மேல்பந்திக்குப்பம் கயிலாசநாதர் சிவன்கோயில், வேலூர்
முகவரி :
மேல்பந்திக்குப்பம் கயிலாசநாதர் சிவன்கோயில்,
மேல்பந்திக்குப்பம், சோளிங்கர்,
வேலூர் மாவட்டம் – 631102.
இறைவன்:
கயிலாசநாதர்
இறைவி:
ஸ்ரீகாமாட்சி
அறிமுகம்:
சோழர்கள் ஆட்சியில் சோழ சிம்மபுரம் என்றும், விஜயநகரப் பேரரசு காலத்தில் சோழலிங்கபுரமாகவும் அழைக்கப்பட்ட தலம், இன்றைய சோளிங்கர். புராதனப் பெருமைகளும் வரலாற்றுச் சிறப்பும் கொண்ட இந்த சோளிங்கர் நகரிலிருந்து சுமார் 5 கி.மீ.தொலைவில், மேல்பந்திக்குப்பம் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீகாமாட்சி அம்மன் சமேத ஸ்ரீகயிலாசநாதர் ஆலயம். புராண காலத்தில் அஷ்ட திக் பாலகர்களால் உருவானது இந்த ஆலயம் என்கிறது புராணம். தொன்மையான இந்த ஆலயம் பல்லவர், சோழர் மற்றும் விஜயநகர அரசர்கள் காலத்தில் புனரமைக்கப்பட்டது என்கிறார்கள்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ராஜேந்திர சோழன் பிரம்ம தேசத்தில் தங்கியிருந்த காலத்தில், சோளிங்கரின் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல ஆலயங்கள் எழுப்பப்பட்டன என்கிறது வரலாறு. அவற்றில் ஒன்று இந்த ஆலயம் என்ற தகவலும் உண்டு. இங்ஙனம் பண்டைய பேரரசர்களால் போற்றிப் பராமரிக்கப்பட்ட அருள்மிகு கயிலாசநாதர் ஆலயம், தற்போது கவனிப்பார் எவருமின்றி சிதைந்து வருகிறது. வில்வம் தலவிருட்சமாக உள்ளது. பல்வேறு சந்நிதிகளும் தீர்த்தங்களும் கொண்டிருந்த இந்த ஆலயம், தற்போது திருப்பணிக்காகக் காத்திருக்கிறது. அன்பர்கள் சிலர் இணைந்து திருப்பணி செய்ய முயன்று வருகிறார்கள்.
புராண முக்கியத்துவம் :
ஒரு காலத்தில் பரந்துவிரிந்து அமைந்திருந்த ஆலயம், தற்போது சிறிய அளவில் காணப்படுகிறது. விஜயநகர மன்னர்களின் காலத்தில் குடமுழுக்கு நடை பெற்றதாம். பின்னர் பெரிதாக திருப்பணிகள் எதுவும் செய்யப்படாமல் அப்படியே உள்ளது என்கிறார்கள் பக்தர்கள்.
இந்த ஆலயத்தில் கிழக்கு நோக்கி எழுந்தருளியிருக்கும் ஈசன், தேவர்களால் ஸ்தாபிக்கப்பட்டதால், தேவலிங்க வகையைச் சேர்ந்தவராக கம்பீரமாகக் காட்சி தருகிறார். இந்திரன், அக்னி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் ஆகியோர் ஈசனின் கருணையால் எட்டு திசைகளுக்கும் அதிபதிகளாக ஆனார்கள்.
இந்த எண்மரும் பூவுலகின் சகல ஜீவன்களுக்கும் காவலாக இருந்து இயற்கைப் பேரழிவுகளிலிருந்து அவர்களைக் காப்போம் என ஈசனிடம் உறுதி கூறும் விதம் இங்கே வந்து பிரார்த்தனை செய்து வழிபட்டார்கள் என்கிறது தலபுராணம். அதனால் இந்த ஊர் எண் திசை புரம், குபேரபுரி, ஈசானபுரம் என்றெல்லாம் போற்றப்படுகிறது.
மட்டுமன்றி கோயிலின் வாயில் வடக்கு நோக்கியது. அதன் வழியே நுழைந்து ஈசனை வழிபடுவதால், பக்தர்களுக்கு குபேர யோகம் அருளும் பதியாகவும் திகழ்கிறது இந்த ஆலயம். எண் திசை நாயகர்களும் அனைத்து உயிர்களின் செயல்களுக்கும் சாட்சியாக இருப்பதாகக் கூறி பொறுப்பு எடுத்துக்கொண்ட தலம் இது. ஆகவே இந்த ஊருக்கு வந்து வழிபடுவதால், தெரிந்தோ தெரியாமலோ செய்த பிழைகளால் உருவான சகல தோஷங்களையும் போக்கிக் கொள்ளலாம் என்பது ஐதீகம்.
இந்த ஆலயத்தில் அன்னை காமாட்சி கிழக்கு நோக்கிய வளாக, வீர சக்தியாக, 16 வகை செல்வங்களையும் வழங்கக் கூடிய தேவியாக வீற்றிருக்கிறாள். இந்திராணி (இந்திரன்), ஸ்வாஹா தேவி (அக்னி), சியாமளா (யமன்), வாருணி (வருணன்), கட்கி (நிருதி), ஜாயை (வாயு), யட்சி (குபேரன்), மங்கலை (ஈசானன்) ஆகிய அஷ்ட திக் பாலகர்களின் மனைவியரும் கூடி இங்கு காமாக்ஷி அம்மனை வணங்கினார்கள். அவர்களின் வேண்டுதலுக்கு மனம் இரங்கிய தேவி, அவர்களின் ஒவ்வொருவரின் வேண்டுதலையும் நிறைவேற்றினாள்.
சிறப்பு அம்சங்கள்:
இங்கு வந்து அன்னைக்கு நெய்தீபம் ஏற்றிவைத்து வழிபடுவது விசேஷம். அன்னை காமாக்ஷியின் அருளால் திருமணத் தடைகள் நீங்கி மாங்கல்ய வரம் கிடைக்கும்; சுமங்கலிப் பெண்களுக்கு மாங்கலய பலத்தை அருள்வாள். யட்சி, ஜாயையின் விருப்பப்படி இங்கு வந்து வேண்டும் பெண்களுக்கு மழலை வரம் அருளும் தாயாகவும் திகழ்கிறாள் காமாக்ஷி அம்பிகை.
இங்கு தனிச் சந்நிதியில் வீற்றிருக்கும் காசி விஸ்வநாதர் – காசி விசாலாட்சியை வணங்கி வழிபட்டால் பித்ரு சாபம் விலகும் என்கிறார்கள். இந்தத் திருமேனிகள் காசியிலிருந்து கொண்டு வரப்பட்டவையாம். ஆகவே இவர்களை தரிசிப்ப தால் காசிக்குச் சென்றுவந்த புண்ணியம் கிடைக்கும்
காலம்
1500 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மேல்பந்திக்குப்பம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
அரக்கோணம்
அருகிலுள்ள விமான நிலையம்
சென்னை