Friday Dec 27, 2024

புஞ்சை (திருநனிபள்ளி) நற்றுணையப்பர் திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி

அருள்மிகு நற்றுறணையப்பர் திருக்கோயில், புஞ்சை (திருநனிபள்ளி), கிடாரங்கொண்டான் போஸ்ட- 609 304 நாகை மாவட்டம். போன்: +91- 4364 – 283 188

இறைவன்

இறைவன்:நற்றுணையப்பர் இறைவி: பர்வத இராஜ புத்திரி

அறிமுகம்

புஞ்சை நற்றுணையப்பர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் ஒன்றாகும். இத்தலம் நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்காவில் உள்ளது. பொன்செய் கிராமத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. முன்னொரு காலத்தில் சோழர்கள் ஆண்ட தஞ்சை தரணியின் ஒரு பகுதியாகும். கிழக்கு நோக்கி அமைந்துள்ள, ராஜகோபுரம் இல்லாத, கோயில். விநாயகர், பலிபீடம், நந்தி மண்டபத்தை அடுத்துள்ள வாயிலைக் கடந்து உள்ளே செல்லும்போது வலப்புறத்தில் மேற்கு நோக்கிய நிலையில் மலையான்மடந்தை அம்மன் சன்னதி உள்ளது. மூலவர் சன்னதிக்கு முன்பாக இடப்புறம் பருதவராஜபுத்திரி சன்னதி உள்ளது. உள்ளே கருவறையில் மூலவர் நற்றுணை ஈஸ்வரர் உள்ளார். மூலவர் சன்னதிக்கு முன் இருபுறங்களிலும் துவாரபாலகர்கள் உள்ளனர். மூலவர் கோஷ்டத்தில் அகத்தியர், விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். திருச்சுற்றில் கல்யாணசுந்தரேஸ்வரர் சன்னதி, விநாயகர் சன்னதி, வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர் சன்னதி, சண்டிகேஸ்வரர் சன்னதி ஆகிய சன்னதிகள் உள்ளன. அகத்தியருக்கு இறைவன் திருமணக்கோலம் காட்டிய தலம். புள்ளமங்கை கோயிலில் உள்ளது போல கருவறையைச் சுற்றி மிகச்சிறிய சிற்பங்களைக் கொண்ட பெருமையுடையது இக்கோயிலாகும்.

புராண முக்கியத்துவம்

திருஞானசம்பந்தரின் தாயார் பகவதியம்மையார் பிறந்த தலம். சம்பந்தர் தன் தந்தையின் தோள் மீது அமர்ந்து இத்தலத்தை பாடியுள்ளார். அடியார்களின் வேண்டுகோளுக்கிணங்க பாலையாயிருந்த இத்தலத்தை நெய்தலாக பாடினார். கோயில் மூலஸ்தானமும், கோயில் மண்டபங்களும் சிறந்த சிற்ப வேலைப்பாடுடன் அமைந்துள்ளது. அத்துடன் “நனிபள்ளி கோடி வட்டம்’ என்ற மண்டபம் மிகவும் அருமையாக கோயில் சுற்றுப்பகுதியில் பிரமாண்டமான தெட்சிணாமூர்த்தி, சுப்பிரமணியர், பிரம்மா, லிங்கோத்பவர், மனைவியுடன் சண்டிகேஸ்வரர் உள்ளனர். அமைக்கப்பட்டுள்ளது. ராஜராஜசோழனின் மூதாதையர் பராந்தக சோழனால் இத்தலம் கட்டப்பட்டது.

நம்பிக்கைகள்

திருமணத்தில் தடை உள்ளவர்கள் இங்குள்ள கல்யாணசுந்தரரை வணங்கினால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பதும், நற்றுணையப்பரை வணங்கினால் செல்வ செழிப்பு, குழந்தைகளின் படிப்பு சிறக்கும் என்பதும் நம்பிக்கை.

சிறப்பு அம்சங்கள்

இத்தலத்து இறைவன் சுயம்பு லிங்கம் அருள்பாலிக்கிறார். ஆண்டு தோறும் சித்திரை 7 – 13 வரை சூரியனின் கதிர்கள் சிவலிங்கத்தின் மீது படுகிறது.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 106 வது தேவாரத்தலம் ஆகும். மூலஸ்தானத்திற்கே யானை வந்து வழிபட்ட தலம் என்பதால் இத்தலத்தின் கருவறை மிகவும் பெரியதாக அமைந்துள்ளது. இங்கு பர்வதராஜபுத்திரி, மலையான்மடந்தை என்ற திருநாமத்தில் இரண்டு அம்மன் அருள்பாலிக்கின்றனர். விநாயகர், அகத்தியர் இருவருக்குமே சிவபெருமான் தனது திருமண கோலத்தை காட்டியருளிய தலம். எனவே இங்கு சுவாமியின் வலது பக்கம் அம்மன் வீற்றிருக்கிறார். இது தவிர தனி சன்னதியில் மூலஸ்தானத்திலேயே அம்மனுடன் கல்யாணசுந்தரேஸ்வரர் அருளுகிறார். காவிரிநதி இங்கு வந்து கிழக்கு முகமாக வந்து மேற்கு முகமாக திரும்பி செல்கிறது. இதனை பஸ்வமாங்கினி என்பர். அகத்தியரின் கமண்டலத்திலிருந்த தீர்த்தத்தை விநாயகர் தட்டி விட்டதால் அவருக்கு தோஷம் ஏற்படுகிறது. இந்த தோஷம் நீங்க விநாயகர் இங்குள்ள குளத்தில் நீராடி வழிபாடு செய்துள்ளார். இதனால் இத்தலம் “பொன்செய்’ ஆனது. இதுவே காலப்போக்கில் மருவி “புஞ்சை’ ஆனது. பெரும்பாலான கோயில்களில் எருமைத்தலையின் மீது நின்ற கோலத்தில் அருளும் துர்க்கை, இத்தலத்தில் கையில் மான் மற்றும் சிங்கத்துடனும், சும்பன், நிசும்பனை சம்ஹாரம் செய்த கோலத்திலும் அருளுகிறார்.

திருவிழாக்கள்

ஆண்டு தோறும் சித்திரை 7 – 13 வரை சூரிய பூஜை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பிரதோஷம் மற்றும் சிவனுக்குரிய அனைத்து வழிபாடுகளும் செய்யப்படுகிறது.

காலம்

1000 -2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

புஞ்சை

அருகிலுள்ள இரயில் நிலையம்

மயிலாடுதுறை

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top