்ள ஐயனார் கோயில் வழியாக ஒரு பிராமண தம்பதியரால் ஒரு பெண்குழந்தை விட்டு செல்லப்பட்டது. அந்த குழந்தையை அந்த பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் எடுத்து வளர்த்தனர். குழந்தைக்கு அம்மை கண்டு உயிர் பிரிந்தது. அவர்கள் குழந்தையை தங்கள் விட்டு கொல்லைப்புறத்தில் கீற்றுக்கொட்டகை அமைத்து சமாதி வைத்தனர் .சமாதிக்கு தினமும் விளக்கேற்றிவந்தனர் வீட்வீ டில் செய்யும் உணவுப்பண்டங்களை தினமும் படைத்தனர் காலப்போக்கில் சமாதியை அனைவரும் வழிபடத்துவங்கினர். வேண்டியவர்களுக்கு வேண்டிய பலன்கிடைத்ததால் அந்த குழந்தையை சீதளாதேவி என பெயரிட்டு அம்மனாக கருதி வழிபட்டனர். சீதளம் என்றால் குளிர்ச்சி என பொருள் அம்மை ஏற்பட்டு குளிர்ந்து போனதால் அந்த பெண் தெய்வம் சீதளாதேவி என அழைக்கப்படுகிறாள். வலங்கைமான் மகாமாரியம்மன் கோயிலுக்கு பங்குனி மாதத்தில் பாடைக்காவடி திருவிழா நடக்கும்.மாரியம்மனுக்கு காப்பு கட்டி விழாவை துவக்குவார்கள். நோயுற்றவர்கள் தங்கள் நோய் நீங்கினால் பாடைக்காவடி எடுப்பதாக மகா மாரியம்மனை வேண்டுகின்றனர் . நோய் நீங்கியதும் , புனிதநீராடி, பாடை கட்டி படுத்துக் கொள்வர். அவரை இறுகக்கட்டி பிணம் போல தூக்கி வருவர் தாரை, தப்பட்டை முழங்க ஊர்வலமாக இவரை கோயிலுக்கு தூக்கி வருவர் கோயில் வாசலுக்கு வந்ததும் அர்ச்சகர் அவர்கள் மீது புனித நீரை தெளிப்பார் அப்போது மயங்கிடந்தவர் உயிர்பெற்று எழுவது போல நடிப்பார். அவருக்கு விபூதியும், குங்குமமும் தரப்படும். இறக்க இருக்கம் தருணத்தில் அம்மாள் இவர்களை காப்பாற்றுவதாக ஐதீகம்.
திருவிழாக்கள்
ஆவணி, பங்குனி ஆகிய இரு மாதங்களிலும் மாரியம்மனுக்கு திருவிழா நடைபெறுகின்றது. ஏழு நாட்கள் விழா நடைபெறும். எட்டாம் நாள் புகழ் பெற்ற பெற்ற பாடைத் திருவிழாவும், ஒன்பதாம் நாள் புஷ்பப் பல்லக்கும் சிறப்பாக ஆண்டுதோறும் நடைபெறுகின்றன. ஆவணி மாதத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் விழா நடைபெறுகிறது. ஆவணி மாதம் இறுதி ஞாயிற்றுக்கிழமை தெப்பத்திருவிழா நடைபெறுகிறது. பங்குனித்திருவிழா பங்குனி முதல் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி நடைபெறும்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத் துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
வலங்கைமான்
அருகிலுள்ள இரயில் நிலையம்
தாராசுரம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி