Wednesday Dec 18, 2024

மானந்தக்குடி ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்

முகவரி

அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், மானந்தக்குடி, திருவாரூர் மாவட்டம் – 609 503. போன்: +91- 4366 239389

இறைவன்

இறைவன்: ஏகாம்பரேஸ்வரர் இறைவி: காமாக்ஷி

அறிமுகம்

தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மானந்தக்குடி கிராமத்தில் அமைந்துள்ள ஏகாம்பரேஸ்வரர் கோயில், சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மூலவர் ஏகாம்பரேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். ஊற்சவர் சந்திரசேகரர் ஆவார். அம்மன் காமாக்ஷி என்பார்கள். தீர்த்தம் என்பது அனுமன் தீர்த்தம்.

புராண முக்கியத்துவம்

கார்த்தவீரியன் எனும் பக்தன் ஒருவன் சிவன் மீது அதீத பக்தி கொண்டிருந்தான். ஒருசமயம் அவன் சிவபூஜை செய்து கொண்டிருந்தபோது, ஆஞ்சநேயர் அவனது பூஜைக்கு தொந்தரவு செய்தார். இதனால் கோபமடைந்த கார்த்தவீரியன், ஆஞ்சநேயரை சபித்து விட்டான். தவறை உணர்ந்த ஆஞ்சநேயர், விமோசனம் வேண்டி இத்தலத்திற்கு வந்தார். சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டார். சிவன் அவருக்கு அம்பிகையுடன் காட்சி தந்து சாபவிமோசனம் கொடுத்தருளினார். அந்த மகிழ்ச்சியில் ஆனந்த கூத்தாடினார் ஆஞ்சநேயர். எனவே இத்தலம் “அனுமன் ஆனந்த குடி’ என்றழைக்கப்பட்டு, பிற்காலத்தில் “மானந்தகுடி’ என்று மருவியது.

நம்பிக்கைகள்

தெரியாமல் தவறு செய்து வருந்துபவர்கள், மன அமைதி கிடைக்க இங்கு வேண்டிக்கொள்ளலாம்.

சிறப்பு அம்சங்கள்

ஆஞ்சநேயருக்கு காட்சி தந்த சிவன், ஏகாம்பரேஸ்வரராக அருளுகிறார். அம்பிகை காமாட்சி தனிச்சன்னதியில் தெற்கு நோக்கியிருக்கிறாள். இக்கோயிலில் ஆஞ்சநேயருக்கு தனிச்சன்னதி இருக்கிறது. இவரிடம் வேண்டிக்கொண்டால் வாழ்வில் மங்களம் உண்டாகும் என்பது நம்பிக்கை. எனவே இவரை, “மங்கள ஆஞ்சநேயர்’ என்றே அழைக்கிறார்கள். அமாவாசை மற்றும் மூல நட்சத்திரத்தன்று சிறப்பு பூஜைகள் நடக்கிறது. இங்குள்ள தெட்சிணாமூர்த்தி மிகவும் விசேஷமானவர். இவரது பீடத்தில் சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் ஆகிய நான்கு சீடர்களும், சப்த ரிஷிகளும் இருக்கின்றனர். நந்தியும் இருக்கிறது. தெட்சிணாமூர்த்தியின் இத்தகைய கோலத்தை காண்பது அபூர்வம். தம்பதி சமேத நவக்கிரகம்: ஆஞ்சநேயர் சன்னதிக்கு நேர் எதிரே நவக்கிரக சன்னதி உள்ளது. ஆஞ்சநேயர், கிரகங்களை தனது வாலில் கட்டியிருப்பதாக ஐதீகம். இவரது நேரடிப்பார்வையில் கிரகங்கள் குடும்பஸ்த நிலையில் இருப்பதால் இங்கு கிரக தோஷங்கள் நிவர்த்தியாவதாக நம்பிக்கை இருக்கிறது. ஜாதக, கிரக தோஷம் உள்ளவர்கள் நவக்கிரக சன்னதியில் மட்டைத்தேங்காய் கட்டி வேண்டிக்கொள்கின்றனர். நாகதோஷம் உள்ளவர்கள் நாகர் சிலைகள் வைத்து வேண்டுகின்றனர். பொதுவாக சிவன் கருவறை கோஷ்டத்தின் பின்பகுதியில் லிங்கோத்பவர்தான் இருப்பார். ஆனால், இங்கு இடும்பன் இருக்கிறார். இவருக்கு நேரே சுப்பிரமணியர் தனிச்சன்னதியில் இருக்கிறார். இவர் வலது காலை முன்புறமாக வைத்து, முருகனுக்கு சேவை செய்வதற்கு தயாராக இடும்பன் இங்கு இருப்பதாக ஐதீகம்.

திருவிழாக்கள்

சித்ராபவுர்ணமி, அனுமன்ஜெயந்தி, ஆடி வெள்ளி, திருக்கார்த்திகை.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

பூந்தோட்டம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

பூந்தோட்டம்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top