மகிமாலை சந்திரமௌலீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
முகவரி :
மகிமாலை சந்திரமௌலீஸ்வரர் திருக்கோயில்,
மகிமாலை,
தஞ்சாவூர் மாவட்டம் – 614401.
இறைவன்:
சந்திரமௌலீஸ்வரர்
இறைவி:
அன்னபூரணி
அறிமுகம்:
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மகிமாலை என்னும் கிராமத்தில் சந்திரமௌலீஸ்வரர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார் ஈசன். கைரேகை ஜோதிடத்தில் சந்திர மேடு என்பது முக்கிய அம்சமாகும். நம் உள்ளங்கையில் சந்திர மேடு இருப்பதுப்போல் இந்த உலகத்தின் சந்திர மேட்டு தலமாக மகிமாலை இருப்பது என்றும், இங்கே வந்து மூன்றாம் பிறையைத் தரிசிப்பதன் மூலம் சிவபெருமானை நேரடியாக தரிசிப்பதற்கு ஒப்பாகும் எனவும் சொல்கிறார்கள்.
புராண முக்கியத்துவம் :
ஒருமுறை சிவபெருமான் கைலாயத்தில் வீற்றீருந்தார். அப்போது அம்பிகை சிவபெருமானின் கண்களை விளையாட்டாக மூடியதால் உடனே உலகம் இருண்டது. பஞ்சபூதங்கள் உயிரினங்கள் என அனைத்து இயக்கங்களும் நின்று போய்விட்டன. விளைவுகளைக் கண்டு திகைத்துப் போய் கைகளை எடுத்துக் கொண்டாள். மீண்டும் எல்லாம் வழக்கம்போல இயங்கத் தொடங்கின. எல்லாம் பரம் பொருளின் இயக்கம் என்பதை இச்சம்பவம் உணர்த்துகிறது. ஆனாலும் உலகம் இப்படி ஆனதற்கு காரணம் ஆகி விட்டதால் அம்பிகை ஈஸ்வரனை பூஜிக்க தீர்மானித்து பூவுலகம் வந்தாள். அம்பிகை மனித ரூபத்தில் தோன்றி ஓரிடத்தில் பக்தர்கள் அனைவரையும் திரட்டி அன்னபூரணியாக உணவளித்து வந்தாள்.
இந்நிலையில் உலகத்தை மீண்டும் இருள் சூழாது இருக்க இறைவனிடம் தீர்வு கேட்க விரும்பினால் அம்பிகை. அப்போது அகத்திய மாமுனி ஒரு மேட்டின் அருகே தவம் புரிந்து கொண்டிருப்பதை பார்த்தாள். அதுதான் இந்த மகிமாலை சந்திர மேடு. உடனே அங்குச் சென்று அகத்தியரிடம் நடந்ததை விவரித்தார். ஆனால் அவரோ பிரபஞ்சம் இருண்டதா? எனக்கு தெரியாதே என்றார். சர்வகோடி மாமுனிகளும், யோகியரும், ஞானியரும் இந்த உலகத்தின் அத்தனை குடிமக்களும் உலகம் இருளடைந்தது உணர்ந்திருக்க அகத்திய மாமுனிவர் மட்டும் எப்படி இதே முடியாமல் இருந்தார் என்று அம்பிகைக்கு சந்தேகம் எழுந்தது. அப்போது அகத்திய முனிவரின் அருகே சந்திர மேட்டில் சுயம்பு லிங்கம் ஒன்று தலையில் பிரகாசமான பிறைசூடிக் கொண்டு தோன்றுகிறார் என்றால், இனி பிரபஞ்சத்தில் ஒரு போதும் இருள் சூழாது என்றார். அகத்தியர் தலைமையில் அங்குள்ள மக்களும் சுயம்பு லிங்கத்தை வழிபட்டனர். பிற்காலத்தில் இங்கு கோயில் கட்டப்பட்டது.
நம்பிக்கைகள்:
இத்தலம் மூன்றாம் பிறை தரிசனத்திற்கு பெயர் பெற்றது. மூன்றாம் பிறை தரிசனத்தால் முற்பிறவி பாவம் விலகும். பெண்களுக்கு மாங்கல்ய பலம் ஏற்படும். சக்தி அதிகரிக்கும். மனக்குழப்பம் நீங்கும். கண்பார்வை தெளிவாகும். செல்வங்கள் சேரும். பிரம்மஹத்தி போன்ற தோஷங்கள் நீங்கும். அதுவும் சனிக்கிழமை அன்று வரும் மூன்றாம் பிறையை பார்த்து விட்டால் வருடம் முழுக்க சந்திரனை வணங்கிய பலன்கள் எல்லாம் கிடைக்கும். சந்திரமௌலீஸ்வரர் இவரை வழிபட்டால் சந்திரனால் ஏற்பட்ட சகல தோஷங்களும் நிவர்த்தி ஆகிறதாம்
சிறப்பு அம்சங்கள்:
ஆலயத்தின் உள்ளே நுழைந்ததும் முகப்பு மண்டபத்தில் சிவபெருமான் பார்வதி கைலாய காட்சி சுதை சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. மகாமண்டபத்தில் நந்தி பெருமான் வீற்றிருக்கிறார். அர்த்த மண்டபத்திற்கு வெளியே விநாயகரும், வலதுபுறம் முருகனும் அருள்புரிகிறார்கள். முருகன் சன்னதியும் அமைந்துள்ளது. அர்த்த மண்டபத்தை அடுத்து கருவறையில் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். மகாமண்டபத்தில் தெற்கு நோக்கி வீற்றிருக்கிறாள் அன்னபூரணி. கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, துர்க்கை அம்மனையும், சண்டிகேஸ்வரர் தரிசிக்கலாம். பிரகாரத்தில் வள்ளி தெய்வானை சமதே சுப்பிரமணியர், மகாலட்சுமி, நவகிரகம், பைரவர், சந்திரன், சூரியனுக்கு தனித்தனி சன்னதிகள் அமைந்துள்ளன.
இத்தலத்தில் மூன்றாம் பிறை வடிவில் சுதை சிற்பத்தை நிறுவியிருக்கிறார்கள். அதன் மீதுள்ள கை போன்ற பகுதியில் நம் இரு கைகளையும் வைத்து வானத்திலுள்ள மூன்றாம் பிறையை தரிசிப்பது மிகவும் விசேஷமானது. எனவே மூன்றாம் பிறை கிண்ணங்களில் மாலையில் அதற்கான பூஜைகள் ஆரம்பமாகும். ஆலய வளாகத்தில் பசும்பாலை காய்ச்சி பனகற்கண்டு, முந்திரி, ஏலக்காய், திராட்சை சேர்த்து இறைவன் இறைவி மற்றும் வானில் தரிசனம் தரும் மூன்றாம் பிறைச் சந்திர மூர்த்திக்கு படைத்து பக்தர்களுக்கு வழங்குகிறார்கள்.
திருவிழாக்கள்:
வருடம் முழுவதும் திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன. மகாசிவராத்திரி விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த சதுர்த்தி, சஷ்டி பூஜை, அஷ்டமியில் பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. அம்பாள் அன்னபூரணி ஆக இருப்பதால் ஐப்பசி அன்னாபிஷேகம் இங்கே மிக விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
காலம்
1500 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மகிமாலை
அருகிலுள்ள இரயில் நிலையம்
தஞ்சாவூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி