பந்தியாய் சிரே சிவன் கோயில், கம்போடியா
முகவரி
பந்தியாய் சிரே சிவன் கோயில், அங்கோர் தொல்பொருள் பூங்கா, சீம்ரீப் – 17000, கம்போடியா
இறைவன்
இறைவன்: சிவன்
அறிமுகம்
பந்தியாய் சிரே என்பது, கம்போடியாவில் அமைந்துள்ள, பத்தாம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட சிவாலயம் ஆகும். கம்போடியாவின் பண்டைய தலைநகர்களான யசோதரபுரம் மற்றும் அங்கோர் தாம் என்பவற்றின் அருகே புகழ்பெற்ற அங்கோர் வாட்டிற்கு சற்று அப்பால் அமைந்து விளங்குகின்றது. உயர்தரமான சிற்பங்களும், கலைவனப்பும் நிறைந்த இக்கோயில், இன்றும் சுற்றுலாப்பயணிகளைப் பெருமளவில் கவர்வதுடன், “கெமெர் கலையின் மாணிக்கம்” என்று புகழப்படுகின்றது. கம்போடிய மன்னர்களால் கட்டப்படாத மாபெரும் ஆலயமாகக் கொள்ளப்படும் பந்தியாய் சிரே, பொ.பி 22 ஏப்ரல் 967 அன்று, மன்னன் இராஜேந்திர வருமனின் அரசவை அறிஞர்களான விஷ்ணுகுமாரன் மற்றும் மன்னன் ஹர்ஷவருமனின் பேரனும் ஏழை – எளியோர்க்குப் பேருதவிகள் புரிந்தவனும் ஆன யஞ்னவராகன் ஆகியோரால் கட்டப்பட்டது. பந்தியாய் சிரே ஆலயம் அமைந்திருந்த நகர் முன்பு “ஈசுவரபுரம்” என்றே அறியப்பட்டதுடன், இக்கோயில் “திரிபுவனமகேசுவரம்” என்றே அழைக்கப்பட்டிருக்கின்றது. மரத்தைச் செதுக்குவது போல், செதுக்கக்கூடிய[17] மணற்கற்களால் அமைக்கப்பட்டிருப்பதால், இக்கோவிலுக்கே தனிச்சிறப்பான வசீகரம் ஒன்றுண்டு. சுண்ணமும் செங்கல்லும், சில தாங்குதளங்கள் அமைக்க மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. காலத்தைக் குறிக்கும் காலன், கோயில் துவாரபாலகர், அரமகளிர் முதலானவை, இகோயிலின் சிற்பக்கலையழகுக்கான சிறப்பான எடுத்துக்காட்டுகள்.
புராண முக்கியத்துவம்
கிழக்கு நோக்கிய மூன்று செவ்வக வடிவ வளாகங்கள், மூன்று திருச்சுற்றுக்களால் சூழப்பட்டதாக, ஒரு இராசகோபுரத்தின் வாயிலாக இணையும் வண்ணம் அமைக்கப்பட்டிருக்கின்றன. உள்ச்சுற்றில் கருவறையும், மூன்று விமானங்களும் அமைந்துள்ளன. இருபுறமுள்ள இருவிமான அறைகள், கம்போடிய மரபின் படி, நூலகங்களாகச் சொல்லப்படுகின்றன. ஐநூறு சதுர மீ. பரப்பளவில் இருந்த “ஈசுவரபுரம்” எனும் நகருக்கு வாயிலாக இருந்த பெருங்கோபுரம் இது. ஐராவதம் மீது இந்திரன் அமர்ந்திருக்கும் சிற்பத்தை முகப்பில் கொண்ட இக்கோபுரத்திலிருந்து செல்லும் 67 மீ நீளமான இராசபாதை, உட்சுற்றுடன் இணைகின்றது. கிழக்கு வாயில் அலங்காரம், சீதையை இராவணன் கவரும் காட்சியுடன், தரையில் சிதைந்து கிடக்கின்றது. கிழக்கும் மேற்கும் இரு பாலங்களால் இணைக்கப்பட்டு, இம்மூன்றாம் சுற்று, பெரும்பாலும் அகழியால் சூழப்பட்டதாகக் காணப்படுகின்றது. கீழைக்கோபுரத்திலேயே, ஆடல்வல்லான் சிற்பமும், அதனருகே காரைக்காலம்மை சிற்பமும் அமைக்கப்பட்டுள்ளது. சிதைந்துள்ள இதன் உள் – வெளிச் சுவர்க்கோட்டங்களில் ஒன்றில், நரசிங்கர் இரணியனைக் கொல்லும் சிற்பம் இடம்பெற்றிருக்கின்றது. கோபுரங்களுக்கிடையே சிதைந்த உட்சுவருக்குள் உள்ள முதலாம் சுற்றின் தென்கிழக்கு மற்றும் வடகிழக்கு மூலைகளில், இரு நூலகங்கள் அமைந்துள்ளன. தென்புற நூலகத்தின் கீழைவாயிற்சிற்பமாக ஈசனின் கயிலைக் காட்சியும், இராவணன் கயிலையைப் பெயர்க்கும் காட்சியும் இணைந்த அழகிய சிற்பம் ஒன்றுள்ளது. மேலைவாயிற்சிற்பத்தில் காமதகனச் சிற்பம் அமைந்துள்ளது. வடபுற நூலகத்தின் கீழைவாயிற் சிற்பத்தில், காண்டவவன தகனம் காட்டப்பட்டிருக்கின்றது. அதே நூலகததின் மேற்கு வாயிலில் கம்சவதம் இடம்பெறுகின்றது. மத்தியில், பந்தியா சிரேயின் பேரெ்ழிற் சிற்பங்கள் நிறைந்த ஈசனின் கருவறை அமைந்து விளங்குகின்றது. எனினும், இடிபாடுகளின் காரணமாக, இதன் உட்பகுதிக்குச் செல்ல அனுமதியில்லை.
காலம்
10 ஆம் நூற்றாண்டு
நிர்வகிக்கப்படுகிறது
யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளம்
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பந்தியாய் சிரே
அருகிலுள்ள இரயில் நிலையம்
சீம்ரீப்
அருகிலுள்ள விமான நிலையம்
சீம்ரீப்