Wednesday Dec 18, 2024

பள்ளியறை பூஜையும் பலன்களும்!

சிவாலயங்களில் இரவு நேரத்தில் கோயில் நடை சாற்றப்படுவதற்கு முன் நடைபெறுகின்ற பூஜை பள்ளியறை பூஜை ஆகும். அதாவது. சுவாமியையும் அம்பாளையும் பள்ளியறையில் ஊஞ்சலில் ஒருசேர அமர வைத்து ஆராதனை செய்து தாலாட்டுப் பாடி பூஜிப்பது ஆகும். பள்ளியறை பூஜைக்கு பல்லக்கில் ஈசன் வலம் வரும்போது, சிவபுராணம், பதிகங்கள் பாடி வர வேண்டும். இதைத் தரிசித்தாலே வளமான வாழ்க்கையை நாம் அமைக்கின்றோம் என்று அர்த்தம்.

பள்ளியறை பூஜைக்கு பல்லக்கு தூக்கி ஈசனைச் சுமந்து வரும் பாக்கியம் எவருக்குக் கிட்டுகின்றதோ, அவர்கள் மறுபிறவியில் பொறியியல் வல்லுநர்களாகவும், பல மாடிக் கட்டடங்களுக்குச் சொந்தக்காரர்களாகவும், பல ஆயிரம் கோடி ரூபாய்களுக்கு அதிபதியாகவும் மாறுவார்கள் என்பது நம்பிகை. பள்ளியறை பூஜையில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்.

திங்கள்: திங்கட்கிழமை அன்று பள்ளியறை பூஜைக்குரிய பொருட்களை தானம் செய்து, அதில் கலந்து கொள்பவர்கள் அதன் பிறகு தங்களது வாழ்க்கையில் மகத்தான திட்டங்களை தங்கு தடையின்றி செயல்படுத்தி வெற்றி காண்பார்கள்.

செவ்வாய்: ஆயில்யம், கேட்டை, மூலம், பூராடம் நட்சத்திரங்களில் பிறந்த பெண்களுக்கு மிகவும் சிரமப்பட்டே வாழ்க்கைத் துணை அமையும். எனவே, இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஒரு வருடம் வரை தினமும் பள்ளியறை பூஜையில் கலந்துகொள்ள வேண்டும். ஆயில்யம் நட்சத்திரமும், செவ்வாய்க்கிழமையும் வரும் நாளன்று தமது வருமானத்தில் பள்ளியறை பூஜைக்குத் தேவையான பொருட்களை அன்பளிப்பாக தந்து, அவசியம் கலந்து கொள்ள வேண்டும்.

புதன்: அரசு மற்றும் தனியார் துறையில் பதவி உயர்வுக்குக் காத்திருப்பவர்கள் புதன் கிழமையன்று பள்ளியறை பூஜைக்குத் தேவையான பொருட்களை வாங்கித் தருவதோடு, கட்டாயம் அதில் கலந்து கொள்ள நன்மைகள் பலரும் பெருகும்.

வியாழன்: அனைத்து விதமான ஸித்திகளும் கிடைக்க பலர் பல பிறவிகளாக முயற்சி செய்து கொண்டே இருக்கின்றார்கள். அவர்கள் ஒரு வருடம் வரை தினமும் பள்ளியறை பூஜையில் கலந்து கொள்ள வேண்டும். மேலும், அனுஷம் நட்சத்திரமும் வியாழக்கிழமையும் வரும் நாட்களில் பள்ளியறை பூஜைக்குத் தேவையான பொருட்களை தம்மால் முடிந்த அளவுக்கு வாங்கித் தர வேண்டும். இந்த பூஜையில் கலந்து கொண்டு சுவாமியிடம் மனதார வேண்டிக்கொள்ள வேண்டும்.

வெள்ளி: கணவருக்கு பல காலம் தீராத நோய் இருந்தால் அது தீர, அவருடைய மனைவி, வெள்ளிக்கிழமைகளில் பள்ளியறை பூஜையை சிறப்பிக்க தம்மால் ஆன முயற்சியில் ஈடுபடவேண்டும்.

சனி: அற்புதமான வாரிசு மகனாகவோ அல்லது மகளாகவோ பெற விரும்பினால் சனிக்கிழமையன்று பள்ளியறை பூஜையில் கலந்து கொள்வதோடு, அதற்குத் தேவையான பொருட்களை வாங்கி தானமாகத் தரவேண்டும்.

ஞாயிற்றுக்கிழமை: பிரிந்த வாழ்க்கைத் துணை மீண்டும் சேரவும், காணாமல் போய் பல ஆண்டுகள் என்ன ஆனார்கள் என்பதை அறியவும், அவர்கள் திரும்பி வர மூன்றாண்டுகள் வரை தினமும் பள்ளியறை பூஜையில் கலந்து கொள்ள வேண்டும். அசுபதியும் ஞாயிற்றுக்கிழமையும் வரும் நாட்களில் பள்ளியறை பூஜைக்குத் தேவையான பூக்கள், பால், நைவேத்தியம் போன்றவற்றை தானமாக வாங்கித் தர வேண்டும்.

பள்ளியறை பூஜைக்கு எண்ணெய், நெய் செய்பவர்கள் அவர்களது அடுத்த பிறவியில் பல ஆயிரக்கணக்கானவர்களுக்கு கல்வி தரும் பாக்கியத்தைப் பெறுவார்கள். பள்ளியறை பூஜைக்கு பூக்கள் கட்டித் தருபவர்கள் மறுபிறவியில் அதிகமான சம்பளம் பெறும் வேலையில் சேருவர். அவர்களது மகன், மகள் மற்றும் பேரன், பேத்திகள் அதிக சம்பளம் பெறும் வேலையில் இருப்பர். குறைந்த பட்சம் ஐந்து ஆண்டுகள் வரை இப்படிச் செய்தால் மட்டுமே இந்தப் பலன் கிட்டும்.

பள்ளியறை பூஜைக்கு பால், நைவேத்தியங்கள் செய்து கொடுப்பவர்களும், பள்ளியறை பூஜை நிறைவடைந்த பின்னர், ஏழைகளுக்கு தானமாக நைவேத்தியத்தைத் தருபவர்களுக்கு ஒழுக்கமும் பக்தியும் நிறைந்த குழந்தைகள் இப்பிறவியிலும், மறுபிறவியிலும் பிறப்பார்கள்.

பள்ளியறை பூஜையில் கர்ப்பிணிப் பெண்கள் கலந்து கொண்டு, அதன் முடிவில் பசுவுக்கு பழங்கள் கொடுத்து வந்தால், சுகப்பிரசவம் ஏற்படும். நைவேத்தியப் பாலை பலருக்கும் தந்தால் அவர்களுக்கு வலியில்லாத பிரசவம் உண்டாகும். குழந்தை பிறக்கும் தருணத்தில் இறை சிந்தனை உண்டாகும்.

பள்ளியறை பூஜையிலும், அதன் நிறைவுப் பகுதியிலும் அன்னதானம் செய்பவர்கள் தொழிலில் அமோக வளர்ச்சியை அடைவர். பல மடங்கு லாபம் அவர்களைத் தேடி வரும். பள்ளியறை பூஜைக்கு எண்ணெய், நெய் தொடர்ந்து தருபவர்களுக்கு முதுமைக் காலத்தில் கண் சார்ந்த வியாதிகள் ஒருபோதும் வராது.

வெகு காலமாக திருமணம் நடக்காமல் இருக்கும் இளைஞர்களும், இளம் பெண்களும் இதில் கலந்து கொள்ள வேண்டும். ஒரு வருடத்துக்குக் குறையாமல் கலந்து கொள்வதன் மூலமாக அவர்களுக்கு இனிமையான மண வாழ்க்கை அமையும்.

வேலை அல்லது தொழில் செய்து வருபவர்கள் ஒரு வருடம் வரை தினமும் பள்ளியறை பூஜையை தரிசித்து வருவதன் மூலமாக மூன்றாவது நாளில் இருந்து அல்லது மூன்றாவது வாரத்தில் இருந்து வேலையில் மந்தம் விலகிவிடும். தொழிலில் படிப்படியான வளர்ச்சியைக் காணலாம்.

பள்ளியறை பூஜை நடைபெறாத ஆலயங்களில் பள்ளியறை கட்டுவதும், மீண்டும் பள்ளியறை பூஜையைத் துவங்குவதும் பெரும் புண்ணியத்தைத் தரும். யார் இதைச் செய்கின்றார்களோ, அவர்கள் மற்றும் அவர்களுடைய அடுத்த பதினான்கு தலைமுறையைச் சேர்ந்தவர்கள் இனிமையான இல்லறத்தை தமது வாழ்நாள் முழுவதும் பெறுவார்கள் என்று அகத்தியர் கூறியுள்ளார்.

Ref by: https://kalkionline.com/magazines/deepam/palliyarai-poojaiyum-palangalum

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top