Thursday Dec 26, 2024

பொன்விளைந்த களத்தூர் முன்குடுமீஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்

முகவரி

அருள்மிகு முன்குடுமீஸ்வரர் திருக்கோயில், பி.வி.களத்தூர் (பொன்விளைந்த களத்தூர்), காஞ்சிபுரம் மாவட்டம் – 603 405. போன்: +91- 97890 49704, +91- 99624 67355.

இறைவன்

இறைவன்: முன்குடுமீஸ்வரர் இறைவி: மீனாட்சி

அறிமுகம்

தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செங்கல்பட்டிலிருந்து 10 கி.மீ தொலைவில் பொன்விளைந்த களத்தூரில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட முன்குடுமீஸ்வரர் கோயில் உள்ளது. சிவலிங்கத்தின் தலைப் பகுதியில் உள்ள குடுமி சிறப்பு வாய்ந்தது. பிரம்மோற்சவத்தின் போது சண்டிகேஸ்வரர் தலத்தில் கூற்றுவ நாயனார் ஊர்வலமாக வருகிறார். பொன் விளைந்த களத்தூர் என்பது சென்னையிலிருந்து 60 கிமீ தொலைவிலும், செங்கல்பட்டில் இருந்து 8 கிமீ தொலைவிலும் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமமாகும். பழங்காலத்தில் வயல்களில் தங்கம் அறுவடை செய்யப்பட்டதால் இந்த கிராமம் இப்பெயர் பெற்றதாக கூறப்படுகிறது. தற்போது இந்த கிராமத்தின் பெயர் பி.வி.களத்தூர் என சுருக்கப்பட்டுள்ளது. நள வெண்பாவை எழுதிய பெரும் புலவர் புகழேந்திப் புலவர் இங்கு பிறந்தார். 63 நாயன்மார்களில் ஒருவரான ஸ்ரீ கூற்றுவ நாயனார் இந்த கிராமத்தில் வாழ்ந்ததாக கூறப்படுகிறது.

புராண முக்கியத்துவம்

இப்பகுதியை ஆண்ட சோழ மன்னன் ஒருவனுக்கு குழந்தை பாக்கியம் இல்லை. அப்பாக்கியம் வேண்டி சிவனுக்கு 108 கோயில்கள் கட்டி கும்பாபிஷேகம் செய்தான். அவ்வாறு கட்டிய கோயில்களில் இதுவும் ஒன்று. ஒருசமயம் மன்னன் இக்கோயிலுக்கு சுவாமியைத் தரிசிக்க வந்தான். அவ்வேளையில் பூஜையை முடித்த அர்ச்சகர், சுவாமிக்கு அணிவித்த மாலையை வீட்டிற்கு எடுத்துச் சென்று விட்டார். மன்னர் வந்திருப்பதை அறிந்த அர்ச்சகர், மனைவிக்கு சூடிய மாலையை கோயிலுக்கு எடுத்து வந்தார். சிவனுக்கு அணிவித்த மாலை எனச் சொல்லி அதை மன்னனுக்கு அணிவித்தார். மன்னர் மாலையில் முடி இருந்த காரணத்தைக் கேட்டார். அர்ச்சகர் அவரிடம் “லிங்கத்தின் சடாமுடியில் இருந்த முடியே அது!’ என பொய் சொல்லிவிட்டார். மன்னன் தனக்கு சிவனிடம் முடியைக் காட்டும்படி கூறினான். அர்ச்சகர் மறுநாள் காட்டுவதாகச் சொல்லிவிட்டார். மன்னன் மறுநாள் தனக்கு அந்த தரிசனம் கிடைக்காவிட்டால், அர்ச்சகருக்கு கடும் தண்டனை கொடுக்க நேரிடும் என எச்சரித்துச் சென்றான். கலங்கிய அர்ச்சகர் அன்றிரவில் சிவனை வேண்டினார். மறுநாள் மன்னர் வந்தார். அர்ச்சகர் பயத்துடனே சிவலிங்கத்தின் முன்பு தீபாராதனை காட்டினார். என்ன ஆச்சர்யம்! சிவலிங்க பாணத்தின் முன் பகுதியில் கொத்தாக முடி இருந்தது. மன்னனும் மகிழ்ந்தான். இவ்வாறு அர்ச்சகருக்காக குடுமியுடன் காட்சி தந்ததால் இவர், “முன்குடுமீஸ்வரர்’ என்று பெயர் பெற்றார்.

நம்பிக்கைகள்

பிறரால் ஏமாற்றப்பட்டவர்கள், மன ஆறுதல் கிடைக்க இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.

சிறப்பு அம்சங்கள்

இங்கு சிவனுக்கு சேவை செய்த பக்தர் ஒருவர், அந்தணர் ஒருவரிடம் பணியாற்றினார். அந்தணர் அவருக்கு சம்பளமாக தன்னிடமிருந்த நிலத்தின் ஒரு பகுதியைக் கொடுத்தார். பணியாளர் தனது நிலத்தையும், அந்தணரின் நிலத்தையும் பராமரித்து வந்தார். ஒருசமயம் பணியாளருக்கு கொடுத்த நிலத்தில், குறிப்பிட்ட நேரத்தில் விதைக்கும் நெல், பொன்னாக விளையும் என்பதை அந்தணர் அறிந்தார். இதற்காக அவர் ஒரு தந்திரம் செய்தார். பணியாளனிடம் தனது வயலில் விளையும் மொத்த நெல்லையும் எடுத்துக் கொள்ளும்படியும், தனக்கு அவனது வயலில் விளையும் குறைவான நெல் போதுமென்றும் கூறினார். பணியாளனும் ஒப்புக்கொண்டு அவரது நெல்லை எடுத்துக் கொண்டான். பணியாளனின் வயலில் பொன் கதிர்கள் விளைந்தபோது, அந்தணர் அதை எடுத்துக் கொண்டார். விஷயம் தெரியாத பணியாளனும் அதை கண்டுகொள்ளவில்லை. இதைக் கண்ட மக்கள், அந்தணரிடம் பணியாளனுக்கும் அதில் ஒரு பங்கு கொடுக்கும்படி கேட்டனர். அவர் மறுத்துவிட்டார். இவ்விஷயம் மன்னனுக்குச் சென்றது. அவன், அங்கு விளைந்த நெற்கதிர்களை அரசுக்கணக்கில் எடுத்துக் கொண்டான். பணியாளனை ஏமாற்ற எண்ணிய அந்தணர், தனக்கு நியாயமாக கிடைக்கவேண்டிய நெல்லையும் இழந்தார். சிவனின் அருளால் பணியாளர் அதிக நெல் கிடைக்கப்பெற்றார். இவ்வாறு பொன் நெல் விளைந்ததால் ஊர், “பொன்விளைந்த களத்தூர்’ என்று பெயர் பெற்றது. கூற்றுவநாயனார் சிறப்பு: இத்தலத்து சிவலிங்க பாணத்தின் உச்சியில் குடுமி போன்ற தோற்றம் உள்ளது சிறப்பான அமைப்பு. கோயில் முன் மண்டபத்தில் கூற்றுவ நாயனார் இருக்கிறார். சிவனால், மணிமகுடம் சூட்டப்பட்ட கூற்றுவ நாயனார், பல சிவன் கோயில்களுக்கு திருப்பணி செய்து வழிபட்டார். அதில் இத்தலமும் ஒன்று. ஆடி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் இவருக்கு குருபூஜை நடக்கும். அப்போது இவருக்கு விசேஷ அபிஷேகம் செய்யப்பட்டு, புறப்படுவார். கோயில்களில் விசேஷ காலங்களில் சுவாமி, அம்பாள், விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் என பஞ்ச மூர்த்திகள் உலா செல்வர். ஆனால், இங்கு பங்குனி பிரம்மோற்ஸவத்தின்போது சண்டிகேஸ்வரருக்குப் பதிலாக, கூற்றுவநாயனார் புறப்பாடாகிறார். இவ்விழாவின்போது, சுவாமி கூற்றுவநாயனாருக்கு காட்சி தரும் வைபவமும் நடக்கும். தஞ்சாவூர் அரண்மனையில் அரசவைப்புலவராக இருந்த புகழேந்தியும் இவ்வூரில் பிறந்தவர்.

திருவிழாக்கள்

பங்குனியில் பிரம்மோற்ஸவம், சித்ராபவுர்ணமி, ஆடிப்பூரம், ஐப்பசியில் அன்னாபிஷேகம், நவராத்திரி, கந்தசஷ்டி, திருக்கார்த்திகை, மார்கழி திருவாதிரை, சிவராத்திரி.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

பொன்விளைந்த களத்தூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

ஒட்டிவாக்கம்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top