வடமட்டம் சிவன்கோயில், காரைக்கால்
முகவரி
வடமட்டம் சிவன்கோயில், காரைக்கால்
இறைவன்
இறைவன்: சிவன்
அறிமுகம்
சுமார் 1000 வருடங்கள் பழைமைமிக்க ஆலயம், கீழகாசாக்குடி. இக்கோயிலில் காணப்படும் கல்வெட்டுக்களில் திருமுற்றம், திருமடை வளாக நந்தவனம், காழிக்கற்பக நந்தவனம், திருமுகை நந்தவனம், நாற்பத்தெண்ணாயிரவன் நந்தவனம் என ஏராளமான நிலப்பகுதிகளை காசக்குடி கோயிலுக்கு வழங்கியுள்ளான் இரண்டாம் ராஜராஜன். இதில் காணப்படும் திருமுற்றம் என்பதே இன்றைய வடமட்டம். முற்றம் என்றால் ஊருக்கு வெளியில் உள்ள திறந்த வெளி எனும் பொருள் உண்டு, காசாகுடியின் வடக்கில் இருப்பதால் திருமுற்றம்-வடமற்றம் ஆகி வடமட்டம் ஆகி உள்ளது. இந்த வடமட்டம் ஊரானது, நெடுங்காடு – கோட்டுச்சேரி சாலையில் மூன்று கிமீ தூரத்தில் உள்ளது. பெரிய குளக்கரையின் கீழ் பாகத்தில் உள்ளது இந்த சிவாலயம். கோயிலை ஒட்டி வடபுறம் நெடுங்காடு சாலை செல்கிறது. அதனை ஒட்டி கிளை ஆறு ஒன்று செல்கிறது. வடமட்டம் சிறிய விவசாய கிராமம், காரைக்கால் பகுதி சிவாலயங்கள் அனைத்தும் நல்ல நிலையில் இருக்க இந்த வடமட்டம் கோயில் மட்டும் மிகவும் சிதைவுற்ற நிலையில் உள்ளது சற்று ஆச்சரியப்படத்தக்க அளவில் உள்ளது.
புராண முக்கியத்துவம்
காரைக்காலில் உள்ள பிற கோயில்களில் இல்லாத சிறப்பு இந்த வடமட்டம் கோயிலுக்கு உள்ளது, அது என்னவென்றால் சிவாலயமும் வைணவ ஆலயமும் அருகருகே ஒரே வளாகத்தினுள் அமைந்திருப்பது தான் அது. கிழக்கு நோக்கிய சிவாலயம், இறைவன் கிழக்கு நோக்கியவராக கருவறை கொண்டுள்ளார், இறைவி தெற்கு நோக்கிய கருவறை கொண்டுள்ளார். இரு கருவறைகளும் ஒரு முகப்பு மண்டபம் கொண்டு இணைக்கப்பட்டுள்ளது. இந்த மண்டபத்தின் வெளியில் நந்தி தனி மண்டபத்தில் உள்ளார். கருவறை மண்டப வாயிலில் இடதுபுறம் விநாயகர் தனி சிற்றாலயம் கொண்டுள்ளார், அதுபோல் வலதுபுறம் முருகனுக்கு ஒரு சிற்றாலயம் இருந்துள்ளது அது முற்றிலும் இடிந்து வீழ்ந்து விட்டது. முகப்பு மதில் சுவர்கள் முற்றிலும் சிதைந்து காணமல் போயுள்ளன. கோயில் முற்றிலும் செங்கல் சுண்ணம் கொண்டு கட்டப்பட்டுள்ளதால் காலப்போக்கில் கரைந்து கரைந்து போய் பெரும் சிதைவு ஏற்ப்பட்டுள்ளது. கருவறை சுவர்களின் அளவுகளே வித்தியாசமாக மாறிப்போயுள்ளது. எங்கும் செடிகளும் மரங்களும் வேரோடி விமான பாகம் பெரிதும் சிதைந்துள்ளது. கருவறையின் நேர் பின் புறம் முருகன் சிற்றாலயம் கொண்டுள்ளார். அந்த சிற்றாலயத்தினை ஒட்டியவாறு ஒரு முழுமையான பெரிய லிங்கமும், பின் புற மதில் சுவற்றினை ஒட்டியவாறு ஒரு லிங்க பாணமும் ஆவுடையாரின் கீழ் பகுதியும் மட்டுமே காண கிடைக்கிறது, ஒரு சிறிய நாகர் சிலை ஒன்றும் கிடத்தப்பட்டுள்ளது. இவ்விரண்டு லிங்கமூர்த்திகளும் மேற்கில் ஒரு மண்டபத்தில் இருந்தவைகள் ஆகலாம். சண்டேசர் சன்னதி வழமையான பாகத்தில் உள்ளது, சிதைவுகளுக்கு அவரும் தப்பவில்லை. இக்கோயிலின் வடக்கில் கிழக்கு நோக்கிய லட்சுமிநாராயணர் தனி திருக்கோயில் கொண்டுள்ளார், அதில் முகப்பு மண்டபம் இடிந்து வீழ்ந்துவிட்டது, அவரின் நேர் எதிரில் அவரின் பெரிய திருவடியான கருடன் சிறு மண்டபத்தில் உள்ளார். பல கோயில்களில் தங்க வெள்ளி அங்கியும் கீரிடமும் அணிந்து பார்த்த இந்த மூர்த்தி இங்கே பழம் துணியும், காய்ந்து உதிர்ந்த சந்தனமும் கொண்ட மேனியராக தேவியை மடியில் இருத்தியுள்ளார். மேலிருக்கும் விமானம் மரத்தை சார்ந்து இருக்கிறதா அல்லது மரம் விமானத்தை சார்ந்து இருக்கிறதா என தெரியவில்லை. # ” உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
வடமட்டம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
காரைக்கால்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி