Wednesday Dec 18, 2024

யாதகிரி பஞ்ச நரசிம்மர் திருக்கோயில், தெலுங்கானா

முகவரி

அருள்மிகு யாதகிரி பஞ்ச நரசிம்மர் திருக்கோயில், யாதகிரி கோயில் தெரு, காந்திநகர், யாதகிரிபள்ளி, தெலுங்கானா மாவட்டம் – 508115.

இறைவன்

இறைவன்: நரசிம்மர்

அறிமுகம்

தெலுங்கானா மாநிலத்தின் புகழ்பெற்ற திருத்தலம், ஸ்கந்த புராணம் புகழும் கோவில், யாத ரிஷிக்கு பஞ்ச நரசிம்மராக இறைவன் காட்சி தந்த இடம், தீராத பிணி தீர்க்கும் வைத்திய நரசிம்மர் வாழும் கோவில் என பல்வேறு பெருமைகள் கொண்டதாக திகழ்கிறது, யாதகிரி பஞ்ச நரசிம்மர் கோவில். மகாவிஷ்ணுவின் தசாவதாரங்களில் நான்காவது அவதாரமாகத் விளங்குவது, நரசிம்மர் அவதாரம். மனித உடலும், சிங்க முகமும் கொண்ட தோற்றம். தன் பக்தனான பிரகலாதனை காப்பாற்றுவதற்காக, அவனது தந்தை இரணியனை வதம் செய்ய இறைவன் எடுத்த அவதாரம் இது. அந்த வகையில் காத்தருளும் தெய்வமாக, யாதகிரியில் இருந்து அருள்கிறார் பஞ்ச நரசிம்மர். இவ்வாலயம் தெலுங்கானா மாநில அரசால் நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது. ஸ்ரீலட்சுமி நரசிம்மசுவாமி வாரி தேவஸ்தானம் இந்த ஆலயத்தை நேரடியாக கவனித்து வருகிறது. தெலுங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டத்தில், ஐதராபாத் – வாரங்கல் வழித் தடத்தில் 6 கிலோமீட்டர் தொலைவில் யாதகிரி திருத்தலம் இருக்கிறது. ஐதராபாத்தில் இருந்து 60 கி.மீ, வாரங்கல்லில் இருந்து 90 கி.மீ தொலைவில் யாதகிரி உள்ளது. போன்கிர் என்ற ரெயில் நிலையத்தில் இருந்து 13 கி.மீ தொலைவிலும் இந்த திருத்தலத்தை சென்றடையலாம்.

புராண முக்கியத்துவம்

ரிஷியஸ்ருங்கா- சாந்தா தேவியின் புதல்வராக பிறந்தவர் யாத ரிஷி. திரேதாயுகத்தில் வாழ்ந்த இவர், அனுமனின் அருளைப் பெற்றவர். நரசிம்மர் மீது தீராத பக்தி கொண்டவர். அவரைக் காணும் ஆவலில் கடுமையாக தவம் இயற்றி வந்தார். அவரது தவத்தால் மகிழ்ந்த நரசிம்மர், அனுமன் மூலமாக தன்னுடைய இருப்பிடத்தைக் காட்டி, அங்கே ஐந்து வடிவங்களில் யாத ரிஷிக்கு அருள்காட்சி தந்தருளினார். முதலில் ஜ்வாலா நரசிம்மர், யோகானந்த நரசிம்மர், உக்கிர நரசிம்மர், கண்ட பேருண்ட நரசிம்மர் என நான்கு வடிவங்களைக் காட்டினார். ஆனால் யாத ரிஷியோ, “தாயார் லட்சுமியோடு காட்சியருள வேண்டும்” என வேண்டி நின்றார். தொடர்ந்து உடனடியாக லட்சுமியோடு, லட்சுமி நரசிம்மராக தோன்றி அருளினார். எனவே இத்தலம் பஞ்ச நரசிம்மர் தலமாக போற்றப் படுகிறது. நரசிம்மர் காட்சி தந்த ஆதிக் கோவில், தற்போதைய யாதகிரி மலை அடிவாரத்தில் இருந்து ஐந்து கிலோமீட்டா் தொலைவில் உள்ளது. யாத ரிஷி முத்தியடைந்த பின்பு இப்பகுதிவாழ் மக்கள், அந்த ஆலயத்தில் முறையாக வழிபாடு செய்யவில்லை. இதனால் அங்கிருந்து அகன்று, தற்போதைய மலை மீதுள்ள குகைக்குள் இறைவன் குடிபுகுந்தார். இந்த நிலையில் இறைவனை வழிபட விரும்பும் பக்தர்கள், நரசிம்மரைக் காணாமல் தவித்தனர். அப்போது ஒரு பெண்ணின் கனவில் தோன்றிய நரசிம்மர், தன் இருப்பிடத்தைக் கூறினார். மகிழ்ச்சியடைந்த மக்கள் மலை மீது ஏறி, குகைக்குள் இருந்த நரசிம்மரைக் கண்டு மகிழ்ந்து வழிபடத் தொடங்கினர் என தலவரலாறு கூறப்படுகிறது. கி.பி.1148-ல் நாராயணசுவாமி கோவில் கல்வெட்டு ஒன்றில், திரிபுவன மல்லுடு மன்னர், தான் போரில் வென்றோருக்காக போன்கிரில் கோட்டை கட்டியதாகவும், அங்கிருந்து யாதகிரி வந்து நரசிம்மரைப் பலமுறை வழிபட்டு தரிசித்துச் சென்றதாகவும் வரலாற்றில் பதிவாகியுள்ளது. இதேபோல, விஜயநகர மன்னன் கிருஷ்ண தேவாராயர், யாதகிரி லட்சுமி நரசிம்மரை வழிபட்டு, மகப்பேறு கிடைத்ததாகக் கூறப்படுகிறது.

நம்பிக்கைகள்

தீராத நோயால் அவதிப்படுபவர்கள், இந்த ஆலயத்திற்கு வந்து நம்பிக்கையோடு 40 அல்லது 48 நாட்கள் தினமும் ஆலயத்தை வலம் வந்து வணங்க வேண்டும். அதன் மூலம் அவர்களின் நோய் பூரண குணம் பெறும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. இதனால் இவரை ‘வைத்திய நரசிம்மர்’ என்றும் அன்போடு அழைக்கின்றனர். தீயசக்திகள், கிரக தோஷங்கள் உள்ளவர்களுக்கும் கண்கண்ட தெய்வமாக இத்தல லட்சுமி நரசிம்மர் விளங்குகிறார். அது மட்டுமின்றி வாகனம் வாங்குவோர், புது வீடு வாங்கியவர்கள், முதல் குழந்தை பெற்றவர்கள் வந்து செல்லும் திருக்கோவிலாகவும் இது விளங்குகிறது. நித்திய கல்யாண நரசிம்மர் என்பதும் இவரின் கூடுதல் சிறப்பு.

சிறப்பு அம்சங்கள்

யாதகிரி நகரின் எல்லையில் எழிலான சிறிய குன்றில் நரசிம்மர் ஆலயம் அமைந்துள்ளது. சுற்றுச்சுவர், கோபுரங்கள், கருவறை என அனைத்தும் மன்னர்கால சிறிய வேலைப்பாட்டோடு கருங்கல் திருப்பணியாக மாநில அரசால் உருவாக்கப்பட்டு வருகிறது. இக்கோவில் பழங்கோவிலுக்குரிய அம்சத்தோடு அமைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. எனவே, நரசிம்மர் அமர்ந்த குகைக்குள், பஞ்ச நரசிம்மர்கள் காட்சி தருகின்றனர். பிரதானமாக லட்சுமி நரசிம்மர் சாந்த சொரூபியாக, லட்சுமியோடு அருள்காட்சி வழங்குகிறார். மேல் இரு கரங்கள் சக்கரம், சங்கு தாங்கியும், கீழ் இரண்டு கரங்கள் அபய, வரத முத்திரையோடும் காணப்படுகிறது. குடவரைக் கோவிலான யாதகிரி லட்சுமி நரசிம்மர் ஆலயத்தில், கருவறை உச்சியில் உள்ள விமானத்தில், தங்கத்தால் ஆன சுதர்சன சக்கரம் அமைக்கப்பட்டுள்ளது. 3 அடி உயரம், 3 அடி நீளம் கொண்ட இந்த சக்கரம் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது.

திருவிழாக்கள்

இந்த ஆலயத்தில் நாள்தோறும் திருமண வைபவமும் நடைபெறுகிறது. இக்கோவில் பிரம்மோற்சவம் தெலுங்கு பல்குண மாதத்தில் (பிப்ரவரி- மார்ச்) பதினோரு நாட்கள் வெகு விமரிசையாக நடக்கிறது. அதே போல நரசிம்மர் ஜெயந்தியும் சிறப்பான முறையில் கொண்டாடப்படுகிறது. இது தவிர ராமானுஜர், நம்மாழ்வார், மணவாள மாமுனிகள், திருமங்கையாழ்வார், திருப்பாணாழ்வார், ஆண்டாள் திருநட்சத்திர விழாக்கள், மார்கழி, ராமநவமி, மகா சிவராத்திரி, தேவி நவராத்திரி, அனுமன் ஜெயந்தி விழாக்களும் நல்ல முறையில் நடைபெற்று வருகின்றன.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்தியத் தொல்லியல் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

போன்கிர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

யாதகிரி

அருகிலுள்ள விமான நிலையம்

ஹைதராபாத்

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top