Sunday Nov 24, 2024

பனங்காடி வீற்றிருந்த பெருமாள் திருக்கோயில், மதுரை

முகவரி :

பனங்காடி வீற்றிருந்த பெருமாள் திருக்கோயில்,

பனங்காடி,

மதுரை மாவட்டம் – 625106.

இறைவன்:

வீற்றிருந்த பெருமாள்

இறைவி:

ஸ்ரீதேவி, பூதேவி

அறிமுகம்:

 வீற்றிருந்த பெருமாள் என்ற திருநாமத்தோடு சேவை சாதிக்கும் திருத்தலம் மதுரை மாவட்டம் பனங்காடி. இவ்வூருக்கு ஆதியில் காரணப் பெயராக பனைங்காடி, பனங்குளம் என்ற பெயர்கள் இருந்துள்ளன. இடைக்காலப் பாண்டியர் ஆட்சி காலத்தில் அரபு நாடு என்ற உள்நாட்டு பிரிவில் இவ்வூர் அடங்கியிருந்தது. திருப்பணி கண்டு பல ஆண்டுகளாக ஆன நிலையில் இக்கோயில் உள்ளது.  மதுரை மாவட்டம் மேலூரில் இருந்து பனங்காடிக்கு நேரடி பேருந்து வசதி உள்ளது. பயண தூரம் 15கி.மீ. பேருந்து நிறுத்தத்திற்கு அருகிலேயே கோயில் அமைந்துள்ளது.

புராண முக்கியத்துவம் :

       கி.பி.பத்தாம் நூற்றாண்டில் பாண்டிய நாடு சோழர்களின் ஆதிக்கத்தின் கீழ் வந்தது அவ்வேளையில் ஊரின் மேற்குப் பக்கமாக திருமாலுக்கு திருக்கோயில் ஒன்றை கற்றளியாக எழுப்பினர். அந்த ஆலயத்திற்கு உத்தம சோழ விண்ணகரம் என்ற பெயரைச் சூட்டி நால்வகை வேதங்களைக் கற்றுத் தெளிந்த அந்தணருக்கு இப்பகுதியை அளித்தனர். பின்னர் இராஜேந்திர சோழ சதுர்வேதி மங்கலம் என்று பெயர் சூட்டப்பட்டது.

பெருமாள் கோயில் சோழர் காலத்தில் கட்டப்பட்டு, பிற்கால பாண்டியர் காலத்தில் திருத்தி அமைக்கப்பட்டது. மூலவர் விமானம் சோழர் கலைப்பாணியில் பெரிய அளவில் சுதை கட்டுமானத்தில் கட்டப்பட்டுள்ளது. முதலாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன், முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் ஆகியோர் அளித்த பல தர்மங்களில் விவரங்கள் இங்குள்ள கல்வெட்டுகளில் உள்ளன.

சிறப்பு அம்சங்கள்:

தோரண வாசலில் உள்ள எழிலுற அமைந்துள்ளது. கோயில் வாசல் எதிரே கல்வெட்டு ஒன்று உள்ளது. பிரதான வாசல் தாண்டியதும் தெற்குச் சுற்றில் விநாயகர் சன்னதியும் வடக்குச் சுற்றில் நந்தவனமும் காட்சியளிக்கிறது. தலவிருட்சம் வில்வம். சுற்றி பெரிய திருவடி மண்டபம் உள்ளது. மகா மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை என்ற அமைப்பில் கோயில் அமைந்துள்ளது. மகாமண்டபத்தில் சிறிய திருவடி விக்ரமும் ஆதி பெருமாள் விக்ரகம் உள்ளது. உபய நாச்சியார்களுடன் இல்லாத குறையை போக்க ஒருகட்டத்தில் புதியதாக பூதேவி ஸ்ரீதேவி சமதே வீற்றிருந்த பெருமாளுக்கு சிலை செய்து கருவறையில் மூலவராக பிரதிஷ்டை செய்து வழிபட்டு வருகின்றனர்.

மூலவரை வலம் வந்து சேர்க்கும் வண்ணம் மிக நூதனமாக பிரணவ பிரகாரத்தை வடிவமைத்துள்ளனர். இதுபோன்ற அம்சம் பெருங்குளம் சாயல்குடி ஆகிய கோயில்களிலும் உள்ளன. கருவறையை வலம் வரும் இவர்களின் வசதிக்காக மேற்கு வடக்கு தெற்கு சுவர்களில் சாளரங்களை அமைத்துள்ளனர்.

கோயிலின் தென்புறம் தாமரைக் குளம் உள்ளது. இதுவே கோயிலின் தீர்த்தம் ஆகும் ஊரில் நடைபெறும் சகல காரியங்களுக்கும் தீர்த்தத்தையும் பெருமாள் கோயில் அபிஷேக தீர்த்தத்தை எடுத்து சென்று அதன் பிறகு காரியங்களை துவக்குவது காலம் காலமாக மக்களிடையே உள்ள மரபு.

திருவிழாக்கள்:

        தினமும் மூன்று கால பூஜை நடைபெறுகிறது. ஆண்டு முழுவதும் இங்கே அணைத்து விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. இரண்டு நாள் விழாவாக நடத்தப்படும் கிருஷ்ண ஜெயந்தியில் ஒரு நாள் நாடகம் நடத்தப்படும். புரட்டாசி சனிக்கிழமைகளில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரம் மற்றும் அன்னதானம் நடக்கும். ஆடிப்பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு இத்தலப்பெருமாளை சேவித்து, அழகர்கோவில் மலை உச்சியில் நூபுரகங்கையில் தீர்த்தமாடிவிட்டு வருவது இவ்வூர் மக்களின் வழக்கம். கார்த்திகையில் மகாதீபம், மார்கழி முழுக்க திருப்பள்ளியெழுச்சி, தைப்பொங்கல் விழாவை முன்னிட்டு விசேஷ ஆராதனைகள் நடத்தப்படுகின்றன.

காலம்

கி.பி.பத்தாம் நூற்றாண்டு

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

பனங்காடி

அருகிலுள்ள இரயில் நிலையம்

மதுரை

அருகிலுள்ள விமான நிலையம்

மதுரை

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top