மத்தூர் மகிஷாசுரமர்த்தினி கோயில், திருவள்ளூர்
முகவரி :
மத்தூர் மகிஷாசுரமர்த்தினி கோயில்,
மத்தூர்,
திருவள்ளூர் மாவட்டம் – 631206.
இறைவி:
மகிஷாசுரமர்த்தினி
அறிமுகம்:
இந்த மகிஷாசுரமர்த்தியின் ஆலயம் திருத்தணியில் இருந்து திருப்பதி போகும் மார்க்கத்தில் 7 கி.மீட்டரிலும், பொன்பாடி ரெயில் நிலையத்திற்கு மேற்கே இரண்டு கி.மீட்டரிலும் இருக்கிறது. இந்த அம்மன் மத்தூர் என்ற ஊரில்தான் உள்ளது.
புராண முக்கியத்துவம் :
அன்று யுகாந்த காலத்தில் மகிஷாசுரன் பிரம்ம தேவனிடம் ஏராளமான வரத்தைப் பெற்றுத் தேவர்களைத் துன்புறத்தி வந்தான். தான் எவராலும் கொல்லப்படக்கூடாது. ஆனால் ஒரு பெண்ணால் மட்டும் கொல்லப்பட வேண்டும் என வரம் கேட்டுப்பெற்றான். இவ்வாறு வரம் பெற்ற அவன் தேவர்களைத் துன்புறுத்தியதால் அவனை வதம் செய்ய மூம்மூர்த்திகளும் சேர்ந்து அம்மகிஷனைக் கொல்ல பேரொளி கொண்ட ஒரு பெண்ணைப் படைத்து அவளுக்குத் தங்கள் சக்தியை அளித்தனர். மற்ற தேவர்களும் தங்களது படைக்கருவிகளை அவளுக்குக் கொடுத்து உதவினர் என்பதை மார்க்கண்டேய புராணமும், துர்கா சப்தசதியும் கூறும். அவள் தான் மகிஷாசுரனைப் பின்னாளில் வதம் செய்து தேவர்களைக் காப்பாற்றினாள். அதனால் அவளுக்கு “மகிஷாசுர மர்த்தனி” என்ற பெயர் வழங்கலாயிற்று.
இந்த மகிஷாசுர மர்த்தினி தனது 8 கரங்களில் சங்கு, சக்கரம், வில் அம்பு, கத்தி, கேடயம், திரிசூலம் ஆகியவற்றை ஏந்தி ஏழு கபாலங்களுடன் மாலையையும் பூண்டு எட்டடி உயரமாகக் கம்பீர நிலையில் நின்று அருள் கடாட்சம் புரிவதைக் காணலாம். அன்னையின் வாகனமான சிம்மன் அந்த அசுரனைத் தாக்குவது போன்ற காட்சி உள்ளது. இவ்வம்பிகை புன் சிரிப்பு முகத்தில் தவழ ஈசான மூலையை நோக்கியபடி காட்சி தருகிறாள்.
1962-ம் ஆண்டு இந்த பகுதியில் அரக்கோணத்திற்கும் ரேணுகுண்டாவிற்கும் உள்ள ரெயில் தடத்தை அமைத்திட முயற்சித்த போது பணியாட்களில் சிலர் மூர்ச்சையாகிக் கீழே சாய்ந்தனர். அதன் பின்னரே மேட்டுப் பாங்கான அவ்விடத்தில் சென்றவர்கள் மயங்கி விழுந்திருக்கிறார்கள் என்பதை உணர்ந்த மத்தூர் மக்கள் அவ்விடத்திற்குச் “சக்திமேடு” என்று பெயரிட்டனர். மேலும் எவரும் அப்பக்கமாகச் செல்வதற்கும் பயங்கொண்டனர். மறுபடியும் கடவுளை வேண்டியபடியே சில ரெயில்வே பணியாளர்கள் அங்கு பாதை வெட்டினர். அப்பொழுது பள்ளம் தோண்டிய இடத்திலே மகிஷாசுரமர்த்தனியின் உருவச் சிலை குப்புறக் கவிழ்ந்து மண்ணால் மூடப்பட்டிருந்ததாம். மத்தூரில் உள்ள பக்தர்கள் அதை வெளியில் எடுத்து வந்து காஞ்சி ஆசார்யாளின் யோசனைப்படி அங்குக் கோவில் கட்டி அம்மனைப் பிரதிஷ்டை செய்தனராம். இங்கு சம்மமும், பலிபீடமும் உள்ளன. மேலும் இங்குள்ள வடபுறப்பிராகாரத்தில் உள்ள மரத்தில் திருமணம் நடக்க வேண்டியும், பிள்ளைவரம் வேண்டியும் விதவிதமாகக் கலர்த் துணிகளைக் கட்டிவைப்பதுண்டு. செவ்வாயன்று சிறப்பு வழிபாடு உண்டு. நவராத்திரி காலத்திலும், பங்குனியிலும் இவ்வம்மனுக்கு திருவிழா நடைபெறும்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மத்தூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
பொன்பாடி, திருத்தணி
அருகிலுள்ள விமான நிலையம்
சென்னை