Friday Dec 27, 2024

பாதாள புவனேஷ்வர் கோவில், உத்தரகாண்டம்

முகவரி

பாதாள புவனேஷ்வர் கோவில், குமா ஊன், கங்கோலிஹாட், பித்தோராகர் மாவட்டம், உத்தரகாண்டம் – 262522.

இறைவன்

இறைவன்: பாதாள புவனேஷ்வர்

அறிமுகம்

பாதாள புவனேஷ்வர் கோவில், டெல்லியில் இருந்து 506 கிலோமீட்டர் தூரத்தில், கடல் மட்டத்தில் இருந்து 1350 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. பாதாள புவனேஷ்வர் கோவில், பித்தோராகர் மாவட்டம் கங்கோலிஹாட்டில் இருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது குமா ஊன் என்ற பகுதி. நெடிந்துயர்ந்த மலை, சுற்றிலும் பாய்ந்தோடிச் செல்லும் நதி, அடர்ந்த மரங்கள் நிறைந்த இடம் என இயற்கை எழில் சூழ்ந்த சோலையில் இந்தக் கோவில் அமைந்துள்ளது. பாதாள புவனேஷ்வர் வீற்றிருந்து அருள்புரியும் இடம், சுண்ணாம்பு குகை ஆகும். பல்வேறு குகைகள் வழி நீள்கிறது இந்த கோயில். இந்தக் குகை 100 அடி ஆழமும், 160 அடி நீளமும் கொண்டது. இந்த பாதாள உலகத்திற்கு செல்லும் வழியைப் பற்றி கந்த புராணத்தில் முன்னரே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆன்மீகத் தேடலின் எல்லையற்ற பரம்பொருளின் இருப்பை யார் ஒருத்தர் உணர வேண்டும் என்று நினைக்கிறார்களோ, அவர்கள் சரையூ, ராம் கங்கா, குப்த கங்கா கரையில் இருக்கும் பாதாளபுவனேஸ்வர் கோயிலுக்கு வருமாறு கந்த புராணத்தில் கூறப்பட்டுள்ளது. இந்தக் குகையில் சிவபெருமானுடன் முப்பத்து முக்கோடி தேவர்களும் வீற்றியிருந்து அருள்பாலிப்பதாக ஐதீகம். சூரிய வம்சத்தை சேர்ந்த ரித்து பர்னா எனும் அரசன்தான் இந்த குகைகளையும், கோயில்களையும் கண்டறிந்துள்ளார். சுரங்கப் பாதை பாதாள புவனேஸ்வர் குகைக்கும் சிவபெருமானின் கைலாயத்துக்கும் இணைக்கும் வகையில் ஒரு சுரங்கப்பாதை இருப்பதாக நம்பப்படுகிறது. அதற்கான வழியும் கண்டறியப்பட்டுள்ளது. உயிர் போகும் அபாயம் ஆனால் இந்த குகைகள் வழியே சென்று கைலாயத்தை அடைவது மிகவும் சிரமம். இதனால் உயிரிழப்புகளும் ஏற்படக்கூடும் எனக்கூறி இந்த சுரங்கத்தை அடைத்துவிட்டனராம். இந்த பாதாள குகைகளுக்குள் இன்னும் கண்டறியப்படாத பல ஆச்சர்யங்கள் இருக்கிறது. அது மிகவும் அபாயகரமானதாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

புராண முக்கியத்துவம்

பிரசித்திப்பெற்ற ஒவ்வொரு கோவிலுக்கும் தலபுராணம் இருப்பதைப் போன்று, இந்தக் கோவிலுக்கும் ஒரு தல புராணம் சொல்லப்படுகிறது. அது விநாயகப்பெருமானின் பிறப்போடு தொடர்புடையாக இருக்கிறது. இந்து மதத்தின்படி கால சுழற்சி, ஒரு யுகமாக அளவிடப்படுகிறது. ஒரு மகா யுகம் என்பது கிருதயுகம், திரேதாயுகம், துவாபர யுகம், கலியுகம் என்று நான்கு கூறுகளைக் கொண்டுள்ளது. மகாபாரதத்தில் குருஷேத்தர யுத்தம் முடிவடைந்த பின்னர் கலியுகம் தொடங்கி நடந்து கொண்டிருக்கிறது. திரேதா யுகத்தில் ரிதுபர்ணன் என்ற மன்னன், முதலில் பாதாள புவனேஷ்வர் குகைக் கோவிலை கண்டுபிடித்து வழிபடச் சென்றார். அப்போது நாகர்களின் ராஜாவான ஆதிசேஷனை அவர் சந்தித்தார். ஆதிசேஷன், ரிதுபர்ணனை குகையை சுற்றி அழைத்துச் சென்றார். அங்கு ரிதுபர்ணன் வெவ்வேறு கடவுள்களையும் பிரமிக்க வைக்கும் காட்சியையும் கண்டார். சிவபெருமானையும் தரிசித்தார். அதன் பின்னர் துவாபார யுகத்தின் போது பாண்டவர்கள் சிவ பெருமானை இங்கு பிரார்த்தனை செய்தார்கள். கலியுகத்தில் வாழ்ந்த ஆதிசங்கரர் இங்கு வந்து லிங்கத்திற்கு செப்பிலான காப்பு வைத்து பூஜை செய்தார். இந்த குகைக்கு நான்கு கதவுகள் இருந்ததாகவும், அதில் இரண்டு கடந்த யுகத்தில் மூடப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. படிகளின் நடுவே நரசிம்மரின் உருவம் பிரமாண்டமாக காட்சி யளிக்கிறது. கீழே இறங்கியவுடன் முதலில் தெரிவது ஆதிஷேசன். அவர் பூமியை தாங்கி பிடித்திருப்பது போன்ற காட்சி பிரமிக்கவைக்கிறது. அதைத் தாண்டி உள்ளே சென்றால் ஒரு யாக குண்டம் தென்படுகிறது. இங்குதான் ஜனமேஜயன், தன் தந்தை பரீஷித்து மகாராஜாவின் மரணத்துக்கு பழி வாங்குவதற்காக உல்லாங்க முனிவரின் கூற்றுப்படி, சர்ப்ப யாகம் செய்ததாக சொல்லப்படுகிறது. பத்ரிநாத், கேதார்நாத், அமர்நாத் லிங்க வடிவங்கள், இங்கும் தத்ரூபமாக காட்சிபடுத்தப்பட்டுள்ளன. காலபைரவர் நாக்கை நீட்டிக்கொண்டு உக்ரமான தோற்றத்தில் காட்சி தருகிறார். சிவன் தன் சடாமுடியை அவிழ்த்து விட்டது போல், விழுதுகள் காணப்படுகின்றன. அதில் இருந்து தண்ணீர் கொட்டிக் கொண்டிருக்கிறது. மேற்பகுதியில் பாரிஜாதப் பூ காணப்படுகிறது. அது தேவலோகத்தை நினைவுபடுத்துவதாக இருக்கிறது. காமதேனு பசுவின் மடி காம்பில் இருந்து பால் சுரப்பது போன்ற அமைப்பு காணப்படுகிறது. அதன் கீழே பைரவர், முப்பது முக்கோடி தேவர்கள் வணங்கியபடி நிற்கிறார்கள். கருவறையில் இயற்கையின் மூன்று சக்திகளான படைத்தல், காத்தல், அழித்தலை குறிக்கும் வண்ணம் மூன்று லிங்கங்கள் காணப்படுகின்றன. இவை ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவையாகும். இதன் மேல் செப்பு கவசம் சாத்தப்பட்டு இருக்கிறது. பக்தர்களை அதன் அருகில் உட்காரவைத்து பூஜை செய்கிறார்கள். இந்த லிங்கங்கள் மேல் நீர் கொட்டிக்கொண்டே இருப்பது விசேஷமானதாகும்.  அடுத்ததாக கழுத்தில் பாம்பை சுற்றிய படி ஜடா முடியுடன் சிவபெருமான் காட்சி தரு கிறார். சிவன், பார்வதியுடன் சொக்கட்டான் ஆடும் காட்சி காண்போரை மெய் சிலிர்க்க வைக்கிறது.

நம்பிக்கைகள்

இந்த ஆலயத்தில் உள்ள புவனேஷ்வரரை மனமுருக வேண்டிக்கொண்டால், நீடித்த ஆயுள், குறையாத செல்வம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. பாதாள புவனேஷ்வர் கோவிலில், சனிப் பிரதோஷம் மிகவும் விசேஷம் ஆகும். அன்றைய தினம் நந்தி வழிபாட்டில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்தால், மரணமடைந்த மூதாதையர்களுக்கு சிவபெருமான் சாந்தி அளிப்பதாக கூறப்படுகிறது. அப்படி அவர்களுக்கு சாந்தி கிடைத்தால், அவர்கள் மகிழ்ச்சியில் தங்களின் சந்ததியினரை ஆசீர்வதிக்கின்றனர் என்பது ஐதீகம்.

திருவிழாக்கள்

குகையின் ஒரு பகுதியில் கலி யுகத்தை குறிக்கும் சிவலிங்கம் உள்ளது. இது நாள் தோறும் வளர்கிறதாம். இதன் மேல் இருக்கும் கூம்பு, எப்பொழுது மலையை தொடுகிறதோ அப்பொழுது கலி யுகம் முடியும் என்பது நம்பிக்கை. மேலே அன்னாந்து பார்த்தால் ஆயிரம் கால்களுடன் ஐராவதம். இவ்வளவு அதிசயங்கள் எல்லாம் இயற்கையாகவே அமையப்பெற்றவை என்பதுதான், அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் விஷயம்.

காலம்

5000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI)

அருகிலுள்ள பேருந்து நிலையம்

குமா ஊன்

அருகிலுள்ள இரயில் நிலையம்

தனக்பூர்

அருகிலுள்ள விமான நிலையம்

பந்த்நகர்

Videos

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top