மணிமங்கலம் ராஜகோபாலசுவாமி திருக்கோயில், காஞ்சிபுரம்
முகவரி
அருள்மிகு ராஜகோபாலசுவாமி திருக்கோயில், மணிமங்கலம், காஞ்சிபுரம் மாவட்டம் – 602 301. போன்: +91- 98413 63991.
இறைவன்
இறைவன்: ராஜகோபாலசுவாமி இறைவி: செங்கமலவல்லி
அறிமுகம்
தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மணிமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள ராஜகோபாலசுவாமி கோயில் விஷ்ணுவுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மணிமங்கலத்தில் உள்ள இந்த 1000 ஆண்டுகள் பழமையான ராஜகோபாலசுவாமி கோவில், தாம்பரத்திற்கு மேற்கே சுமார் 12 கிமீ தொலைவில், 1 ¼ ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது, இது சோழர் காலத்திலிருந்தே கட்டப்பட்டு, செழுமையான கல்வெட்டுகள் நிறைந்த கோவிலின் மகிமையை நமக்கு வழங்குகிறது. முதலாம் குலோத்துங்க, விக்ரம சோழ தேவா மற்றும் இராஜராஜா உள்ளிட்ட சோழ ஆட்சியாளர்கள் கோயிலின் பராமரிப்பில் பெரும் பங்களிப்பை வழங்கினர், ஆனால் கோயில் இப்போது கவனத்தை ஈர்க்கிறது. இக்கோயில் ஒருவரின் கண் பார்வையைப் பெறுவதற்கான பரிகார ஸ்தலமாகும். மணிமங்கலம் ஸ்ரீ ராமானுஜரின் பிறந்த ஊர். இந்த பழமையான கோவிலின் முதன்மைக் கடவுள் ஸ்ரீ ராஜகோபாலர், கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில், அவரது துணைவியார் ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் காட்சியளிக்கிறார். செங்கமலவல்லி தாயாருக்கு தனி சன்னதி உள்ளது. இங்குள்ள தெய்வத்தின் தனிச்சிறப்பு என்னவென்றால், அவர் தனது வலது கையில் சங்கு மற்றும் இடது கையில் சுதர்சன சக்கரத்தை ஏந்தியிருக்கிறார். இக்கோயில் மணிமங்கலம் பேருந்து நிறுத்தம் அருகே அமைந்துள்ளது.
புராண முக்கியத்துவம்
கிருஷ்ணராக அவதரித்த மகாவிஷ்ணு, குருக்ஷேத்ர போரின்போது, அர்ஜுனனுக்கு தேரோட்டியாக இருந்தார்.போரில் ஆயுதங்களை பயன்படுத்த மாட்டேன் என உறுதி பூண்டிருந்த அவர், போர் அறிவிப்பிற்காக, சங்கு மட்டும் வைத்துக்கொண்டார். அவரது சங்கின் ஒலியைக் கேட்டதுமே, எதிரிப்படையினர் அஞ்சி நடுங்கினர். இவ்வாறு கிருஷ்ணர் குருக்ஷேத்ர போரின்போது, வலது கையில் சங்கு வைத்து ஊதியதன் அடிப்படையில் இங்கு மகாவிஷ்ணு, வலது கையில் சங்கு வைத்தபடி காட்சி தருகிறார்.வலது கையில் இருக்க வேண்டிய சக்கரம், இடது கையில் இருக்கிறது. கிருஷ்ணாவதாரத்தில் இடையனாக இருந்து, பசுக்களை மேய்த்ததால் இவர், “ராஜகோபாலர்’ என்று பெயர் பெற்றார்.
நம்பிக்கைகள்
கண்நோய் நீங்கவும், கால்நடைகள் நோயின்றி வாழவும் இங்கு அதிகளவில் வேண்டிக்கொள்கிறார்கள்.
சிறப்பு அம்சங்கள்
சிவன் சன்னதிகளில்தான், கோஷ்டத்தில் விநாயகர் இருப்பார். ஆனால், இக்கோயிலில் பெருமாள் சன்னதி கோஷ்டத்தில் விநாயகர் இருக்கிறார். மேலும் கோஷ்டத்தில் ஒரு கையில் தண்டம், மற்றோர் கையில் பிரயோக சக்கரத்துடன் காட்சி தரும் இரண்டு பெருமாள்களையும் தரிசிக் கலாம்.வடக்கு கோஷ்டத்தில் வலது காலை மடக்கி அமர்ந்து, இடது கையை தரையில் ஊன்றியபடி, பிரயோகச் சக்கரத்துடன் பரமபதநாதர் காட்சி தருகிறார். இவரிடம் வேண்டிக்கொள்ள மோட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.கால்நடைகள் நோயின்றி வாழவும், பசுக்கள் நன்கு பால் சுரக்கவும், ராஜகோபாலருக்கு துளசி மாலை அணிவித்து வேண்டிக்கொள்கிறார்கள். புரட்டாசி சனிக்கிழமை, வைகுண்ட ஏகாதசி நாட்களில் இவருக்கு விசேஷ பூஜை மற்றும் அலங்காரம் செய்யப்படுகிறது. காவியுடை ஆஞ்சநேயர்: ராஜகோபாலர் கோயிலுக்கு எதிரே சற்று தூரத்தில் ஆஞ்சநேயர், தனிக்கோயிலில் இருக்கிறார். இரு கைகளையும் கூப்பி வணங்கியபடி இருக்கும் இவர், கையில் கதாயுதம் இல்லாமல், “அஞ்சலி வரத ஆஞ்சநேயராக’ காட்சி தருகிறார்.ஆஞ்சநேயர் பிரம்மச்சாரி தெய்வம் என்பதால், இவருக்கு காவியுடையை பிரதானமாக அணிவித்து அலங்காரம் செய்யப்படுவதுசிறப்பு. ஆஞ்ச நேயரின் மார்பில் ராமபிரான், எப்போதும் வாசம் செய்து கொண்டிருப்பதாக ஐதீகம். எனவே, ஆஞ்சநேயர் ராமபிரானை வணங்கும் விதமாக கைகளை மார்பில் குவித்து, இரு கட்டை விரல்களையும் மார்பில் வைத்தபடி காட்சி தருகிறார். இவரிடம் வேண்டிக்கொள்ள மன தைரியம் உண்டாகும், குரு மீதான மரியாதை அதிகரிக்கும்.இவர் தவிர, கோயில் முன்மண்டபத்தில் ஒரு கல்லில் புடைப்புச் சிற்பமாக, ஆஞ்சநேயர் கையில் கதாயுதத்துடன் காட்சி தருகிறார்.
திருவிழாக்கள்
வைகுண்ட ஏகாதசி, புரட்டாசி சனிக்கிழமைகள்
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத்துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மணிமங்கலம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
தாம்பரம்
அருகிலுள்ள விமான நிலையம்
சென்னை