மாங்குடி சிவலோகநாதர் சிவன் கோயில்
முகவரி
மாங்குடி சிவலோகநாதர் சிவன் கோயில், மாங்குடி, மயிலாடுதுறை – 609 811.
இறைவன்
இறைவன்: சிவலோகநாதர் இறைவி: சிவலோகநாயகி
அறிமுகம்
இந்து அண்டவியல் கோட்பாட்டில் ஏழு உலகங்கள் கூறப்பட்டாலும் பூமி, சுவர்க்கம்,மற்றும் பாதாளம் என மூன்றாக பிரிக்கப்படுகிறது. நாம் வாழ்வது பூலோகம். இதற்கு மேலே விண்ணுலகும், கீழே பாதாள லோகமும் இருப்பதாக புராணங்கள் கூறும். இந்த மூன்றையும் மும்மண்டலங்கள் என்றும், மூவுலகங்கள் என்றும் சிறப்பிக்கிறோம். முதலாவதாக பூலோகம் எனப்படும் தூல பரு உலகம். இதுவே நாம் கண்களால் காணும் உலகம். இந்த இகலோகத்தில்தான் நாம் நமது பரு உடம்பில் அனுபவங்களைப் பெற்று, வினைகளாற்றி வாழ்வின் விருப்பங்களையும் கடமைகளையும் நிறைவேற்றுகிறோம். இரண்டாவதாக உள்ளது பாதாள உலகம். இதில் நாகர்கள் வாழ்வதால் நாகலோகம் என்பர். மேலும் நாகர்களின் உறவுகளான அசுரர்கள், தானவர்கள், தைத்தியர்கள் மற்றும் இயக்கர்களும் பாதாளத்தில் வாழ்கின்றனர். மூன்றாவது உலகமானது காரண உலகம். இதுதான் ஒளிநிறைந்த அருள் உலகமான சிவலோகம். இதுவே மிகவும் உயர்ந்த உலகம். இதுதான் சிவபெருமானும் சிவனுக்கு உதவி செய்யும் தெய்வங்களான விநாயகர் முருகன் போன்றோர் வாழும் இடமாகும். இவ்விடத்தில் ஆன்மீகத்தில் மிகவும் உயர்நிலையடைந்த ஆன்மாக்கள் தம் ஒளிமிக்க ஆன்ம உடலில் வசிக்கின்றனர். ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கினால் அந்த உள்ளுலங்களை இங்கேயே காணலாம், ஆனால் அது அனைவருக்கும் சாத்தியமில்லை. தெய்வங்களை நாம் எவ்விடத்திலும் வணங்கலாம் என்றாலும் கோயிலில் வழிபடுவதுதான் சிறந்தது. ஏனெனில் மூவுலகங்களும் ஒன்றாக சந்திக்கும் சிறந்த தெய்வீக இடமாக கோயிலை அமைத்துள்ளனர். நாம் விழிப்புநிலையில் இருக்கும்போது உள்ளுலகங்களைக் காண்பதோ அல்லது உணர்வதோ இல்லை. இறைவனையும் பிற தெய்வங்களையும் தேவதைகளையும் இருப்பதை உள்ளபடி நாம் உணர்வதற்கு கோயில் வழிசெய்கிறது. பூஜைகள் மூலம் வழிபடும்போது சூக்கும உடலை இறைவனுக்கு அருகில் நாம் நம்பிக்கையோடு வழிபடும் கடவுளுக்கு அருகில் அழைத்துச் செல்கிறது. இப்படி மூவுலக இறைவனை இந்த பூவுலகிலேயே வழிபடலாம். எங்கே? எப்படி? என்கிறீர்களா? திருமங்கலம் மாங்குடி – பொய்கைகுடி எனும் மூன்று திருக்கோயில்களே அவை. மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறைக்கு மேற்கில் 11கிமி தூரத்தில் தான் இந்த மூன்று கோயில்களும் முக்கோண அமைப்பில் உள்ளன. மயிலாடுதுறை- சோழம்பேட்டை – பொன்னூர் – திருமங்கலம் மாங்குடி – பொய்கைகுடி என செல்லலாம். மகாசிவராத்திரி அன்று முதல் காலபூஜையில் திருமங்கலம் ஸ்ரீபூலோகநாதர் ஆலயத்திலும்,இரண்டாம் காலபூஜையை மாங்குடி ஸ்ரீசிவலோகநாதர் ஆலயத்திலும், மூன்றாம் காலபூஜையை இந்த பொய்கைக்குடி ஸ்ரீநாகநாதர் ஆலயத்திலும் மீண்டும் நான்காம் காலபூஜையை திருமங்கல சிவாலயத்திலும் வழிபடுவோர் மூவுலகத்தில் உள்ள அனைத்து சிவலிங்கங்களையும் வணங்கிய பாக்கியம் பெற்றவர்களாவர். மாத சிவராத்திரிகளிலும் இதனை செய்யலாம். கோயிலின் உள்ளே இருக்கக்கூடிய இறைவனின் பிரதிபிம்பம் தான் கோபுரங்கள், கோபுரங்களை ஸ்தூல லிங்கமாகவும், இறைவனின் பாதங்களாகவும் பாவித்தனர். கோபுர வழிபாடு முழுமையான ஆலய வழிபாட்டுக்கு இணையானது என்ற நம்பிக்கை காலம் காலமாய் இருந்து வருகிறது. சிற்ப சாஸ்திரத்தின்படி கோவில்களின் அமைப்பானது மனித உடலின் வடிவத்தில் அமைய வேண்டுமென வரையறுத்திருக்கின்றனர். இதனை “ஷேத்திரம் சரீர என்பர். இப்படி இறைவனுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் கோயிலுக்கும் கொடுக்கப்படவேண்டும். ஆனால் துரதிஷ்டவசமாக இந்த மூன்று சிவாலயங்களில் சிவலோகம் எனப்படும் மாங்குடி சிவலோகநாதர் கோயில் முக்கியத்துவம் இழந்து மிகவும் சிதைவுற்று உள்ளது. மாங்குடி ஆதியில் மால்குடி எனப்பட்டது என்கின்றனர். மால் எனப்படும் திருமால் தங்கிய ஊர் எனப்பொருள்படும். திருமணஞ்சேரியில் இறைவனின் திருமணம் நடைபெற்றபோது திருமகள் திருமாங்கல்யம் செய்ய பொன் கொடுத்த இடம் இவ்வூருடன் தொடர்புடைய திரு-மங்கலம் ஆகும். திருமகளுடன் திருமால் தங்கிய ஊர் இதுவாகும். இக்கோயிலில் திருமால் சன்னதியும் இருந்துள்ளது.
புராண முக்கியத்துவம்
முகப்பு கோபுரம் முற்றிலும் சிதைந்து காணாமலே போய்விட்டது. நான்குபுறமும் சிறு விமானங்கள் கொண்ட துவிதள விமான கருவறை,முற்றிலும் செங்கல் தளியாக கட்டப்பட்டுள்ளது. சிதைவுற்ற நிலையிலும் மகா மேரு போல் உள்ளது. இடைநாழி, அர்த்தமண்டபம், மகாமண்டபம் தென்திசை நோக்கிய அம்பிகை கருவறை பெரிய அளவிலான சண்டேசர் கருவறை சுற்று மதில் சுவர்கள் என அனைத்தும் செங்கல் திருப்பணிகள், சரியான பராமரிப்பின்றி விடப்பட்டதால் முன்னோர்களின் உழைப்பு மொத்தமும் பாழ்பட்டு போனது. இன்னும் கருவறையில் இறைவனும், இறைவியும் உள்ளனர். இடிந்துபோன மண்டபத்தில் திருமால், விநாயகர், சண்டேசர் மற்றொரு லிங்கமும் அதன் நந்தியும் உள்ளனர். சிவன் கோயில் திருப்பணிகளுக்கு உதவுபவர்கள், திருக்கோயிலை கட்டியவர்களைவிட நான்கு மடங்கு சிவ புண்ணியம் பெறுவார்கள் என்பது மாதவசிவஞான சுவாமிகளின் திருவாக்காகும். “முரிந்து வீழ்ந்தன வெடித்தன உடைந்தன முதிய நெரிந்தவாகிய கோபுரம் நெடுமதில் பிறவும் தெரிந்து முன்னையிற் சீர்பெறப் புதுக்குவோர் பண்டு புரிந்து ளோர்பெறும் புண்ணியம் நான்மடங்கு உறுவர்” – என்கிறது காஞ்சிப்புராணம். பொருள் கொடுப்பதற்கும், உத்வேகம் கொடுப்பதற்கும் ஆயிரமாயிரம் கைகள் இங்கு உண்டு, எனினும் அம்பின் கூர்முனையாய் முன்னிற்கப்போவது யார் என்பதே கேள்வி? # ”உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 – 2000
நிர்வகிக்கப்படுகிறது
.
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மாங்குடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
மயிலாடுதுறை
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி