மண்ணச்சநல்லூர் பூமிநாதசுவாமி சிவன்கோயில், திருச்சி
முகவரி :
மண்ணச்சநல்லூர் பூமிநாத சுவாமி சிவன்கோயில்,
மண்ணச்சநல்லூர், மண்ணச்சநல்லூர் வட்டம்,
திருச்சிராப்பள்ளி மாவட்டம் – 6 21005.
இறைவன்:
பூமிநாத சுவாமி
இறைவி:
தர்மசம்வர்த்தினி எனும் அறம் வளர்த்தநாயகி
அறிமுகம்:
பஞ்ச பூதங்களுக்கும் தலைவனான ஈசன் வீற்றிருந்தருளும் பஞ்சபூத தலங்களும் தமிழகத்தில் பல உண்டு. இதில் மண்ணுக்குரிய தலமாக காஞ்சியும், திருவாரூரும் கூறப்படும் அதே வேளையில் மண்ணுக்குரிய தலமாக திருச்சி அருகே ஒரு தலம் உள்ளது, அது தான் மண்ணச்சநல்லூர் பூமிநாதசுவாமி திருக்கோயில். மண் சம்பந்தப்பட்ட எல்லா பிரச்னைகளுக்கும் இங்கு வந்தால் தீர்வு உண்டு என்கிறார்கள். மண் அணைந்த நல்லூர் என்ற பெயர் மருவி மண்ணச்சநல்லூர் என்றானதாகக் கூறப்படுகிறது. இதனினும் சரியான காரணம் வேறாக இருக்கிறது. “அர்ச்ச” என்னும் சொல் பூஜை அல்லது வழிபாடு எனும் பொருள் தருகிறது. இதன் அடிப்படையில் மண் சம்பந்தமான பிரச்சனைகளுக்குக்காக வழிபாடு செய்யப்படுவதால் மண்-அர்ச்ச-நல்லூர் தற்போது மருவி மண்ணச்சநல்லூர் எனப்படுகிறது.
திருச்சியின் வடக்கில் உள்ள டோல்கேட்-ல் இருந்து ஏழு கிமீ தூரம் வடமேற்கில் பயணித்தால் பழைய கொள்ளிடத்தின் வடகரை தான் இந்த மண்ணச்சநல்லூர்.
புராண முக்கியத்துவம் :
அந்தகன் என்னும் அசுரன் இந்திராதிதேவர்களை தொல்லைப்படுத்தி வந்தான். தேவர்கள் யாவரும் செய்வதறியாது திகைத்து நின்றனர். அனைவரும் சிவபெருமானின் உதவியை நாடி நிற்க, இறைவன் அந்தகாசுரனை சூலத்தால் கொன்று அழித்த வேளையில் பெருமானின் நெற்றியிலிருந்து, பூமியில் விழுந்த வியர்வைத் துளியில் இருந்து பூதம் ஒன்று தோன்றியது.
அது தன் பசியைத் தணித்துக் கொள்ள யுத்த பூமியில் வீழ்ந்து கிடந்த உடல்களைத் தின்றது. அப்போதும் பசி தணியாததால் சிவபெருமானை நோக்கித் தவம் இருந்து, எல்லா உலகங்களையும் விழுங்கி அழிக்கும் திறன் வேண்டும், என கேட்டது. காரண காரியங்களை முன்னிட்டு இறைவன் இந்த வரத்தை அளிக்கிறார், பூதம் முதலில் பூமியை விழுங்க முற்பட்டது. தேவர்கள் அதனை குப்புறத் தள்ளி, மண்ணுக்குள் தலை மட்டும் புதைந்த நிலையில் பிடித்தனர். குறிப்பிட்டசில நாட்களில் நாங்களே உனக்கு அவி தருகிறோம், மற்ற நாட்களில் நீ கண்விழிக்க கூடாது என்கின்றனர்.
நீ எழும் நேரத்தில் மக்கள் மனை பூஜை செய்வர். அப்போது உனக்கு உணவும் அளிப்பர். அதற்கு நன்றிக்கடனாக, அவர்கள் எழுப்பும் வீடு, கட்டடங்களை நல்ல முறையில் எவ்வித குற்றம் குறையும் இல்லாமலும், தடையில்லாமலும் முடித்துத் தர வேண்டும்” என்றனர். பூதமும் சம்மதித்தது.
அச்சத்தைத் தரும் பூதத்தின் தோற்றத்தைக் கொண்டிருப்பதாலும், மண் தேவனாக வாஸ்து பிறந்த இடத்துக்கு மண்ணச்சநல்லூர் என்று பெயர் தோன்றியது என்கின்றனர்.
நம்பிக்கைகள்:
கட்டுமானத் தொழில், ரியல் எஸ்டேட், வேளாண்மை மற்றும் தோட்டத் தொழில் சிறக்க, கிணறு தோண்ட, வீடு வாங்க, விற்க, வாஸ்து தோஷம் நீங்க, சொத்து பாகப் பிரச்னைகள் தீர… என பூமி சம்பந்தமான குறைகள் நீங்க இது பரிகாரத் தலமாக விளங்கி வருகிறது. இதனால் பிரச்னைகள் தீர பக்தர்களும் இங்கு வந்து குவிகிறார்கள் என்பதும் உண்மை.
சிறப்பு அம்சங்கள்:
மண் சம்மந்தமான 16 விதமான தோஷங்களை விலக்கி நலம் அருள்பவர் என்று சொல்லப்படுகிறது.
இந்த ஆலயம் கீழ்திசை நோக்கி அமைந்துள்ளது. மூன்று நிலை ராஜகோபுரம் உள்ளது, இந்த ராஜகோபுரத்தின் நேர் எதிரில் ஒரு நூறடி தூரத்தில் இக்கோயிலை நோக்கி ஒரு அழகிய கருங்கல் முகமண்டபத்துடன் ஒரு விநாயகர் கோயில் உள்ளது. இங்கு இரட்டை விநாயகர்கள் கருவறையில் உள்ளனர். முதலில் இந்த விநாயகர்களை தரிசனம் செய்துவிட்டு சிவன்கோயில் செல்லவேண்டும்.
முகப்பு ராஜகோபுரம் தாண்டியதும் நீண்ட கருங்கல் மண்டபம் உள்ளது கொடிமர விநாயகர்கொடிமரம், பலிபீடம் நந்தி காணப்படுகிறது. கொடிமர வடக்கில் நவக்கிரகங்கள் உள்ளன. இங்கு ராகு – கேது கிரகங்கள் மனித உருவத்தில் அருள்பாலிப்பது அபூர்வம், அனைத்து கிரகங்களும் சூரியனை நோக்கியே உள்ளதும் சிறப்பு. மகாமண்டபம் வாயிலில் இரு பெரிய துவாரபாலகர்கள் நிற்கின்றனர். இந்த இடத்தின் வலது புறம் அம்பிகை அறம்வளர்த்தநாயகி தனி சன்னதியில் நின்ற கோலத்தில் தென் திசை நோக்கி அருள்கிறார். அம்பிகையின் முன்பு பெரியதொரு மகாமேரு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அம்பிகை சன்னதியினை ஒட்டி பள்ளியறையும், மேற்கு நோக்கிய பைரவர் மற்றும் சூரியன் சந்திரன் உள்ளனர்.
அர்த்த மண்டபத்தை அடுத்து உள்ள கருவறையில் பூமிநாதசுவாமி, லிங்கத் திருமேனியராக கீழ்திசை நோக்கி அருள்பாலிக்கிறார். சுயம்பு திருமேனி என்கின்றனர். இவரை வணங்கியே பூமாதேவி உலகத்தை தாங்கும் சக்தி பெற்றாள் என்பது புராண வரலாறு. பிரகார வலமாக வரும்போது கருவறை கோட்டங்களில் விநாயகர் தக்ஷணமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மன், துர்க்கை உள்ளனர். மேற்கில் நீண்ட திருமாளிகைபத்தி முகப்பு மண்டபத்துடன் உள்ளது அதில் முதலில் விநாயகர் அடுத்து காசி விஸ்வநாதர் விசாலாட்சி, வள்ளி தெய்வானை சமேத முருகன் அடுத்து கஜலட்சுமி ஆகியோர் சன்னதி கொண்டு உள்ளனர். கஜலட்சுமி சன்னதியின் உட்புறம் சரஸ்வதி, ஒரு ஆஞ்சநேயர் மூர்த்தங்களும் உள்ளனர்.
வடகிழக்கில் யாகசாலை மண்டபம் உள்ளது, கருவறை வடக்கில் வில்வம், வன்னி தல விருட்சமாக உள்ளன. இந்த மரத்தடியில் தான் தோஷ பரிகார மண் எடுத்தலும் மண் கொட்டுவதும் செய்கின்றனர்.
முருகனுக்கு மூன்று மயில்கள் உள்ளன. மாங்கனிக்காக உலகைச் சுற்றி வருவதற்கு உதவிய மயில் மந்திர மயில் என்றும், சூரசம்ஹாரத்தின் போது இந்திரன் மயிலாக உருமாறி முருகனைத் தாங்கினான். இது தேவ மயில். பின் சூரனை இரு கூறாக்கியதில் வந்த மயில் தான் அசுர மயில். இங்குள்ள முருகன் கருவறையில் அசுர மயிலோடும், உற்சவர் தேவ மயிலோடும் அருள்பாலிக்கின்றனர். இதுவும் ஒரு சிறப்பு. பங்குனி 9, 10, 11 ஆகிய மூன்று நாட்கள் இறைவன் மீது காலை நேர சூரிய கதிர்கள் விழுகின்றன.
காலம்
1300 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மண்ணச்சநல்லூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருச்சி
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி