ராஜகோபாலபுரம் சுந்தரேஸ்வரர் சிவன்கோயில், மயிலாடுதுறை
முகவரி :
ராஜகோபாலபுரம் சுந்தரேஸ்வரர் சிவன்கோயில்,
ராஜகோபாலபுரம், குத்தாலம் வட்டம்,
மயிலாடுதுறை மாவட்டம் – 609801.
இறைவன்:
சுந்தரேஸ்வரர்
இறைவி:
மீனாட்சி
அறிமுகம்:
மயிலாடுதுறையின் மேற்கில் 12கிமீ தொலைவில் கும்பகோணம் சாலையில் அமைந்துள்ளது குத்தாலம். இந்த ஊரில் ஐந்து சிவன் கோயில்கள் உள்ளன. அதில் இந்த மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோயிலும் ஒன்று. இக்கோயில் குத்தாலம் ரயில் நிலையத்தின் மேற்கில் உள்ள ராஜகோபாலபுரம் என்ற தனி பகுதியில் அமைந்துள்ளது. குத்தாலம் பகுதி 3500ஆண்டுகளுக்கு முன்னரே மனிதர்கள் வாழ்ந்த பகுதியாகும். குத்தாலத்திலிருந்து இரண்டு கி.மீ. தொலைவில் அமைந்துள்ள செம்பியம் கண்டியூரில் சில ஆண்டுகளுக்கு முன் கண்டெடுக்கப்பட்ட சிந்து சமவெளி எழுத்துகள் பொறிக்கப்பட்ட கற்கோடரி, ஊரின் 3500 ஆண்டு கால வரலாற்றைச் சொல்கிறது.
இங்கு கிழக்கு நோக்கிய சிவாலயம் அமைந்துள்ளது, பல ஆண்டு முயற்சிகளின் பின்னர் கோயில் குடமுழுக்கு நிறைவுற்று காட்சியளிக்கிறது. கிழக்கு நோக்கிய இறைவன் சுந்தரேஸ்வரர் இறைவி மீனாட்சி தெற்கு நோக்கியுள்ளார். சிவன்கோயிலின் நேர் எதிரில் பாலவிநாயகர் கோயில் வடக்கு நோக்கியுள்ளது. இரு கோயில்களும் சமீபத்தில் தான் குடமுழுக்கு கண்டுள்ளன. முகப்பில் ராஜகோபுரமில்லை, நுழைவாயிலின் மேல் இறைவனும் இறைவியும் ரிஷபத்தின் மேல் அமர்ந்துள்ள காட்சி சுதையாக அலங்கரிக்கப்பட்டுள்ளது. நுழைவாயிலின் உட்புறம் மேற்கு நோக்கி சூரியன் சந்திரன் மாடங்களில் உள்ளனர். நுழைவாயில் கடந்தவுடன் கிழக்கு நோக்கிய இறைவன் கருவறை கொண்டுள்ளார்.
பிரஸ்தரம் என சொல்லப்படும் கூரைவரையிலான பகுதி முற்றிலும் கருங்கல்லால் கட்டப்பட்டுள்ளது. முகப்பு மண்டபமும் கருங்கல்லால் ஆனது, தெற்கு நோக்கிய இறைவியின் கருவறை செங்கல் கொண்டு கட்டப்பட்டுள்ளது. இறைவன் மீனாட்சி சுந்தரேஸ்வரர் பெரிய லிங்க மூர்த்தியாக உள்ளார். அவரது கருவறை வாயிலில் விநாயகர் சுப்பிரமணியர் உள்ளனர். கோட்டத்து தெய்வங்களாக தென்முகனும் துர்க்கையும் மட்டும் உள்ளனர். பிரகார சிற்றாலயங்கள் விநாயகர் முருகன் மகாலட்சுமி ஆகியோருக்கு உள்ளன. வடகிழக்கில் நவகிரகங்கள் உள்ளன. இதில் முருகன் வள்ளி தெய்வானை மூர்த்திகள் பார்க்க மிகுந்த அழகுடையவை.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
ராஜகோபாலபுரம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
குத்தாலம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி